நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கவிஞர்கள் கையாண்ட உத்திகள் - நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள்- 11: விளக்குமுறை உத்திகள் - பழைய இலக்கிய விளக்குமுறை
பழைய தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த கவிஞர்கள் தம் புலமையை வெளிப்படுத்தவும், நாட்டுப்பற்றைத் தூண்டவும் பழைய உணர்வுகள் வழி விடுதலை உணர்வைத் தூண்ட முயன்றுள்ளதை அவர்களின் கவிதைகள் வழி காணமுடிகிறது என முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் விளக்குமுறை உத்தியில் உள்ள பழைய இலக்கிய விளக்குமுறை பற்றி சிலத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- தசாங்கம்
- மகாத்மா காந்தி லண்டன் தூது
- காந்தி அந்தாதி
தசாங்கம்:
விடியற்காலத்தில் சுதேசியக் கோழியொன்று கொக்கிரக் கோவென்று கூவுவதாகவும், சுதேசியம் கோரும் சுயாட்சியாம் சூரியனை இருள் கொள்ளையடிப்பதாகவும், சாத்மீகமாகிய மாமகளே தொண்டர் சங்கம் முழங்குது இனி தாட்டிகமாக ராட்டினம் சுற்றிட எழுந்திரடி என எழுப்புவதாகவும் உருவகப்பாடல் மூலம் காந்தியக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க தூங்குகின்ற பெண்ணை ராட்டினம் சுற்ற எழுப்புகிறார் கவிக்குஞ்சரம்.
அடிமை நிலையில் தூங்குகின்ற இந்தியர்களை நோக்கி,
“பகைவன் வீட்டை இடிக்கின்றான் எலியைப் போல அரிக்கின்றான்
அன்னை மிக அழுகின்றாள் இன்னுமேனோ தூக்கம்”
என்று இந்தியர்களுக்கு உணர்வூட்ட முயல்கிறார். தூங்குகின்ற தமிழர்களைத் தேசபக்தர்களின் திருக்கூட்டம் தட்டியெழுப்புவதாகப் பாடுகிறார் நாமக்கல் கவிஞர்(1).
பள்ளியெழுச்சி முறையில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தவேண்டும் என்பதே பாரதியாரின் நோக்கமாக இருந்தது. இவர் வழியைப் பின்பற்றி கவிஞர்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடியுள்ளதையும் காண முடிகிறது.
அரசனுக்குரிய மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, பரி, கரி, கொடி, முரசம், செங்கோல் ஆகிய பத்தும் தசாங்கம் எனப்படும்(2). தசாங்கப்பத்து குறித்து இலக்கண விளக்கப் பாட்டியலும், முத்து வீரியமும் தெளிவாகக் கூறியுள்ளன. மாணிக்கவாசகரின் திருத்தசாங்கம் முதலில் தோன்றிய தசாங்க இலக்கியமாகக் கருதப்படுகிறது. இம்மரபை ஒட்டியே பாரதியார் பாரதமாதாவுக்குத் தசாங்கம்(3), பாட முற்பட்டார். பாரதியாரைப் பின்பற்றி கண்ணமுருகனாரும்(4), ராய.சொக்கலிங்கமும்(5) திருத்தசாங்கம் பாடியுள்ளதையும் பார்க்கமுடிகிறது.
மகாத்மா காந்தி லண்டன் தூது:
பிள்ளைத்தமிழ் என்னும் இலக்கிய வகைத் தமிழில் மட்டுமே காணப்படும் சிறப்பு பெற்றது. ஏழாம் நூற்றாண்டில் பெரியாழ்வார் கண்ணைக் குழந்தையாகக் கற்பனை செய்து பாடியுள்ள அழகிய பாட்டுக்கள் பிற்காலத்தில் ‘பிள்ளைத்தமிழ்’ என்னும் இலக்கியம் தோன்றுவதற்கான அடிப்படை என்றும் கூறலாம். அவர் பாடிய பாட்டுகளுக்கு பிள்ளைத்தமிழ் என்னும் பெயர் இல்லையாயினும் பிற்காலத்தில் அத்தகைய தூது பாட்டுக்கள் அடங்கிய நூலுக்கு அப்பெயர் வழங்கப்பட்டது(6). ஒட்டக்கூத்தர் எழுதிய ‘குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலே முதல் நூல் என்றும் கருத முடிகிறது. இவ்விலக்கிய மரபையொட்டி காந்தியடிகளுக்குப் பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார் ராய.சொக்கலிங்கம். காந்தியைப் பிள்ளையாகக் கருதி பத்துப் பருவங்களில் நூறு பாடல்களைப் பாடியுள்ளார். ஒவ்வொரு பருவத்திலும் காந்தியின் தொண்டுகளையும், சிறப்புக்களையும்(7) வெளிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருப்பதைத் தெளிவாகக் காணமுடிகிறது.
