நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உத்திகள்: பாரதியார் காட்டும் பிறநாட்டு விடுதலை வரலாறுகள்
அறிமுகம்:
வணக்கம் வாசகர்களே!
நமது முந்தைய வலைப்பதிவில், பழங்காலம் முதல் தற்காலம் வரை மக்களிடையே வீர உணர்வையும், இன்ப உணர்வையும் தூண்டும் கருவியாக வரலாற்றுக் கதைகள் எவ்வாறு திகழ்கின்றன என்பதைக் கண்டோம். குறிப்பாக, நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பழங்காலக் கதைகள் மூலம் இக்கால மக்களிடையே தேசபக்தியை வளர்க்க வேண்டும் என்ற உணர்வு நம் கவிஞர்களிடையே வெளிப்பட்டதை அறிந்தோம்.
அதன் தொடர்ச்சியாக, இன்றைய பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகளில் ஒன்றான 'பிறநாடுகளின் விடுதலை வரலாறு' பற்றித் தெரிந்து கொள்ளலாம். மகாகவி பாரதியார் இந்த உத்தியை எப்படிக் கையாண்டார் என்பதைப் பார்ப்போம்.
பொருளடக்கம்
- பிரெஞ்சுப் புரட்சி: சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
- யங் இத்தாலி: மாஜினியின் வழியில் இளைஞர் சங்கம்
- துருக்கி மக்கள் ஒற்றுமை
- பெல்ஜிய நாடு: வீரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
- ரஷியர்களின் நாட்டுப்பற்று: ஜார் மன்னனின் வீழ்ச்சி
- முடிவுரை
பாரதியின் உலகளாவிய பார்வை:
பிற நாடுகளில் நடந்து முடிந்த, மற்றும் அப்போது நடந்துகொண்டிருந்த விடுதலைப் போர் நிகழ்ச்சிகளை நம் மக்களுக்கு எடுத்துக்காட்டி அவர்களை விழிப்படையச் செய்ய வேண்டும் என்ற தீராத வேட்கை பாரதியாருக்கு இருந்தது.
அதற்காக அவர் பிறநாட்டு விடுதலைப்போர் வரலாறுகளைத் தேடித் தேடிப் படித்தார். அந்த நாடுகள் கையாண்ட போர் முறைகளையும், தியாகங்களையும் இந்தியர்களும் பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்பினார்.
பிரெஞ்சுப் புரட்சியின் மந்திரம்:
1906-ஆம் ஆண்டு முதல் பாரதியார் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகையின் முகப்புப் பக்கத்தில் ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்தார். பிரெஞ்சுப் புரட்சியின்போது அந்நாட்டு மக்களிடையே போர் மந்திரமாக ஒலித்த "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்ற மூன்று சொற்களையும் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
![]() |
| பிரெஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரம்: சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் முழக்கமிட்ட பிரெஞ்சுப் புரட்சி |
யங் இத்தாலி (Young Italy) - மாஜினியின் வழியில்:
இத்தாலி நாட்டை அடிமைத் தளையிலிருந்து மீட்க ஜோசப் மாஜினி அமைத்த ‘யங் இத்தாலி’ என்ற இளைஞர் சங்கம் போல, இந்தியாவிலும் ஒரு சங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற உணர்வு பாரதியாரிடம் வெளிப்பட்டது. இவ்வுணர்வின் வெளிப்பாடாகவே அவர் ‘பால பாரத’ என்ற ஆங்கிலப் பத்திரிக்கையை ஆரம்பித்தார்.
![]() |
| இத்தாலிய இளைஞர்களின் எழுச்சி நாயகன் - ஜோசப் மாஜினி |
“என்னுடனொத்த தருமத்தை ஏற்றோர்
இயைந்த ‘இவ் வாலிபர் சபை’க்குத்
தன்னுடல், பொருளும், ஆவியுமெல்லாம்
தத்தமா வழங்கினேன் - எங்கள்
பொன்னுயர் நாட்டை யொற்றுமையுடைத்தாய்ச்
சுதந்திரம் பூண்டது வாகி
இன்னுமோர் நாட்டின் சார்விலதாகிக்
குடியரசியன்ற தாயியல்க”
இந்திய இளைஞர்களும் மாஜினி போல் சபதம் செய்தால் மட்டுமே இங்கு குடியரசு அமைக்க முடியும் என்ற உணர்வை பாரதியார் இதன் மூலம் வெளிப்படுத்துகிறார்.
