நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகள் - வாழ்த்துதல், சாத்வீகப் போர்முறை மற்றும் மொழி பெயர்ப்புப் பாடல்கள்
உவமைகளை விட உருவகங்கள் ஆற்றல்மிக்க சக்தியாகப் பாடல்களில் வெளிப்பட்டிருப்பதைத் தெளிவாக உணரமுடிகிறது எனவும், விடுதலை உணர்வை வெளிப்படுத்த விரும்பிய கவிஞர்கள் பாடல் தலைப்புகளையே உருவகத் தலைப்புகளாக அமைத்து உள்ளதையும், பொருளை விளக்க பாடல்களில் உருவகங்களை அமைத்துள்ளதையும் அவர்களுடைய பாடல்கள் தெளிவாக உணர்த்திக் காட்டுகின்றன எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகள் பற்றி சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- வாழ்த்துதல்
- சாத்வீகப் போர்முறை
- மொழி பெயர்ப்புப் பாடல்கள்
வாழ்த்துதல்:
எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது வாழ்த்துக் கூறித் தொடங்குவது உலக இயல்பு. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தேசியக் கவிஞர்களில் சிலர் வாழ்த்துக் கூறியுள்ளதை அவர்களின் கவிதைகள் வழி அறியமுடிகிறது.
நாட்டுப்பற்றைப் பாடுபொருளாக்கிய முதல் தமிழ்க்கவிஞர் என்று போற்றப்படும் பாரதியார்(1), தாம் பாடிய ‘வங்கமே வாழிய’ என்ற பாடலை வாழ்த்துப் பாடலாகவே பாடியுள்ளார். வங்க மக்களின் விடுதலையுணர்வைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் வங்கப் பிரிவினையைக் கொண்டு வந்தனர். இந்நிலையை உணர்ந்த பாரதியார், சிங்கத்தைப் போன்ற வீரமுடைய வங்கமே! அற்பர் போல் பிறர் உதவியை எதிர்பார்க்காமல், தன் சுதேசிப் பொருள்களையே பயன்படுத்த எண்ணிய வங்கத் தெய்வமே! வாழிய! வாழிய! என வங்க மக்களின் வீர உணர்வுக்கு வாழ்த்து கூறுகிறார்.
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக் கூற நினைத்த பாரதியார்(2) நாட்டில் உள்ள தற்கால அவல நிலைகள் நீங்கி, அறம் ஓங்கி, பாரத நாடும், தமிழ் மொழியும், தமிழ் இனமும் உணரவேண்டும் என வாழ்த்துப் பாடியுள்ளதையும் காணமுடிகிறது.
சாத்வீகப் போர்முறை:
காந்தியினுடைய சாத்வீகப் போர்முறையால் நம் நாடு வெற்றியடைந்து எல்லா வளங்களையும் பெறவேண்டும் என்று விரும்பினார் நாமக்கல் கவிஞர்(3).
“வாழ்க வாழ்க என்றும் நன்று இந்தியா வாழ்கவே
மங்களங் கொள் எங்கள் தங்க மாதா வாழ்கவே”
என பாரத மாதாவுக்கு மாதவையா வாழ்த்துக் கூறியுள்ளதையும் பார்க்க முடிகிறது.
இந்தியாவின் முதியவர் என்று போற்றப்படும் தாதாபாய் நௌரோஜிக்கு என்பதாவது ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துக் கூற நினைத்த பாரதியார்(4), அவருடைய பண்பு, தியாகம், நாட்டுப்பற்று ஆகியவற்றை வெளிப்படுத்திக்காட்டி இனியும் பல்லாண்டு வாழ்ந்து எங்களைக் காக்க என வாழ்த்துகிறார். சுயராஜ்யக் கிளர்ச்சியில் ஈடுபட்டுக் கோயமுத்தூர் சிறையில் இருக்கும் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு(5) அவருடைய எதிர்காலப் புகழை சுட்டிக்காட்டி அவருக்கு வாழ்த்துக் கூறி உற்சாகப்படுத்தியுள்ளதையும் காணமுடிகிறது.
ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவு தேட சென்னை வந்த காந்தியடிகளை ‘வாழ்க நீ எம்மான்!’ என வாழ்த்துகிறார் பாரதியார்(6). காந்தியடிகளின் மத வேறுபாடற்ற தன்மையைப் பீர்முகம்மது சாகிப் பாடியுள்ளதைப் பார்க்கமுடிகிறது.
