நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - தேசியச் சின்னங்களும் தேசியப் பாடல்களும்
சுதந்திரத்தைக் கற்பகச் செடியாக வளர்த்து அதனைக் காயவும் கருகவும் விடாமல் இருக்க சபதம் செய்ய வேண்டும் எனவும், நாம் பெற்றுள்ள சுதந்திரம் காந்தியடிகளின் ராமராஜிய கொள்கையைக் கடைப்பிடிப்பதால் நிலைக்கும் எனவும், மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ முயன்றால் அதுவே குடியரசின் ஆக்கம் காக்க வழியாகும் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக தேசியச் சின்னங்களும் தேசியப் பாடல்களும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- தேசியக் கொடி
- மூவர்ணக்கொடி
- சுதந்திரக்கொடி
- தேசிய கீதம்
தேசியக் கொடி:
இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் சுதந்திரத்தைக் காட்டும் சின்னங்களாக தேசியக் கொடியும், தேசிய கீதமும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இச்சின்னங்கள் இந்தியர்களின் ஒருமைப்பாட்டையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கும் சின்னங்களாகக் கருதப்பட்டன. இச்சின்னங்கள் விடுதலைப்போரில் மக்களை விழிப்படையச் செய்த தூண்டு சக்திகளாகும் என்பதை மறுக்க முடியாது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை இந்தியா முழுமைக்கான ஒரு தேசியக்கொடி இருந்ததாகத் தெரியவில்லை. 1907-ஆம் ஆண்டின் ஜெர்மனியில் ‘டைட்கார்ட்’ என்ற நகரில் நடைபெற்ற சர்வதேச சோசலிச மாநாட்டில் இந்தியாவிற்கென்று ஒரு பொதுவான கொடி இல்லாததை உணர்ந்த மேடம் காமா என்ற பெண்மணி தன் புடவையின் ஒரு பகுதியை கிழித்து அம்மாநாட்டில் இந்தியாவின் கொடியாகப் பறக்கவிட்டார். இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதற்குமான ஒரு கொடி இருந்ததை பாரதியார் எழுதிய ‘மாதாவின் துவஜம்’(1) என்ற பாடல் தெளிவாக்குகிறது.
மூவர்ணக்கொடி:
1927-இல் ஒரு மூவர்ணக்கொடி தோன்றியது. அக்கொடி ராட்டையை நடுவில் கொண்ட கொடியாக மாற்றப்பட்டு இந்தியாவின் சுதந்திரக் கொடியாக ஜவஹர்லால் நேரு லாகூரில் பறக்கவிட்டார்(2). 1931-ஆம் ஆண்டு வரை இக்கொடி காங்கிரஸ் மாநாடுகளில் பயன்படுத்தப்பட்டாலும் 1931-இல் தான் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இக்கொடியைக் காங்கிரஸ் கொடியாக ஏற்றுக் கொண்டது. 1931-ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி ‘தேசியக்கொடி நாளாக’ நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இக்கொடியே நாடு சுதந்திரம் அடையும் வரை தேசியக் கொடியாக கருதப்பட்டது. இக்கொடியின் பெருமையை ‘சாந்தி தரும் கொடி’(3) என்ற பாடலில் வெளிப்படுத்திக் காட்டுகிறார் நாமக்கல் கவிஞர். இக்கொடியை காந்திய வழியில் போற்ற வேண்டும் என்பதனை,
“கொடியை ஏற்றுவோம் - காந்தி
அடியைப் போற்றுவோம் - நாளும்
கூடியே வந்தே மாதரம் கோஷம் வாழ்த்துவோம்”
என்ற பாடல் மூலம் நடராஜப்பிள்ளையும் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.
சுதந்திரம் அடைவது வரை மக்களின் விடுதலைச் சின்னமாக இருந்த ராட்டையை நடுவில் கொண்ட மூவர்ணக்கொடி 1917-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவின் தலைமையில் கூடிய அரசியல் நிர்ணய சபையில் அசோக சக்கரம் நடுவில் அமைந்த மூவர்ணக் கொடியாக மாற்றப்பட்டது. இந்திய மக்கள் அனைவருக்கும் இக்கொடி பொதுவான ‘தேசியக்கொடி’ என அறிவிக்கப்பட்டது.
