நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கவிஞர்கள் கையாண்ட உத்திகள் - நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள்- 15: விளக்குமுறை உத்திகள் - உவமை விளக்குமுறை
நாட்டுப்பற்றைப் பாடுபொருளாக்கிக் கொண்ட கவிஞர்களில் சிலர் பாத்திரங்களை படைக்கும் முறையிலும், பாத்திரப் படைப்புக்கள் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நிலையிலும்கூட புதியமுறையில் விடுதலை உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர் எனவும், ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா போன்ற நாடுகளைப் பெண் பாத்திரங்களாக உருவகம் செய்து அப்பாத்திரங்கள் மூலம் அந்தந்த நாட்டின் நிலைகளை தெளிவாக வெளிப்படுத்துகின்றனர் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் விளக்குமுறை உத்தியில் உள்ள உவமை விளக்குமுறை பற்றியும், உருவக விளக்குமுறை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- உவமை விளக்குமுறை
- பாரதிதாசன் கதரின் சிறப்பு
- அடிமை வாழ்வின் அவலநிலை
- உருவக விளக்குமுறை
உவமை விளக்குமுறை:
விளங்காத பொருளை விளக்குவதற்கு உவமைகள் சிறந்த சாதனமாக பயன்படுத்தப்படுகின்றன. விடுதலை உணர்வைத் தூண்டும் பாடல்களை மக்கள் எளிதில் புரிந்துகொள்ள கவிஞர்கள் உவமைகளை பாடல்களில் பயன்படுத்தியுள்ளனர்.
மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தை எதிர்த்த இந்திய மக்களை அடக்க நள்ளிரவில் கொண்டுவரப்பட்ட ரௌலட் சட்டம், நள்ளிரவில் நகர்ந்துவந்த கரிய மலைப்பாம்பு போன்றது என்றும், அச்சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய சத்தியாக்கிரக இயக்கம், மலைப்பாம்பை அழிக்கவந்த கருடனைப் போல எழுந்தது என்றும், இதனால் பஞ்சாப்பில் நடந்த படுகொலை இரத்த ஆறுபோல ஓடியது என்றும் எளிய உவமைகள் மூலம் விடுதலை உணர்வை வெளிப்படுத்திக்காட்டுகிறார் திரு.வி.க(1).
காந்தியக் கொள்கைகளை கடல் மடையில் ஓடும் நீருடனும், காந்தியை பரந்தாமனாகவும், காந்தியடிகள் லண்டனுக்கு சென்றதை துரியோதனன் சபைக்குத் தூது சென்ற கண்ணனுடனும் உவமைகள் மூலம் கவிஞர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கதாக உள்ளது.
பாரதிதாசன் கதரின் சிறப்பு:
பால் நுரை போன்ற பஞ்சினை விளைவிக்க வேண்டும். பனிமலை போல் அதைச் சுத்தம் செய்ய வேண்டும். தேனீக்கள் மொய்த்தல் போல் நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து ராட்டினத்தைச் சுற்ற வேண்டும். ஆனமட்டும் சிலந்தி வலைபோல் மெல்லியதாகக் கதராடை நெய்ய வேண்டும் என்ற உவமைகள் மூலம் பாரதிதாசன்(2) கதரின் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளதையும் காணமுடிகிறது.
வாடும் பயிரைக் காக்கும் மழைபோல் வறுமையால் வாடும் மக்களின் துயர் தீர்ப்பது ராட்டினமே என்றும், அந்த ராட்டினம், சாரங்கபாணி கைச் சக்கராயுதம் எனச் சாற்றும் ராட்டினத்தின் சர்க்காநிறம் என்றும் ராட்டினத்தின் சிறப்பினை மழையுடனும், சக்கராயுதத்துடனும் உவமித்துக் காட்டுகிறார் கவிக்குஞ்சரம்.
