நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகள் - கூர்ஜரப் பாடல், வந்தேமாதரச் சிறப்பு, பழித்தல் மூலம் விடுதலை உணர்வைத் தூண்டுதல்
எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது வாழ்த்துக் கூறித் தொடங்குவது உலக இயல்பு எனவும், காந்தியினுடைய சாத்வீகப் போர்முறையால் நம் நாடு வெற்றியடைந்து எல்லா வளங்களையும் பெறவேண்டும் எனவும், பிறமொழியில் உள்ள தேசபக்திப் பாடல்களை மொழிபெயர்த்து விடுதலை உணர்வை வெளிப்படுத்திக் காட்டி மக்களைத் தூண்ட வேண்டும் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகளில் மொழி பெயர்ப்புப் பாடல்கள் பற்றி சில தகவல்களையும், வந்தேமாதரச் சிறப்பு பற்றியும், பழித்தல் மூலம் விடுதலை உணர்வைத் தூண்டுதல் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- கூர்ஜரப் பாடல்
- வந்தேமாதரச் சிறப்பு
- பழித்தல் மூலம் விடுதலை உணர்வைத் தூண்டுதல்
கூர்ஜரப் பாடல்:
அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களும் இந்திய நாட்டின்மீது பற்று கொள்ளவேண்டும் என்பதை உணர்த்த இராமச்சந்திரன் செட்டியார்(1) ‘சர் வால்ட்டர் ஸ்காட்’ என்ற ஆங்கிலக்கவி எழுதிய பாடலைப் பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளார்.
“அன்னிய நாடுகள் அலைந்த சலித்து
தன்னுடைய நாட்டில் தாளை வைக்கையில்
இதயம் பொங்கிக் கொழுந்து விட்டெரிய
இதுவென் நாடு ஈதென் தாய் நாடெனவே
தன்னுள் இயம்பாதிருக்கும்
மனிதனும் உணர்விலன் மாநிலத்துளனோ?”
இப்பாடல் 1932-இல் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழ் மக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் விடுதலை உணர்வைத் தூண்ட பயன்படுத்தப்பட்டது.
காந்தியின் அகிம்சைக் கொள்கையைப் பின்பற்றவேண்டும் என்ற கருத்துடன், காந்தியடிகள் தினந்தோறும் பிராத்தனையில் பாடும் ‘வைஷ்ணவன் எவன்?” என்ற கூர்ஜரப் பாடலைத் தமிழில் திரு.வி.க.(2) மொழிபெயர்த்துள்ளார். உலக மக்களால் பெரிதும் போற்றப்பட்டிருந்த பிறமொழி தேசியப் பாடல்களை தமிழில் மொழி பெயர்த்துத் தமிழ் மக்களைத் தூண்ட முயல்வதே கவிஞர்கள் மொழிபெயர்ப்புப் பாடல்களைப் படைத்ததன் நோக்கம் என உணரமுடிகிறது.
வந்தேமாதரச் சிறப்பு:
‘வந்தே மாதரம்’ என்ற பாடலை மொழிபெயர்த்து தம் உணர்வினை வெளிப்படுத்திய பாரதியார், அச்சொல்லைப் பயன்படுத்தி சில பாடல்களைப் படைத்துள்ளதைத் தெளிவாகக் காணமுடிகிறது. ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லை உச்சரிப்பதனால் ஏற்படும் இன்பங்களையும், துன்பங்களையும் வெளிப்படுத்திக் காட்டி, எத்தகைய துயர் வந்தாலும் அதை மறக்காமல் இருக்கவேண்டும் என்ற தம் உள்ள உணர்வைப் பாரதியார் பாடலில் வெளிப்படுத்தியுள்ளதையும் காணமுடிகிறது.
ஆரியமென்ற எம் அன்னையின்மீது திகழ் அன்பெனும் கொடி வாடியபோது அதற்கு உயிர் தரும் மழையாக இருப்பதுவும், ஆரியரைச் சூழ்ந்துள்ள அடிமை இருட்கணம் ஒழிய வங்க மாக்கடலில் தோன்றிய இளங்கதிராக இருப்பதுவும், விரோதிகள் நெஞ்சு பதைத்திடும் மந்திரமாக இருப்பதுவும், ‘வந்தேமாதரம்’ என்ற மந்திரமே என்று உணர்த்திக் காட்டியவர் பாரதியார்(3). அம்மந்திரத்தைக் காக்க எத்தகைய கொடுமைகள் வந்தாலும் மனந்தளராமல் நாம் ஒன்றாய் நின்று வலிமை குன்றினாலும் உயிர் போனாலும் உச்சரிப்போம். ஜாதிமத வேறுபாடுகளை அகற்றி சகோதரராய் ஒள்றுமையுடன் முப்பது கோடி மக்களும் அடிமையில் இருந்து விடுபட முயல்வோம். அதற்காக வந்தேமாதரம் என்று நம் மாநிலத்தாயை வணங்குவோம். அம்மந்திரத்தை வணங்கியவர்கள் மாயத்தை வணங்கமாட்டார்கள். அதுவே அவர்களுக்கு தாரக மந்திரமாக விளங்கும்.
