நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கவிஞர்கள் கையாண்ட உத்திகள் - நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள்- 12: விளக்குமுறை உத்திகள் - பழைய இலக்கிய விளக்குமுறை
பாரதியார் பாரத மாதாவுக்குத் தசாங்கம் பாட முற்பட்டார் எனவும், பாரதியாரைப் பின்பற்றி கண்ணமுருகனாரும், ராய.சொக்கலிங்கமும் திருத்தசாங்கம் பாடியுள்ளதையும் பார்க்கமுடிகிறது எனவும், காந்தியடிகள் இரண்டாம் வட்டமேஜை மாநாட்டிற்குச் சென்ற நிகழ்ச்சியை மகாத்மா காந்தி லண்டன் தூது என்ற பாடலாக வெளிப்படுத்திக் காட்டுகின்றனர் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் விளக்குமுறை உத்தியில் உள்ள பழைய இலக்கிய விளக்குமுறை பற்றி சிலத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- நவமணி மாலை
- அட்டமங்கலம்
- வாகை மாலை
- சபர்மதி ஆசிரமம்
நவமணி மாலை:
வெண்பா முதலாக வெவ்வேறு பாவாலும் பாவினத்தாலும் ஒன்பது பாட்டுக்களில் அந்தாதியாகப் பாடுவது நவமணி மாலையாம்(1). இவ்விலக்கிய மரபைப் பின்பற்றி பாரதியார் ஒன்பது ரத்தினங்களை சிலேடைப் பொருளாக அமைத்துப் பாரத மாதாவுக்கு ‘நவரத்தின மாலை’(2) பாடியுள்ளார். ஐந்து (நவ) ரத்தினங்கள் மூலம் ‘தேசிய பஞ்சரத்ன மாலை’ என்ற பாடலில் விடுதலை உணர்வை வெளிப்படுத்திக் காட்டுகிறார் அன்னிசாமிப் பிள்ளை.
வெண்பாவும், கலித்துறையும் அகவலும், விருத்தமும், அந்தாதித் தொடையாய் நாற்பது வந்தால் அது நான்மணிமாலை என்று இலக்கண விளக்கப் பாட்டியல் கூறுகிறது. இவ்விலக்கிய வகை 1932-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனித்தொகுதி முறையை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொண்ட காந்தியைப் புகழ்ந்து, அவரைப் பல உருவகப் பெயர்களால் பாராட்டி, பல்லாண்டு வாழ்க என வாழ்த்திக் கூறும் முறையில் அமைந்த ‘காந்தி நான்மணி மாலை’(3) தோன்ற அடிப்படையாக அமைந்தது.
அட்டமங்கலம்:
அந்தாதித் தொடையாலாகிய ஆசிரிய விருத்தம் எட்டால் கடவுளைத் துதித்து அவர் காக்கக் கடவுளென பாடுவது அட்டமங்கலம் என்று இலக்கண விளக்கப்பாட்டியல் கூறுகிறது. இவ்விலக்கிய மரபையொட்டி தனித்தொகுதி முறையை ஒழிக்க உண்ணாவிரதம் மேற்கொண்ட காந்தியடிகளைக் காக்க ‘கடவுளை வேண்டல்’(4) என்ற பாடலைப் படைத்துக் காட்டுகிறார் ராய.சொக்கலிங்கம்.
நேரிசை வெண்பா, கலித்துறை, ஆசிரியப்பா, விருத்தம், சந்த விருத்தம் ஆகிய ஐந்தும் வந்தால் அது அலங்காரப் பஞ்சகம் எனப்படும்(5). இவ்விலக்கிய வசையைச் சிறிது மாற்றி ஐந்து பாடல்களில் காந்தியடிகளின் சாத்வீகப் போர்முறையை ‘மகாத்மா காந்தி பஞ்சகம்’(6) என்ற பாடலாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளார் பாரதியார்.
ஊசல், ஊஞ்சல், பொன்னூசல், ஊசல் திருநாமம், ஊசற்கவிதை போன்ற பெயர்கள் சங்ககாலம் முதல் பாடல் தலைப்பாக கையாளப்பட்டு வருகின்றன. இப்பாடல்களைப் பின்பற்றி அகவற்பாவால் காந்தியின் புகழைப் பாடிக்கொண்டே ஊஞ்சல் ஆடவேண்டும் என்று பெண்களுக்குக் கட்டளை இடுவதாக ‘காந்தி திருப்பொன்னூசல்’ என்ற பாடலைப் பாடியுள்ளார் ராய.சொக்கலிங்கம்(7).
வாகை மாலை:
போரில் பெற்ற வெற்றியை சிறப்பித்துப் பாடுவது வாகை மாலையாம். இவ்விலக்கிய மரபு 1947-ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு “ஜேகோச மாலை என்னும் வெற்றி முழக்கப்பாட்டு” என்ற பாடலாகக் குமாரசிவம் பாடியுள்ளதையும் பார்க்க முடிகிறது.