காரிருள் அகற்றிய சிறுமணிச் சுடர்கள் கதிரவனிடம் கலத்தல் போல அடிமையில் அகப்பட்டுக் கொண்டிருந்த சிறுசிறு மனிதர்கள் பாரத மாதச் சபையின் பொன்விழாப் பரிதியால் உண்டான ஒளியில் நல்லொளி பெற்றனர் என்கிறார் ச.து.சு.யோகியார்.
அடிமை வாழ்வின் அவலநிலை:
உப்பில்லா உணவு, அன்பில்லா விருந்து, புகழில்லா பொற்பொதி போன்றது அடிமை வாழ்வு என்று அடிமை வாழ்வின் அவலநிலையை வெளிப்படுத்திக் காட்டுகிறார் நாமக்கல் கவிஞர்(3).
இந்தியர்களின் அறியாமையைக் கண்ணில்லாக் குழந்தையுடனும், பொறியற்ற விலங்குகளுடனும் உவமித்துக் காட்டுகிறார் பாரதியார்(4). அவர்களின் அடிமை நிலையைத் தீயிடை வெந்து மாய்கின்ற விட்டில் பூச்சிகளுடனும், பாம்பின் பல்லில் அகப்பட்ட தேரையுடனும், உவமித்துக் காட்டுகிறார் வாலம்(5). அடிமை நிலையால் சுதந்திர தேவியை மறந்தவர்கள் அணிகள் அணிந்துள்ள பிணத்தை ஒத்தவர்கள்.
சுதந்திரமில்லா நாடு சூழ்புலி பேய் மிகுந்த நாடு போன்றது. சுதந்திர ஒளியை நிலவு, ஒளி, கண்மணி ஒளி, பண்ணசை ஒளி, என்ன ஒளி ஆகியவற்றுடன் உவமித்துக் காட்டுகிறார் திரு.வி.க(6).
பெற்ற சுதந்திரத்தால் பயன் இல்லை என்று கூறுபவர்களை, மாதவம் செய்து பெற்ற மந்திரவாளால் தன் உடலையே அரிந்துக்கொள்ள என்னும் அற்பர்களாக உவமை செய்கிறார் கவிமணி(7).
உருவக விளக்குமுறை:
உவமையும் பொருளும் வேறுபாடு இல்லாமல் ஒன்றோடொன்று இணைந்து, பொருளைத் தொடர்ந்து உவமை வருவது உருவகம். உவமைகளை விட உருவகங்கள் ஆற்றல்மிக்க சக்தியாகப் பாடல்களில் வெளிப்பட்டிருப்பதைத் தெளிவாக உணரமுடிகிறது. விடுதலை உணர்வை வெளிப்படுத்த விரும்பிய கவிஞர்கள் பாடல் தலைப்புகளையே உருவகத் தலைப்புகளாக அமைத்து உள்ளதையும், பொருளை விளக்க பாடல்களில் உருவகங்களை அமைத்துள்ளதையும் அவர்களுடைய பாடல்கள் தெளிவாக உணர்த்திக் காட்டுகின்றன.
“வியாபாரம் செய்வதற்கு வந்திந்த பூனை-இப்போ
வாதுக்கள் செய்து நம்மையே வாட்டுதிந்த பூனை
பூனை இது பூனை - இது வெள்ளைக்கார பூனை”
என்ற பாடலில் பூனையாக உருவகம் செய்துள்ளார் மணி. ஆங்கிலேயர்கள் வெள்ளையாக இருப்பதால் அவர்களைக் கொக்குகளாகவும் உருவகம் செய்துள்ளார் பாஸ்கரதாஸ்.
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் விளக்குமுறை உத்தியில் உள்ள உருவக விளக்குமுறை பற்றி மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. திரு.வி.க. உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல், ப.33.
2. பாரதிதாசன் கவிதைகள், தொகுதி-4, ப.211.
3. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.133.
5. ஹா.கி.வாலம், மோகன முறுவல், ப.18.
6. திரு.வி.க. உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல், ப.8.
7. தேசிக விநாயகம்பிள்ளை, மலரும் மாலையும், ப.189.
Sponsorship





0 கருத்துகள்