நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகள் - நாட்டின் இழிவுநிலை, கற்பனை உணர்வு, ஆகாய விமானம்
அன்பையும் அறத்தையுமே நம்பி வாழ்ந்த இந்தியர்களுக்குச் சாபமென வந்த ஆங்கிலப் பகையை அகற்ற சக்தி, சித்தி, ஆயுதபலம் ஆகிய மூன்றையும் தருக எனப் பரமனிடமும், மடமை, அடிமை, வறுமை போன்றவற்றால் வாடும் மக்கள் விடுதலை பெற்று குடியரசு அமைத்திடவேண்டும் எனக் காளியிடமும் முறையீடு செய்கிறார் சுத்தானந்த பாரதியார் என முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகளில் நாட்டின் இழிவுநிலை பற்றியும், கற்பனை உணர்வு பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- நாட்டின் இழிவுநிலை
- கற்பனை உணர்வு
- ஆகாய விமானம்
நாட்டின் இழிவுநிலை:
இந்திய மக்களிடையே இயல்பாகக் காணப்படும் மூடப் பழக்கவழக்கங்கள், தீண்டாமை, பெண்ணடிமை, சாதி சமய வேறுபாடுகள், அச்ச உணர்வு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, அறியாமை போன்ற இழி நிலைகளையும், ஆங்கிலேயர்களால் இந்தியர்கள் அடைந்த வறுமை, பஞ்சம், நோய், வரி ஏய்ப்பு, சிறைத்தண்டனை, கோயில் குளங்கள் போன்றவற்றை அழித்தல், பெண்கள் குழந்தைகள் போன்றவர்களைக் கொலை புரிதல் போன்ற இழிச் செயல்களையும் நன்குணர்ந்த கவிஞர்கள் இந்நிலையை அகற்றினால் இந்தியா விடுதலை பெறும் என்று உணர்ந்தனர்.
இந்திய நாட்டின் பழமைச் சிறப்பை இந்தியத்தாயை இழிவுநிலைகளுடன் ஒப்பிட்டுக் காட்டி மக்களிடையே விடுதலை உணர்வை வளர்ப்பதாகப் பாரதியாரும்(1), பழனிவேலுவும் தம் உள்ள உணர்வைப் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியாவின் அடிமைநிலையைப் போக்க முயலாமல் வேதம் படித்துக் கொண்டும், சோற்றுக்காகச் சங்கரனை வழிபாடு செய்துகொண்டும், காந்தியின் அகிம்சையைக் கதையாக பேசிப் பிழைக்கும் இழிவு நிலைகளை நையாண்டியாகப் படைத்துக்காட்டுகிறார் புதுமைப்பித்தன்.
இந்தியர்களின் இழிவுநிலைகளை வெளிப்படுத்தி விரும்பிய பாரதியார்(2),
“நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே”
என்ற பாடலாகப் படைத்துக் காட்டியுள்ளதையும் காணமுடிகிறது. பாரதியைப் பின்பற்றி கவிதை பாடிய பாரதிதாசன், திரு.வி.க(3)., ஜீவானந்தம்(4) போன்ற கவிஞர்கள் தீண்டாமை, கடவுள் பக்தி, சாதி வேறுபாடு, பெண்ணடிமை, உயர்வு தாழ்வு மனப்பான்மை போன்ற இழிவுநிலைகளை முதலில் அகற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர். இம்முடிவு அவர்களுக்குச் சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தாலே ஏற்பட்டது. சமுதாயச் சீர்திருத்தமே சுதந்திரம் பெறுவதற்கான முதல் தொண்டு என்று சுயமரியாதை இயக்கத்தினர் கருதியதை அவ்வியக்கத்தைச் சேர்ந்த கவிஞர்களிடமும் வெளிப்பட்டிருப்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
கற்பனை உணர்வு:
கற்பனை என்பது எல்லா மனிதர்களிடமும் தோன்றும் இயல்பான உணர்வாகும். சிலர் வாழ்க்கையைக் கற்பனையாகக் காண்பர். சிலர் இயற்கையைக் கற்பனையாகக் காண்பர். சிலர் மனதில் கடவுளையே கற்பனையாகக் காண்பர். நாட்டுப்பற்றைக் கற்பனையாகத் தம் கவிதைகளில் வெளிப்படுத்திக்காட்டும் ஆற்றல் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களிடம் வெளிப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காண முடிகிறது.