அகவலடியும் கலியடியும் விருன் வந்த வஞ்சிப்பாவால் ஆண் மகனைச் சிறப்பித்துப் பாடுதல் நாமமாலை எனப்படும். இவ்விலக்கிய வகையைப் பின்பற்றி ராய.சொக்கலிங்கம், காந்தியின் திருநாமங்களைச் சொல்ல கிளியை வேண்டுவதாகவும், கிளியே! நீ காந்தியின் திருநாமங்களைச் சொன்னால் அதற்குப் பரிகாரமாக உனக்கு எல்லா உணவுப்பொருள்களையும் தருவேன் என்று கிளியிடம் கூறுவதாகவும் ‘காந்தி திருநாமம் கேட்டல்’(8) என்ற பாடலைப் பாடியுள்ளார்.
பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவது ‘பல்லாண்டு’ என்ற இலக்கிய வகையைக் குறிக்கும். இறைவனுக்குப் பாடப்பட்ட இத்தகு வாழ்த்துப் பாடல்கள் திருப்பல்லாண்டென அழைக்கப்பட்டது. பெரியாழ்வாரின் ‘திருப்பல்லாண்டு’ இவ்விலக்கிய வகையின் முதல் நூல் எனலாம். இம்மரபு இருபதாம் நூற்றாண்டில் ‘காந்தித் திருப்பல்லாண்டு’(9) என்ற பாடல் போன்ற காரணமாக அமைந்ததைக் காணமுடிகிறது.
சபர்மதி ஆசிரமம்:
இறைவனின் புகழைப் பாடும் ‘திருப்புகழ்’ என்ற இலக்கிய வகை இருபதாம் நூற்றாண்டில் தேசியத் தலைவரான காந்தியின் புகழை வெளிப்படுத்தும் ‘காந்தி திருப்புகழ்’(10) என்ற பாடலாக உருப்பெற்று இருப்பதையும் பார்க்கமுடிகிறது.
இறைவனின் சிறப்புக்களை போற்றுதல் ‘தாண்டகம்’ என்ற இலக்கிய வகையாக நாயன்மார்களின் காலத்தில் வழங்கப்பட்டது. தாண்டகங்கள் பாடுவதில் திருநாவுக்கரசர் வல்லவராக விளங்கியதால் இவருக்கு ‘தாண்டகவேந்தர்’ என்ற சிறப்புப் பெயரும் வழங்கப்பட்டு இருந்தது. 1932-இல் ஏர்வாடாச் சிறையில் உண்ணாவிரதம் இருந்த காந்தியைத் தெய்வமாகவும், ஏர்வாடாச் சிறையைக் கோயிலாகவும் உருவகம் செய்து, ‘ஏர்வாடாக் கோயில்’ என்ற பாடலைத் தாண்ட முறையில் வெளிப்படுத்தியுள்ளார் ராய.சொக்கலிங்கம். சபர்மதி ஆசிரமத்தின் சிறப்பையும் தாண்டக முறையில் எழுதியுள்ளார்.
பதினெட்டாம் நூற்றாண்டில் திரிகூடராசப்ப கவிராயரால் உருவாக்கப்பட்ட ‘குறவஞ்சி’ என்ற இலக்கிய வகை இறைவன் உலா வருவதைக் கண்ட பெண்களுள் ஒருத்தி அவன்மீது தீராத காதல் கொள்வதாகவும், அக்காதல் நோய் விரைவில் தீரும் என்று குறத்தி குறி கூறுவதாகவும் அமைந்த இலக்கிய வகையில் ‘குறத்தி குறி கூறுதல்’ என்ற பகுதியைப் பின்பற்றி விடுதலை உணர்வைத் தூண்டும் பாடல்களை குறி கூறுதல் என்ற உத்தியில் கவிஞர்கள் படைத்துள்ளனர். 1931-இல் லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேஜை மாநாட்டிற்குக் காந்திஜி, ஜின்னா, அம்பேத்கார் போன்ற தேசத்தலைவர்கள் சென்றிருந்தனர். அம்மாநாடு வெற்றியுடன் முடியுமா? அல்லது தோல்வியுடன் முடியுமா? என்று குறத்தியிடம் குறி கேட்பதாகப் பாடுகிறார் கவிமணி.
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் விளக்குமுறை உத்தியில் உள்ள பழைய இலக்கிய விளக்குமுறை பற்றி மேலும் சிலத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
2. பாரதியார் கவிதைகள், பக்.147-151.
3. ராய.சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.171-181.
4. ராய சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.211-213.
6. பாரதியார் கவிதைகள், பக்.199-200.
7. ராய. சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.188-190.
8. ராய.சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.194-195.
9. ராய சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.191-193.
10. ராய சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.220-224.
Sponsorship





0 கருத்துகள்