சுதந்திரக்கொடி:
சுதந்திரம் அடைந்த பிறகு தேசியக் கொடியின் சிறப்பையும், அக்கொடியைக் காத்த தேசபக்தர்களையும் வெளிப்படுத்திக் காட்டும் நிலையும் தேசியக் கவிஞர்களிடம் இருந்ததை உணரமுடிகிறது. ‘தேசியக் கொடியின் சிறப்பு’(4), ‘சுதந்திரக்கொடி’(5), என்ற இரு பாடல்களில் தேசியக் கொடியை வெளிப்படுத்திக் காட்டுகிறார் கவிமணி.
தேசியக்கொடியைப் போற்றி கும்பிட்டால் அச்சம் நீங்கி, ஆண்மை உண்டாகி இன்பம் உண்டாகும். மரபையும் நீங்கி தியாகம் செய்யத் தூண்டும். ஒற்றுமையில்லாத மக்களை அன்பினால் ஒற்றுமைப்படுத்தும். நமது கொடுமைகள் அனைத்தும் தீரும் என்பதை விளக்குவதாக ‘கொடியை போற்றிக் கும்பிடுக’(6) என்ற பாடலை நாமக்கல் கவிஞர் வெளிப்படுத்தி மக்களை வணங்கும்படி தூண்டியதையும் பார்க்க முடிகிறது.
இக்கொடி அச்சம், பயம், வஞ்சனை இவற்றை நீக்கி, வீரம், ஒற்றுமை ஆகியவற்றை வளர்த்திடும் இயல்புடையது என்கிறார் டி.ஆர்.விஸ்வநாத சாஸ்திரி. சுதந்திரம் வளர்த்ததும், சுயநலமற்றதும் தர்மங்கள் அனைத்தும் தழைத்திடச் செய்ததும் சத்தியம் என்றும் படிப்பினை தந்ததும், பாரதத் தேசத்தின் சின்னமாக இருப்பதும் இக்கொடியே. இக்கொடியை பணிந்து வணங்கும்படி மக்களை அழைக்கிறார் ஜே.தங்கவேலு.
தேசிய கீதம் :
சிறை கிடந்த தேச பக்தர்களாலும், தெய்வ பக்தர்களாலும் உருவாக்கப்பட்ட இக்கொடியை எத்தகைய துன்பம் வரினும் காக்க வேண்டும் என்கிறார் நாமக்கல் கவிஞர்(7). உடலில் ஒரு துளி இரத்தம் உள்ள வரையில் எந்தாய் வாழ்கவென்று இந்த கொடியை ஏந்திப் பிடித்திடுவோம். போர் புயல்வரினும், பூகம்பப் புரட்சிகள் வரினும், இதனை காத்தல் நமது கடமையாகும் என்ற சுத்தானந்த பாரதியாரும் கவிதைகளைப் பாடி கொடியைக் காக்க முயன்றதைக் காண முடிகிறது.
கவிதையும், இசையும் நாட்டின் ஒற்றுமைக்கு இரு கண்களாக விளங்குகின்றன. இசையால் உருவான கவிதையே பெரும்பாலான நாடுகளில் தேசிய கீதமாகப் போற்றப்பட்டு வருகின்றது. தேசிய கீதம் நாட்டின் ஒற்றுமையுணர்வையும், சுதந்திர உணர்வையும் ஏற்படுத்தும் கருவிகளாக விளங்குகின்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முன்பே பிரிட்டன், ஸ்பெயின், ஹாலந்து, போலந்து, ஸ்காட்லாந்து, ஜெர்மன், பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகள் தேசிய கீதத்தைப் பெற்றிருந்தன. மற்ற நாடுகள் அதன் பிறகு தான் தேசிய கீதத்தை உருவாக்கின(8). இந்தியாவில் இருபதாம் நூற்றாண்டில் தான் தேசிய கீதம் உருவாகியது.
அடுத்த வலைப்பதிவில் தேசியச் சின்னங்களும் தேசியப் பாடல்களும் பற்றியும், நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணியின் மீள்பார்வையையும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. பாரதியார் கவிதைகள், பக்.154-155.
2. Mahajan, Leaders of Nationalist Movement, p.286.
3. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.151-152.
4. தேசிக விநாயகம்பிள்ளை, மலரும் மாலையும், பக்.181-183.
5. தேசிக விநாயகம்பிள்ளை, தே.வி.யின் கீர்த்தனங்கள், பக்.86-87.
6. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.379-380.
7. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.381.
8. மா.பொ. சிவஞானம், வந்தே மாதரம், ப.6.
Sponsorship




0 கருத்துகள்