பாரதநாட்டைப் பாரதத் தாயாகக் கற்பனை செய்து, அவள் அடிமை இருளில் தூங்குவதாகவும், அவ்வடிமை இருளை அகற்ற பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பாரதத்தாயைத் துயிலெழுப்புவதாகவும் படைத்துக்காட்டுகிறார் பாரதியார்(5).
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு ஆரம்பத்தில் எப்படி வந்தார்கள் என்பதையும், பின்பு எவ்வாறு இந்தியாவை அடிமையாக்கினார்கள் என்பதையும் வெளிப்படுத்திக் காட்டி, ஆங்கிலேயர்களுடைய பொருளிலும் நாகரிகத்திலும் ஈடுபாடு கொண்ட இந்திய மக்கள் என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்றும், நான் சொன்னபடி கேட்பதில்லை என்றும், என்னைக் காலால் உதைக்கின்றனர் என்றும் புலம்புகிறாள். அறியாமையினால் அடிமை மயக்கினால் மக்கள் சண்டையிட்டுத் திரிவதைக் கண்டும் இந்தியத்தாய் புலம்புவதாகக் கற்பனை செய்துள்ளார் நாமக்கல் கவிஞர்(6).
ஆகாய விமானம்:
புத்தாண்டுப் பிறப்பன்று புத்துணர்ச்சியுடன் திகழும் தமிழகத்தாயிடம், இந்திய நாட்டின் அனைத்துத் துன்பங்களும் நீங்கி புண்ணிய வாழ்வு பெற விடுதலையை வேண்டுவதாகவும், அவ்வேண்டுதலுக்கிணங்கித் தமிழகத்தாய், என்னுடைய நாடு என்று நீ சொல்லியதைக் கேட்டு இன்னல் மறந்து புத்தொளி பூண்டுவிட்டேன். உன்னுடைய மனத்தில் சத்தியம் உதித்தால் வஞ்சமும் மோகமும் தொலையும். நீ சிறிதும் கவலை கொள்ளவேண்டாம். காந்தி மகானின் அருளால் சாந்தி உண்டாகி சங்கடம் தொலையும். இனி தேசம் செழிப்படையும் மகனே! எழுந்திரடா! என்று தமிழகத்தாய் வரம் கொடுப்பதாகவும் படைத்துக் காட்டுகிறார் நாமக்கல் கவிஞர்(7).
இந்திய மக்களின் துயரத்தைப் போக்க சக்தியே சூலமும் வாளும் கொண்டு போருக்குச் செல்வதாக,
“கையினில் சூலமும் வாளும் ஏந்தி – சக்தி எழுந்திட்டாள்
பாரதனே இனி அஞ்சவேண்டாம்
புதுயுகம் கண்டிடுவோம்”
என்ற கற்பனைப் பாடல் மூலம் இந்தியர்களிடையே ஆறுதல் உணர்வையும், வீர உணர்வையும் வளர்க்கும் நிலை கவிதைகளில் வெளிப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
நன்மை செய்ய வந்த என்னைப் போரில் ஈடுபடுத்தித் தீவினை செய்யவும், அன்பை அழித்து உலகத்தை சுட்டுப் பொசுக்கவும் தினமும் ஏவுகின்றார். காட்டில் வாழும் அறிவற்ற ஓநாயும் நரியும் கருவாயும் புலியும் நாட்டு நாகரிகம் கண்டு நகைக்கிறது. இந்நிலைகள் மாற காந்தியின் அகிம்சை நெறி வெற்றியடைவது எந்நாளோ? என்று ஆகாய விமானம் வருந்திக் கூறுவதாகக் கற்பனை செய்கிறார் கவிமணி(8).
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகளில் கற்பனை உணர்வு பற்றி மேலும் சில தகவல்களையும், இளைஞர்களிடம் விடுதலை உணர்வைத் தூண்டுதல் பற்றியும், பறவைகள் மூலம் விடுதலை உணர்வை வெளிப்படுத்துதல் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
2. பாரதியார் கவிதைகள், பக்.155-157.
3. திரு.வி.க., உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல், ப.17.
4. ப.ஜீவானந்தம், ஜீவாவின் பாடல்கள், ப.103.
5. பாரதியார் கவிதைகள், பக்.146-147.
6. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.123-130.
7. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.433-436.
8. தேசிக விநாயகம்பிள்ளை, மலரும் மாலையும், பக்.89-90.
Sponsorship




0 கருத்துகள்