பண்டைய இதிகாசங்கள் புராணங்களில், பகை அரசர்களிடம் தூது செல்லும் நிலை இருந்ததைப் பார்க்கமுடிகிறது. மனிதர்களையே தூதாக அனுப்பும் முறை பிற்காலத்தில் இலக்கிய இன்பம் கருதி பறவைகளையும், விலங்குகளையும், இயற்கைப் பொருள்களையும் தூதுவிடும் நிலையாக மாறியது. இறைவனைக் காதலனாக எண்ணி அவனிடம் தூது அனுப்பும் முறையும் அக்காலத்தில் நிலவி வந்தது. இம்மரபையொட்டி, காந்தியடிகள் இரண்டாம் வட்டமேஜை மாநாட்டிற்குச் சென்ற நிகழ்ச்சியை ‘மகாத்மா காந்தி லண்டன் தூது’ என்ற பாடலாக வெளிப்படுத்திக் காட்டுகிறார் குற்றாலம் பிள்ளை. துரியோதனன் சபைக்குக் கண்ணன் தூது சென்றதைப் போல இந்தியர் துயரம் துடைக்க காந்தி லண்டனுக்கு தூது சென்றதை,
“தூது சென்றாரே காந்தி
ராட்டினத் தேர்கரமேந்தி”
என்ற பாடல் மூலம் காந்தியை இந்திய விடுதலைப் போரின் தூதுவனாகக் காட்டுகிறார் குற்றாலம் பிள்ளை.
காந்தி அந்தாதி:
ஒரு காதலி தன் காதலனிடம் கிளியைத் தூதாக அனுப்பும்போது, காதலன் காந்தி வழியை விரும்பும் தன்மையுடையவன். அவன் சத்தியத்திலிருந்து தவற மாட்டான்(8) என்ற உள்ளுறைப் பொருளை பாடலில் அமைத்து கிளியைத் தூதாக அனுப்பி காந்தியக் கொள்கையை வெளிப்படுத்த முயல்கிறார் ராய.சொக்கலிங்கம்.
காந்திய பக்தியில் ஈடுபட்டுச் சிறை சென்ற காதலி, மற்றொரு சிறையில் இருக்கும் தன் காதலனிடம் வண்டு, அன்னம், மயில், குயில்(9) போன்றவற்றை தூதாக அனுப்புவதாகப் பாடல்களைப் படைத்துள்ளதையும் காணமுடிகிறது.
வெண்பாவோ அல்லது கலித்துறையோ, பத்து பத்தாக நூறு செய்யுள் வந்தால் அது ‘அந்தாதி’ என்று அழைக்கப்படுகிறது(10). இடைக்காலத்தில் தோன்றிய இவ்விலக்கிய வகையைப் பின்பற்றி அகப்பொருளை வெளிப்படையாகவும், தேசபக்தியை உள்ளுறைப் பொருளாகவும் அமைத்து ‘காந்தி அந்தாதி’(11) என்ற பாடலை ராய.சொக்கலிங்கம் பாடியுள்ளார். அகத்துறை மூலமாக காந்தியக் கொள்கைகளும் காந்தியின் தொண்டுகளும் இப்பாடலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதைப் பார்க்கமுடிகிறது. காதல் உணர்வு எல்லோரையும் மயக்கும் தன்மையது. அத்தகைய மயக்கமருந்தைக் கொண்டு தேசபக்தியை வளர்த்தால் தீவிரமாக வளரும் என்று இவர் கருதினார் என உணரமுடிகிறது.
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் விளக்குமுறை உத்தியில் உள்ள பழைய இலக்கிய விளக்குமுறை பற்றி மேலும் சிலத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.154-155.
2. வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப்பாட்டியல், ப.39.
3. பாரதியார் கவிதைகள், பக்.151-153.
4. கண்ணமுருகனார், சுதந்திர கீதம், பக்.5-7.
5. ராய. சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.184-187.
6. மு.வரதராசன், இலக்கிய மரபு, ப.22.
7. ராய. சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.1-54.
8. ராய.சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.259-260.
9. ராய.சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.123, 131, 146-149.
11. ராய.சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.119-170.
Sponsorship




0 கருத்துகள்