நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கவிஞர்கள் கையாண்ட உத்திகள் - நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள்- 14: விளக்குமுறை உத்திகள் - பாத்திரப் படைப்புக்கள் மூலம் விளக்கும் முறை
பண்டைய தமிழ்ப் புலவர்கள் கையாண்டுள்ள பாடல் உறுப்புக்களையும் பாவினங்களையும் பின்பற்றி கவிஞர்கள் விடுதலை உணர்வை வெளிப்படுத்தியுள்ளதையும் காணமுடிகிறது எனவும், ஆனந்த களிப்பு, சிந்து, நொண்டிச்சிந்து, கன்னிகள், விருத்தம், பள்ளு, கிளிக்கண்ணிகள் போன்ற பாடல் உறுப்புக்களைப் பாரதியார் வெளிப்படுத்தியுள்ளார் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் விளக்குமுறை உத்தியில் உள்ள பாத்திரப் படைப்புக்கள் மூலம் விளக்கும் முறை பற்றியும், பொருள் மடக்கு விளக்குமுறை பற்றியும், உருக்காட்சி விளக்கமுறை பற்றியும்தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- பாத்திரப் படைப்புக்கள் மூலம் விளக்கும் முறை
- பொருள் மடக்கு விளக்குமுறை
- உருக்காட்சி விளக்கமுறை
பாத்திரப் படைப்புக்கள் மூலம் விளக்கும் முறை:
நாட்டுப்பற்றைப் பாடுபொருளாக்கிக் கொண்ட கவிஞர்களில் சிலர் பாத்திரங்களை படைக்கும் முறையிலும், பாத்திரப் படைப்புக்கள் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நிலையிலும்கூட புதியமுறையில் விடுதலை உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா போன்ற நாடுகளைப் பெண் பாத்திரங்களாக உருவகம் செய்து அப்பாத்திரங்கள் மூலம் அந்தந்த நாட்டின் நிலைகளை தெளிவாக வெளிப்படுத்துகின்றனர். இந்தியாவாகிய பெண், தான் அடைந்துள்ள இழிவு நிலைக்கு பெண்ணடிமை, தீண்டாமை, சாதி வேறுபாடு ஆகியவை காரணங்களாகும். அந்நிலையை அகற்றி மண்ணாட்சியை மலரச் செய்தால் நான் சிறப்படைவேன் என்று இந்தியத்தாய் சொல்வதாகவும் பாத்திரப் படைப்புக்கள் மூலம் நாட்டின் நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறார் திரு.வி.க(1).
குப்பன், வஞ்சி என்ற இருபாத்திரங்கள் மூலம் ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்ற பாடலில் இந்திய நாட்டின் அடிமை நிலைக்கு காரணம் பெண்ணடிமை, சாதி வேறுபாடு, தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் போன்ற இழிநிலைகளே காரணம் என்பதனை இரண்டு மூலிகைகள் உணர்த்திக் காட்டுவதாகவும் பாத்திரங்களைப் புதுமுறையில் அறிமுகப்படுத்தி விடுதலை உணர்வை வளர்க்க முயல்கிறார் பாரதிதாசன்(2).
இந்திய நாடு அடிமையானதற்கான காரணத்தையும், இந்திய மக்களின் நிலையையும் இந்தியத்தாய்; மேற்கத்தியப் பெண் என்ற இரு பாத்திரங்கள் மூலம் அலைச்சுவையாக உருவகப்படுத்துகிறார் நாமக்கல் கவிஞர்(3).
விடுதலை உணர்வைத் தூண்டும் கற்பனைப் பாத்திரங்களை கவிதைகளில் படைக்கும் திறனும் கவிஞர்களிடம் இருந்ததை தெளிவாகப் பார்க்க முடிகிறது.
பொருள் மடக்கு விளக்குமுறை:
மிகுந்த உணர்வு வெளிப்பாட்டு நிலையும், கூறவந்த கருத்தை தெளிவாக வலியுறுத்திக் கூறும் நிலையிலும், பொருளை நன்கு தெளிவுப்படுத்த நினைக்கும் நிலையிலும் ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் உவமைகள் மூலமும் வினாத்தொடர்கள் மூலமும் வெளிப்படுத்தும் நிலையிலும் பொருள் மடக்கு உத்தி கையாளப்படுகிறது. வீர சுதந்திரம் வேண்டி நின்றார், வேறொன்று கொள்வாரோ? கொள்ளமாட்டார் என்ற விடுதலை உணர்வைப் பல உவமைகள் மூலம் விளக்கிக் காட்டுகிறார் பாரதியார்(4). அடிமை வாழ்வின் அவல நிலையையும், அடிமை வாழ்விற்குக் காரணம் என்ன என்பதனையும் ‘தொண்டு செய்யும் அடிமை’ என்ற பாடலில் பொருள் மடக்காக வெளிப்படுத்தி உள்ளதையும் பார்க்கமுடிகிறது.
உருக்காட்சி விளக்கமுறை:
கற்பவர் மனக்கண் முன் படிக்கும்பொழுதே, தாம் விளக்கவந்த கருத்தை உருப்படுத்திக் காட்டுவது உருக்காட்சி உத்தியாகும். இவ்வுத்தி முறையைப் பயன்படுத்தி பாரதியார்(5) சிறையிலிருக்கும் லாலா லஜபதிராய், மனைவி, மக்கள், நாடு ஆகியவற்றை நினைத்து ஏங்குவதாக ‘லஜபதிராய் பிரலாபம்’ என்ற பாடலைப் பாடியுள்ளார். வ.உ.சிக்கும், கலெக்டர் விஞ்சுக்கும் கோர்ட்டில் நடந்த உரையாடல்களை படிப்பவர் மனத்தில் உருக்காட்சியாகத் தோன்றும்படி பாடல்களைப் படைத்துக்காட்டுகிறார் பாரதியார்(6).
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் விளக்குமுறை உத்தியில் உள்ள உவமை விளக்குமுறை பற்றியும், உருவக விளக்குமுறை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. திரு.வி.க. உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல், பக்.13-18.
2. பாரதிதாசன் கவிதைகள், பக்.1-16.
3. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.123-130.
4. பாரதியார் கவிதைகள், பக்.175-176.
5. பாரதியார் கவிதைகள், பக்.188-189.
6. பாரதியார் கவிதைகள், பக்.194-195, 212-213.
Sponsorship




0 கருத்துகள்