இந்திய நாட்டுப்பற்று - பகுதி 76: நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள்- 16: விளக்குமுறை உத்திகள் - உருவக விளக்குமுறை

 நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கவிஞர்கள் கையாண்ட உத்திகள் - நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள்- 16: விளக்குமுறை உத்திகள் - உருவக விளக்குமுறை

விளங்காத பொருளை விளக்குவதற்கு உவமைகள் சிறந்த சாதனமாக பயன்படுத்தப்படுகின்றன. விடுதலை உணர்வைத் தூண்டும் பாடல்களை மக்கள் எளிதில் புரிந்துகொள்ள கவிஞர்கள் உவமைகளை பாடல்களில் பயன்படுத்தியுள்ளனர் எனவும், உவமையும் பொருளும் வேறுபாடு இல்லாமல் ஒன்றோடொன்று இணைந்து, பொருளைத் தொடர்ந்து உவமை வருவது உருவகம் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் விளக்குமுறை உத்தியில் உள்ள உருவக விளக்குமுறை பற்றிய சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம் 

  • கருணைக் கடவுள் 
  • பாரத மாதாவைப் பள்ளியெழுப்புதல்
  • தேசியக்கப்பல்
  • சுதந்திரப் பொங்கல் 

கருணைக் கடவுள்:

தியாகராச செட்டியார் காந்தியடிகளைக் கொக்காக உருவகம் செய்து, அக்கொக்கு கோபம் கொள்ளாதது என்றும், சாதுவானது என்றும், ஒத்துழையாமை தர்மத்தை ஓங்கச் செய்த கொக்கு என்றும், உலகமெல்லாம் புகழ்ந்திடவே ஓதும் ஜெய கொக்கு என்றும் காந்தியை உருவகப் பொருளாக்கியுள்ளதையும் பார்க்க முடிகிறது.

காந்தியடிகளை அமுதமாகவும், கருணைக் கடவுளாகவும், காதற்கனியாகவும், மணியாகவும், மாலையாகவும் உருவகம் செய்கிறார் ராய.சொக்கலிங்கம்(1). காந்தியைக் கடவுளாகவும், பேரொளியாகவும், வான்முகிலாகவும், வேதமாகவும், நெருப்பாகவும், உருவகம் செய்கிறார் நாமக்கல் கவிஞர்(2).

காந்தியடிகளைப் புண்ணிய நாட்டில் மின்பூரணச் சந்திரனாக ஆறுமுக கிணக்கரும், முருகனாக விசுவநாததாசும் உருவகப்படுத்தியுள்ளதையும் காணமுடிகிறது.

பாரத மாதாவைப் பள்ளியெழுப்புதல்:

முதன் முதலில் இந்தியாவைத் தாயாக கவிதைகளில் வெளிப்படுத்திக் காட்டியவர் பங்கிம் சந்திரர் என்றே கூறலாம். இவர் எழுதிய ‘வந்தே மாதரம்’ என்ற பாடலைப் பின்பற்றியே மாதவையா, நாமக்கல் கவிஞர்(3), பாரதியார்(4), அப்புஸ்வாமி அய்யர் போன்றோர் இந்தியாவைத் தாயாக உருவகம் செய்யும் நிலையைத் தமது பாடல்களில் வெளிப்படுத்தினர்.

சுதேசியத்தைக் கோழியாகவும், சுயாட்சியைச் சூரியனாகவும் உருவகம் செய்து பாரத மாதாவைப் பள்ளியெழுப்புவதாகப் பாடுகிறார் கவிக்குஞ்சரம். காதல் உணர்வு மூலம் ராட்டினத்தின் சிறப்பை வெளிப்படுத்த விரும்பிய பாரதிதாசன்(5) ராட்டினத்தைப் பெண்ணாகவும், அதைச் சுற்றுகின்றவர்களைக் காதலர்களாகவும் உருவகம் செய்துள்ளதையும் காணமுடிகிறது.

தேசியக்கப்பல்:

இந்திய தேசியக் காங்கிரசைத் தாயாக உருவகம் செய்து, அவள் பெற்ற மக்களே தேச பக்தர்களான காந்தி, திலகர், கோகலே, மோதிலால் நேரு, வல்லபாய் படேல், பாரதி, லாலா லஜபதிராய், சத்தியமூர்த்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்கள் என்கிறார் அன்புவளவன். காங்கிரசைக் கப்பலாக கவிமணியும்(6), கீதையாகப் பரம அம்ச சுப்பிரமணிய பிரம்ம சுவாமியும், உருவகம் செய்துள்ளனர்.