சுதந்திர ஒளியின் சிறப்பைப் பல உவமைகள் மூலம் வெளிப்படுத்திக் காட்டி வாழ்த்துவதாக கூறி திரு.வி.கவும்(7), சுதந்திரம் பெற்ற திருநாளில் தேசபக்தர்களை வாழ்த்துவதாக நாமக்கல் கவிஞர்(8), கவிமணி(9) போன்ற கவிஞர்கள் தங்களின் உள்ள உணர்வையும், நன்றி உணர்வையும் வாழ்த்துப் பாடல்களால் வெளிப்படுத்தியுள்ளனர்.
சுதந்திரம் பெற்ற பாரதத்தாயும், மனிதர் குலம் நலமடைய வகுத்த குடியரசும், நீடுழி வாழ்க என வாழ்த்துகிறார் அருணகிரிநாதர். வாழ்த்துக் கூறுவதன் மூலம் தேசபக்தர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற உணர்வு தேசியக் கவிஞர்களின் கவிதைகளில் வெளிப்பட்டிருப்பதைத் தெளிவாகப் பார்க்கமுடிகிறது.
மொழி பெயர்ப்புப் பாடல்கள்:
பிறமொழியில் உள்ள தேசபக்திப் பாடல்களை மொழிபெயர்த்து விடுதலை உணர்வை வெளிப்படுத்திக் காட்டி மக்களைத் தூண்ட வேண்டும் என்று சில கவிஞர்கள் கருதியதன் வெளிப்பாடே மொழிபெயர்ப்புப் பாடல்களாக உருப்பெற்றன. விடுதலை உணர்வைத் தூண்டும் மொழிபெயர்ப்புப் பாடலை முதலில் படைத்துக் காட்டியவர் பாரதியாராவார்(10). இந்திய விடுதலைப் போரின் போர் மந்திரமாக விளங்கிய ‘வந்தே மாதரம்’ என்ற பாடலின் பொருளை உணராமல் தமிழ்மக்கள் வீர முழக்கம் செய்தனர். இப்பாடலின் பொருளைத் தமிழ் மக்கள் உணர்ந்து பாடவேண்டும் என்ற நோக்கத்துடன் இப்பாடலை மொழி பெயர்த்ததாகப் பாரதியாரே கூறியுள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் சுதேசமித்திரன் பத்திரிகையில் மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொண்டிருந்தார். இப்பணியே அவர் மொழிபெயர்ப்புப் பாடல்கள் எழுத உதவியாக இருந்தது.
இந்தியாவின் நிலையினை, யுனைடெட் ஸ்டேட்ஸ் மிஷிகன் மாகாணம் தெத்ருவா நகரத்திலுள்ள ஸ்ரீமதி மாட் ரால்ஸ்டன் ஹர்மன் என்ற ஸ்திரி தமது ஆங்கில கவிதைகளில் வெளிப்படுத்தியிருப்பதைத் தமிழ் மக்களுக்கு உணர்த்த ‘இந்தியாவின் அழைப்பு’ என்ற மொழிபெயர்ப்புப் பாடலைப் படைத்துள்ளதையும் காணமுடிகிறது.
கொடுங்கோல் ஆட்சியை ஒழித்துப் பிரெஞ்சு நாட்டு மக்களைப் போர்க்கோலம் பூணும்படி கட்டளையிடுவதாக அமைந்த ‘லாமார்ஸெலேஸ்’ என்ற பிரெஞ்சு தேசிய கீதத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார் பாரதியார்(11).
இந்திய நாடு விடுதலை அடைய வேண்டுமானால் பிரெஞ்சு மக்களைப் போல் இந்தியர்கள் போர்க்கோலம் பூணவேண்டும் என்ற தம் உணர்வை வெளிப்படுத்தவே இப்பாடலை மொழிபெயர்த்தார் என்றும் கருதலாம்.
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகளில் மொழி பெயர்ப்புப் பாடல்கள் பற்றி மேலும் சில தகவல்களையும், வந்தேமாதரச் சிறப்பு பற்றியும், பழித்தல் மூலம் விடுதலை உணர்வைத் தூண்டுதல் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
3. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.117-118.
4. பாரதியார் கவிதைகள், பக்.206-207.
7. திரு.வி.க, உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல், ப.8.
8. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.233, 321-322, 374.
9. தேசிக விநாயகம்பிள்ளை, மலரும் மாலையும், பக்.210-211.
10. சி.சுப்பிரமணிய பாரதியார், பாரதி நூல்கள், பகுதி-4, ப.116.
11. பாரதியார் கவிதைகள், பக்.704-705.
Sponsorship





0 கருத்துகள்