பாரதியார் முதல் பாரதிதாசன் வரை: கவிதை வரிகள் மூலம் சுதந்திரத் தீயை மூட்டிய கவிஞர்களின் ஊக்குவித்தல் உத்தி
அறிமுகம்
வணக்கம் வாசகர்களே!
நமது முந்தைய வலைப்பதிவில், பிரெஞ்சுப் புரட்சி முதல் ரஷ்யப் புரட்சி வரை, பிற நாடுகளின் விடுதலை வரலாற்றைப் பயன்படுத்தி மகாகவி பாரதியார் இந்தியர்களிடையே சுதந்திரத் தீயை மூட்டிய விதத்தை விரிவாகக் கண்டோம்.
அதன் தொடர்ச்சியாக, இன்றைய பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகளில் ஒன்றான 'ஊக்குவித்தல்' பற்றித் தெரிந்து கொள்ளலாம். கவிஞர்கள் எப்படி மக்களைத் தட்டி எழுப்பி, சுதந்திரப் போராட்டத்திற்குத் தயார்படுத்தினார்கள் என்பதைப் பார்ப்போம்.
பொருளடக்கம்
- பாரதியின் உளவியல்: வெற்றிக் கொண்டாட்டம்
- கனவு தேசம்: வருகின்ற பாரதம்
- நாமக்கல் கவிஞரின் காந்திய நெறி
- பாரதிதாசனின் தொண்டர் படை
- விடியலை நோக்கி: சுதந்திர சூரியன்
- முடிவுரை
பாரதியின் உளவியல்: வெற்றிக் கொண்டாட்டம்
மக்களிடையே உணர்வுகளைத் தூண்டவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் நடக்கப்போவதை நடந்ததாகவே பாவனை செய்து வெளிப்படுத்திக் காட்டும் நிலை நம் கவிஞர்களிடம் இருந்தது. மக்களின் உளப்பாங்கை நன்குணர்ந்த பாரதியார் இவ்வுத்தி முறையை முதலில் கையாளத் தொடங்கினார்.
நாட்டின் அடிமை நிலை நீங்கி நல்ல காலம் வருகிறதென்று குடுகுடுப்பைக்காரன் சொல்வதாகப் பாடி, மக்களிடையே நம்பிக்கையுணர்வை வளர்க்க முயன்றார். சுதந்திரப் போரில் பலமுறை பின்னடைவைச் சந்தித்தாலும் இறுதியில் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று ஊக்கப்படுத்திய பாரதியார், நாம் சுதந்திரம் பெற்றுவிட்டதாகவே பாடினார்:
“ஆடுவோமே – பள்ளு பாடுவோமே
ஆனந்தச் சுதந்திரம் அடைந்து விட்டோமென்று”
என்றும்,
“ஜய பேரிகை கொட்டடா – கொட்டடா
ஜய பேரிகை கொட்டடா”
என்றும் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே வெற்றி விழா கொண்டாடி மக்களை ஊக்கப்படுத்தியுள்ளதை நோக்கும்போது, பாரதியின் உளவியல் பாங்கு நாட்டுப்பற்றின் உச்சநிலையை வெளிப்படுத்துவதைக் காண முடிகிறது.
![]() |
| விடுதலைக் கனவும் கவிஞரின் எழுத்தும்: ஒரு வரலாற்றுப் பார்வை |
கனவு தேசம்: வருகின்ற பாரதம்
சுதந்திரம் பெற்ற நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை “வருகின்ற பாரதமும் போகின்ற பாரதமும்” என்ற பாடலாகப் படைத்துக்காட்டினார் பாரதியார்.
சுதந்திரம் பெற்ற பாரததேசம் முப்பது கோடி மக்களின் பொதுவுடைமைச் சங்கமாகத் திகழ வேண்டும் என்றும், பாரத மக்கள் அனைவரும் ஒரே குலம், ஒரே இனம், ஒரே நிறை என்றும், எல்லோரும் இந்நாட்டு மன்னராகத் திகழவேண்டும் என்றும் அவர் கனவு கண்டார். பகைவர்கள் அஞ்சும்படியாகச் செல்வவளம் பெறவேண்டும் என்று எதிர்காலத்தில் நடக்கப்போவதைக் கற்பனையாக மக்களின் மனக்கண் முன் கொண்டுவந்து, மக்களிடையே மறைந்து கிடக்கும் சுதந்திரக் கனலைத் தட்டியெழுப்ப முயன்றார்.
