நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கவிஞர்கள் கையாண்ட உத்திகள் - நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள்- 13: விளக்குமுறை உத்திகள் - பழைய இலக்கிய விளக்குமுறை
பாரதியார் ஒன்பது ரத்தினங்களை சிலேடைப் பொருளாக அமைத்துப் பாரத மாதாவுக்கு நவரத்தின மாலை பாடியுள்ளார் எனவும, அந்தாதித் தொடையாலாகிய ஆசிரிய விருத்தம் எட்டால் கடவுளைத் துதித்து அவர் காக்கக் கடவுளென பாடுவது அட்டமங்கலம் எனவும், போரில் பெற்ற வெற்றியை பாடுவது வாகை மாலை எனவும், சபர்மதி ஆசிரமத்தின் சிறப்பையும் தாண்டக முறையில் எழுதியுள்ளனர் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் விளக்குமுறை உத்தியில் உள்ள பழைய இலக்கிய விளக்குமுறை பற்றிய சிலத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- கதர் விற்பனை
- தேசியக் குறவஞ்சி
- காந்தி சிந்தாமணி
- சுதந்திர தேவியின் துதி
- ஆனந்த களிப்பு
கதர் விற்பனை:
1946-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர்கள் தேச மக்களுக்கு விடுத்த அமைதி வேண்டுகோள் அறிக்கையைக் காந்திஜி என்ற குறத்தி தேச மக்களாகிய இளம் மங்கைக்குச் குறி கூறுவதாக,
“வருகுதடி பொற்காலம்;
வடிவழகி மானே;
வாடுமுந்தன் மனந்தழைக்க
வருகுது நற்காலம்
பொறுமையுளம் பூண்டவளே
புலருதடி பொழுது
பூத்துமகிழ் தேன்விசிற
பொன்னகத்தின் கண்ணே”
என்ற பாடலைப் படைத்துக் காட்டுகிறார் சீராளன்.
குறத்தி கதரின் சிறப்பை வெளிப்படுத்திக் காட்டிக் கதரை விற்பனை செய்வதாக ‘கதர் விற்பனை’ என்ற பாடலைப் பாடுகிறார் பீர்முகமது சாகிப்.
தேசியக் குறவஞ்சி:
நாட்டு மக்களின் அவல நிலையைப் போக்க கூவும் கருங்குயிலிடம் குறி கேட்பதாக நாமக்கல் கவிஞரும்(1), ஒரு குறத்தி தேசியத் தலைவர்களாகிய காந்தி, திருப்பூர் குமரன், லாலா லஜபதிராய், சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களின் தொண்டுகளை உணர்த்துவதாக ‘தேசியக் குறவஞ்சி’ என்ற பாடலை ந.கந்தசாமியும் குறி கூறுதல் என்ற உத்தியின் மூலம் விடுதலை உணர்வை வெளிப்படுத்தியுள்ளதைக் காணமுடிகிறது.
நாட்டின் சிறப்புக்களைக் குறத்தி வெளிப்படுத்துவதாக அமைந்த ‘குறத்திப் பாட்டு’ என்ற பாடலும் குமரன் பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது.
காந்தி சிந்தாமணி:
இருபா இருபஃது, சிந்தாமணி, சதகம், வெண்பா, பள்ளு, புராணம், கதை போன்ற இலக்கிய வகைகளைப் பின்பற்றியும், கவிஞர்கள் விடுதலை உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். சுப்பிரமணிய பிள்ளை ‘காந்தி சிந்தாமணி’ என்ற பாடலையும், பீர் முகம்மது சாகிப் ‘மகாத்மா காந்தி வெண்பா’ என்ற பாடலையும், சுந்தர முதலி ‘காந்தி சதகம்’ என்ற பாடலையும், பாரதியார் ‘சுதந்திர பள்ளு’(2) என்ற பாடலையும் அசலாம்பிகையார் ‘காந்தி புராணம்’ என்ற பாடலையும், ராய.சொக்கலிங்கம் ‘காந்தி இருபா இருபஃது என்ற பாடலையும், கொத்தமங்கலம் சுப்பு ‘காந்தி மகான் கதை’ என்ற பாடலையும் பாடியுள்ளனர்.
கவிஞர்கள் பழைய இலக்கிய வகைகளில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு விடுதலை உணர்வைத் தூண்டும் பாடல்களைப் படைத்து மக்களைத் தூண்டியுள்ளதைத் தெளிவாக உணரமுடிகிறது.