இந்தியர்கள் அனைவரும் விடுதலை உணர்வு பெறவேண்டும் என்று கருதிய பாரதிதாசன் தேசியத்தையே கப்பலாக உருவகம் செய்துள்ளதை அவருடைய ‘தேசியக்கப்பல்’ என்ற பாடல் உணர்த்துகிறது. இப்பாடலில் இமயமலையையும், குமரி முனையையும் கப்பலின் இரு முனைகளாகவும், மேற்கு கிழக்குத் தொடர்ச்சி மலைகளைக் கப்பலின் இரண்டு பக்கங்களாகவும், இமயமலைச் சிகரத்தின் கப்பலின் கொடிக் கம்பமாகவும், சிகரத்தின் மீதுள்ள மேகத்தை கப்பலின் கொடியாகவும், இந்திய மக்களின் உறுதியை கப்பலின் பாயாகவும், மக்களின் உணர்வைக் கப்பலின் சுக்கானாகவும், மக்களின் பேதத்தைக் காற்றாகவும் உருவகம் செய்துள்ள முறை அவருடைய தேசபக்தியின் உச்சநிலையைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்து-முஸ்லீம் வேறுபாட்டை நோயாகவும், அந்நோயால் ஏற்பட்ட மதவெறியைப் புயலாகவும், அப்புயலைத் தடுக்கவந்த காந்தியைக் கடற்கரையாகவும், அப்புயலைத் தடுக்க முடியாத காந்தியாகிய கடற்கரை இறுதியில் இந்தியாவாகிய சிசுவை இரு துண்டாக வெட்டுவதாகவும் உருவகப் பாடல்கள் மூலம் மதவெறியால் ‘இந்தியா’, ‘பாகிஸ்தான்’ என்ற இருவேறு நாடுகள் உருப்பெற்றதைக் கவிஞர்கள் தெளிவாகக் காட்டியுள்ளனர்.

சுதந்திரப் பொங்கல்:

அச்சத்தைப் பேயாகவும், அடிமையை விலங்காகவும், அவ்வடிமைநிலை தீர சுதந்திரச் சூரியன் உதயமாகிவிட்டான். சுதந்திரப் பொங்கலைச் சமைப்போம். அது கற்பகச்செடியாக அனைவருக்கும் பயன்படவேண்டும் என்றும், சுதந்திரத்தின் பெருமையை உருவகப் பாடலாக அமைத்துக்காட்டுகிறார் நாமக்கல் கவிஞர்(7).

சுதந்திரத்தைப் பெண்ணாக உருவகம் செய்து ‘சுதந்திர தேவி’ என அழைத்தனர் பாரதியார்(8), நாமக்கல் கவிஞர்(9) போன்றவர்கள். சுதந்திரத்தைச் சோதியாகவும், அமுதமாகவும், வெள்ளமாகவும், சங்காகவும், தெய்வமாகவும், பயிராகவும், பேரிகையாகவும், திலகமாகவும், கவிஞர்கள் உருவகம் செய்துள்ளதையும் காணமுடிகிறது.

இந்திய நாடு சுதந்திரம் அடைந்ததை,

 “நாட்டுரிமை எனும் ஞாயிறு தோன்றிற்று

 நம்மை சூழும் அடிமை இருள் நீங்கிற்று”

என்ற உருவகப் பாடல் மூலம் வெளிப்படுத்திக் காட்டுகிறார் அருணகிரிநாதர்.

உருவம் சார்ந்த உத்திகள் மூலம் கவிஞர்கள் விடுதலை உணர்வை வெளிப்படுத்திக் காட்டி மக்களைத் தூண்ட முயன்றுள்ளதை மேலே காட்டி பாடல் சான்றுகள் தெளிவாக்குகின்றன.

அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகள் பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி!

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்

அடிக்குறிப்புகள்

1. ராய. சொக்கலிங்கம், காந்தி கவிதை, பக்.12, 180-181, 222-224.

2. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.54-55, 79-82, 237, 256-257.

3. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.123.

4. பாரதியார் கவிதைகள், பக்.142-154.

5. பாரதிதாசன் கவிதைகள், தொகுதி-4, ப.214.

6. தேசிகவிநாயகம்பிள்ளை, மலரும் மாலையும், பக்.183-184.

7. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.234-237,268.

8. பாரதியார் கவிதைகள், ப.178.

9. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.135.


Sponsorship 

This Content Sponsored by SBO Digital Marketing.

Mobile-Based Part-Time Job Opportunity by SBO!

Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:

Job Type: Mobile-based part-time work

Work Involves:

Content publishing

Content sharing on social media

Time Required: As little as 1 hour a day

Earnings: ₹300 or more daily

Requirements:

Active Facebook and Instagram account

Basic knowledge of using mobile and social media

For more details:

WhatsApp your Name and Qualification to 9994104160

a.Online Part Time Jobs from Home

b.Work from Home Jobs Without Investment

c.Freelance Jobs Online for Students

d.Mobile Based Online Jobs

e.Daily Payment Online Jobs

Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob



கருத்துரையிடுக

0 கருத்துகள்