நாமக்கல் கவிஞரின் காந்திய நெறி:
உலகமெல்லாம் நடுங்கும் நேரத்தில், கிழவரான காந்தி கூறும் சத்திய உரைகளைக் கேட்க தொண்டர்கள் யாவரும் ஒன்று சேர்வீர் என்றும், சத்தியத்தை நம்பும் யாவரும் கத்தியின்றி ரத்தமின்றி செய்யும் வேதாரண்ய உப்புச் சத்தியாகிரகப் போரில் சேருவீர் என்றும் காந்திய நெறியில் ஈடுபட மக்களை ஊக்கப்படுத்துகிறார் நாமக்கல் கவிஞர்.
தேசத்தொண்டு செய்ய தன் உயிரையும் தியாகம் செய்யும் மனப்பான்மை உருவாகவேண்டும். தேசத்திற்குச் செய்யும் தொண்டே சிறப்புடையது. எனவே தொண்டுசெய்யத் தூங்கியிருக்கும் தமிழர்களைத் தட்டியெழுப்ப அவர் பெரிதும் முயன்றார்.
பாரதிதாசனின் தொண்டர் படை:
அச்சம், வறுமை, கொடுமை, மடமை, ஏழ்மை, அடிமை, சூழ்ச்சி போன்றவற்றை அழித்து எல்லோரும் இன்புற முரசு கொட்டிடக் குடியரசுக் கொடி உயர்த்தத் தோன்றியவர்களே இந்தியர்கள் என்று உற்சாகப்படுத்துகிறார் பாரதியார்.
அவர் வழியைப் பின்பற்றிய பாரதிதாசன், தாய்நாட்டின் பெருமைகளைச் சுட்டிக்காட்டி, தொண்டு செய்ய மக்களைத் தூண்டுகிறார். அதனால் எழுச்சி பெற்றத் தொண்டர்களை ஒன்றாக இணைத்து, இத்தாலி நாட்டு மாஜினியும், இந்திய நாட்டு வீர சிவாஜியும் தம் வீரர்களுக்குக் கூறிய வீர உரை போல, வீர உணர்வைத் தொண்டர்களுக்கு ஊட்டுகிறார்.
வீர உணர்வு பெற்ற தொண்டர்கள், மிதவாதிகளை எழுப்புவதாகவும், ‘தொண்டர் படை பாட்டு’ என்ற பாடலை அமைத்து மக்களுக்குப் பெரும் உற்சாகமூட்டுகிறார் பாரதிதாசன்.
![]() |
| தமிழ் விடியலின் குறியீடு: 'அ' வடிவ சூரியோதயம் |
விடியலை நோக்கி: சுதந்திர சூரியன்
பாரதியார், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பே சுதந்திரம் பெற்ற உணர்வை மக்களிடையே வளர்க்க முற்பட்டார்.
சுதந்திரம் கட்டாயம் கிடைக்கும் என்ற நிலையில், சுதந்திர சூரியன் அடிமை இருளை அகற்ற உதிக்கின்ற நேரம் தமிழர்களே விழித்தெழுங்கள் என்று நாமக்கல் கவிஞரும்,
“நாட்டில் விடுதலை என்னுமோர் நற்பதம்
நம்மை நெருங்குது மாதர்களே”
என்று பாரதிதாசனும் மக்களிடையே உற்சாகமூட்டியுள்ளதைத் தெளிவாக உணர முடிகிறது.
முடிவுரை
மக்களின் மனதில் சுதந்திர வேட்கையை விதைக்க, 'ஊக்குவித்தல்' எனும் உத்தியை கவிஞர்கள் மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர் என்பது இக்கவிதைகளின் மூலம் புலனாகிறது.
அடுத்த வலைப்பதிவில், நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த பிற உத்திகளான 'வரங்கேட்டல்', 'முன்னிலைப்படுத்துதல்' மற்றும் 'கேட்டல்' பற்றித் தெரிந்து கொள்ளலாம். இணைந்திருங்கள்!
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
3. பாரதிரதாசன், ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் வெளியீடு
Sponsorship




0 கருத்துகள்