சுதந்திர தேவியின் துதி:
தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பாடல் வகைகளும் விடுதலை உணர்வைத் தூண்டும் தேசியப் பாடல் வகைகளாகக் கவிஞர்கள் மாற்றியிருப்பதை அவர்களுடைய கவிதைகள் தெளிவாக உணர்த்திக் காட்டியுள்ளன.
‘துதி’ என்ற பாடல் வகையை ‘சுதந்திர தேவியின் துதி’ என்ற பாடலாகவும், ‘தோத்திரம்’ என்ற பாடல் வகையைக் ‘கிருஷ்ண தோத்திரம்’ என்ற பாடலாகவும், ‘முறையீடு’ என்ற பாடல் வகையை ‘சுதந்திர தேவியின் முறையீடு’ என்ற பாடலாகவும், ‘ஏசல்’ என்ற பாடல் வகையை ‘நடிப்புச் சுதேசிகன்’, ‘மேத்தா திலகருக்குச் சொல்வது’, ‘நிதானக் கட்சியார் சுதேசியத்தைப் பழித்தல்’ போன்ற பாடல்களாகவும் ‘பெருமங்கலம்’ என்னும் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் வகையை ‘தாதாபாய் நௌரோஜி’ என்ற பாடலாகவும் வெளிப்படுத்தியுள்ளார் பாரதியார்(3). ‘புலம்பல்’ என்ற பாடல் வகையை ‘இந்தியத்தாய் புலம்பல்’ என்ற பாடலாகவும், ‘இரங்கற்பா’ என்ற பாடல் வகையை ‘தாதாபாய் நௌரோஜி, ‘திலகர்’, ‘கோகலே’, ‘வ.வே.சு.ஐயர்’, ‘தாகூர்’ போன்ற பாடல்களாகவும் நாமக்கல் கவிஞர்(4) பாடியுள்ளதையும் காணமுடிகிறது. ‘காந்தி இரங்கற்பா’ என்ற பாடலை ராய சொக்கலிங்கமும், அசலாம்பிகையாரும் பாடியுள்ளதையும் பார்க்கமுடிகிறது.
ஆனந்த களிப்பு:
பண்டைய தமிழ்ப் புலவர்கள் கையாண்டுள்ள பாடல் உறுப்புக்களையும் பாவினங்களையும் பின்பற்றி கவிஞர்கள் விடுதலை உணர்வை வெளிப்படுத்தியுள்ளதையும் காணமுடிகிறது. ஆனந்த களிப்பு, சிந்து, நொண்டிச்சிந்து, கன்னிகள், விருத்தம், பள்ளு, கிளிக்கண்ணிகள் போன்ற பாடல் உறுப்புக்களைப் பாரதியார் வெளிப்படுத்தியுள்ளார். நொண்டிச் சிந்து, கும்மி போன்ற பாடல் உறுப்புக்களை நாமக்கல் கவிஞரும், பாயிரம், அவையடக்கம், தற்சிறப்புப் பாயிரம், காப்பு, விருத்தம், வஞ்சித்தாழிசை, வஞ்சி விருத்தம், ஆசிரியத்தாழிசை, திருத்தாண்டகம், காவடிச்சிந்து, கள்ளிப்பா போன்ற பாடல் உறுப்புக்களை ராய.சொக்கலிங்கமும்(5) வெளிப்படுத்திக் காட்டுகின்றனர்.
கீர்த்தனம் என்ற பாடல் உறுப்பை கண்ணமுருகனாரும், பதிகம், திருவிருத்தம், பாசுரம் போன்ற பாடல் உறுப்புக்களை ஆவுடையப்பன், சிவகுருநாதன், அருணகிரி நாடார் போன்றவர்களும்,‘கோத்தும்பி’ என்ற பாடல் உறுப்பை கி.வா.ஜகநாதனும் தேசியப் பாடல்களாகப் படைத்துக் காட்டியுள்ளதைத் தெளிவாகக் காணமுடிகிறது.
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் விளக்குமுறை உத்தியில் உள்ள பாத்திரப் படைப்புக்கள் மூலம் விளக்கும் முறை பற்றியும், பொருள் மடக்கு விளக்குமுறை பற்றியும், உருக்காட்சி விளக்கமுறை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.428.
2. பாரதியார் கவிதைகள், பக்.177-179, 190-196, 206, 679.
3. பாரதியார் கவிதைகள், பக்.133, 143, 155, 177-178, 181, 196.
4. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.303, 323.
5. ராய. சொக்கலிங்கம், காந்தி கவிதை, பக்.1,4,55,196-197, 203-205, 225, 228.
Sponsorship






0 கருத்துகள்