துருக்கி மக்கள் ஒற்றுமை:
முடியாட்சியை எதிர்த்து, துருக்கி மக்கள் ஒற்றுமையுடன் போராடி குடியரசை அமைத்ததை பாரதியார் பெரிதும் பாராட்டுகிறார். இந்திய மக்களின் ஒற்றுமையின்மையே நமது அடிமைநிலைக்கு முக்கியக் காரணம் என்பதைத் துருக்கியின் வெற்றியுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளதை அவரது எழுத்துக்களில் தெளிவாக உணரமுடிகிறது.
வீரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு: பெல்ஜியம்:
![]() |
| பெரிய ஜெர்மனியை எதிர்த்து நின்ற சிறிய பெல்ஜியம் |
“யாருக்கோ பகை என்றாலும்
யார்மிசை யிவன் சென்றாலும்
ஊருக்குளெல்லை தாண்டி
யுத்தர வெண்ணிடாமல்
போருக்குக் கோலம் பூண்டு
புகுந்தவன் செருக்குக் காட்டை
வேருக்கு மிடமில்லாமல்
வெட்டுவே னென்று நின்றாய்”
இந்திய நாடு சுதந்திரம் அடைவது மட்டும் பாரதியின் நோக்கமல்ல; அடிமைத் தளையில் சிக்கித் தவிக்கும் அனைத்து நாடுகளும் சுதந்திரம் பெறவேண்டும். அதற்காகப் பகைவர்களை எதிர்க்கும் ஆற்றலை பெல்ஜியம் நாட்டைப் போல நாமும் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார்.
ரஷியர்களின் நாட்டுப்பற்று:
எங்கெல்லாம் கொடுங்கோன்மை இருக்கிறதோ, அங்கெல்லாம் குடியாட்சி மலர வேண்டும் என்பது பாரதியின் திண்ணமான எண்ணம். 1904-05 ஆம் ஆண்டுகளில் நடந்த ரஷ்ய-ஜப்பானியப் போரில் மிகச் சிறிய நாடான ஜப்பான், மிகப்பெரிய ரஷியாவைத் தோற்கடித்தது.
![]() |
| ஜார் மன்னனின் வீழ்ச்சியும், ரஷியப் புரட்சியும் |
இரணியன் போல் அரசாண்ட ஜார் மன்னனின் முடியாட்சி பறிக்கப்பட்டு, குடியாட்சி அமைக்கப்பட்டதை வாழ்த்தி ‘புதிய ரஷ்யா’ என்ற பாடலைப் படைத்தார். இப்புரட்சி போன்று இந்திய மக்களும் செய்ய முன்வரவேண்டும் என்பதை வெளிப்படுத்தியது பாரதியாரின் தேசபக்தியின் உச்சநிலையைக் காட்டுகிறது.
முடிவுரை:
பிற நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகளைத் தமிழ்க் கவிதைகளில் மிகத் தீவிரமாக வெளிப்படுத்திக் காட்டியவர் பாரதியார் மட்டுமே.
அவர் ஏன் பிறநாட்டு விடுதலை நிகழ்ச்சிகளைத் தமிழில் பாட வேண்டும்? ஆங்கிலத்திலேயே எழுதி அந்நாடுகளுக்கு வாழ்த்துப் பாடல்களை அனுப்பியிருக்கலாமே?
இல்லை, அவரது நோக்கம் அதுவல்ல. பிறநாடுகளைப் போல் தம் தமிழ் மக்களும் சுதந்திர உணர்வு பெறவேண்டும், விழித்தெழ வேண்டும் என்பதே அவருடைய முதன்மையான நோக்கம் என்பதை இந்தக் கவிதைகள் நமக்குத் தெளிவாக உணர்த்திக் காட்டுகின்றன.
அடுத்த வலைப்பதிவில், நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் மற்றொரு உத்தியான 'ஊக்குவித்தல்' பற்றித் தெரிந்து கொள்ளலாம். இணைந்திருங்கள்!
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
Sponsorship






0 கருத்துகள்