அம்மந்திரத்தின் சிறப்பை,
“அன்புறு இந்தியா சுதந்திரம்
தென்புற வழங்கு மந்திரம்”
என்ற பாடலில் வீரணக்கோனார் வெளிப்படுத்திக் காட்டி உயிர்த் தியாகம் செய்தாகிலும் அம்மந்திரத்தை உச்சரிக்கவேண்டும் என அழைப்பு விடுக்கிறார். ‘வந்தே மாதரக் கும்மிகள்’ என்ற பாடல் மூலம் கிருஷ்ணசாமி ஐயரும், ‘வந்தே மாதரக் கீர்த்தனைகள்’ என்ற பாடல் மூலம் அப்புசாமி ஐயரும் இம்மந்திரத்தின் சிறப்பை வெளிப்படுத்திக் காட்டியுள்ளதையும் காணமுடிகிறது.
பழித்தல் மூலம் விடுதலை உணர்வைத் தூண்டுதல்:
இந்தியாவைப் பற்றி ஆங்கிலேயர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும், மிதவாதிகள் எவ்வாறு ஆங்கிலேயர்களிடம் அடிமையாக வாழ நினைக்கிறார்கள் என்பதையும், தேச பக்தர்களைப் போல் போலியாக நடித்துக் கொண்டிருக்க நினைப்பவர்களையும் பழித்துக்காட்டி அவர்களையும் விடுதலை உணர்வுகொள்ளச் செய்யக் கவிஞர்கள் பழித்தல் என்ற உத்தியை கையாண்டிருப்பதை அவர்களின் கவிதைகள் வழி அறியமுடிகிறது.
இந்திய மக்கள் அடிமையாக வாழ்வதையும், சாதி, சமய, மத வேறுபாடுகளால் சண்டையிடுவதையும், அச்சம் கொண்டு அடிமையாகப் பிச்சை வாங்கி ஆண்மையில்லாமல் உண்டு வாழ்வதையும், ஒற்றுமையில்லாமல் வெற்றுரை பேசி வாழ்வதையும், சோம்பலுடன் வெள்ளை நிறத்தவர்களைக் கண்டு அஞ்சுதலையும், நாட்டை ஆளக் கல்வியறிவு இல்லாமல் இருப்பதையும், வீரம் இல்லாமல் வீட்டில் அடிமைவேலை செய்து வாழ்வதையும், ஆங்கிலேயர்கள் பழிப்பதுபோல் சுட்டிக்காட்டி இந்நிலையிலிருந்து விடுபட்டால்தான் நாம் சுதந்திரத்தைப் பெறமுடியும் என்பதை உணர்த்துவதாகப் பாடலைப் படைத்துள்ளார் பாரதியார்(4).
தேசபக்தர்களைப் போல் ஏமாற்றித் திரிபவர்களின் நிலையினை,
“தாய்நாட்டின் பக்தரென்று
சலியாத தொண்டரென்று
வாய்ப்பேச்சில் பேசி நின்று ஞானத் தங்கமே
வஞ்சனைகள் செய்வாரடீ”
என்ற பாடல் மூலம் ஆறுமுகனும், தங்களுக்காகவே தாங்கிப் பேசும் தைரியம் இல்லாத பேடிகள் என்ற மாதவையாவும், மன்னர்களுக்கு வால் பிடிக்கும் மண்டுக்கூட்டம், முற்றுமறப் படித்தவரே வெள்ளையர்க்கு முக்காலும் நண்பர் பின் தாசர் கூட்டம் என்று சுந்தரமும், இவர்கள் கட்சி வெறியர், அன்னியர் சூழ்ச்சிக்குரியர், உத்தியோக வேட்டைக்காரர் என்று சுத்தானந்த பாரதியாரும், இவர்கள் நாய்கள், ஊமை, நொள்ளை, செவிடு போன்றவர்கள் என்று பாரதிதாசனும்(5), ‘நடிப்புச் சுதேசிகள்’ என்று பாரதியாரும்(6), பழித்துக்காட்டி அவர்களுக்குத் தேச பக்தியூட்ட முயன்றுள்ளதையும் காணமுடிகிறது.
அடுத்த வலைப்பதிவில் பழித்தல் மூலம் விடுதலை உணர்வைத் தூண்டுதல் பற்றி மேலும் சில தகவல்களையும், வீர உணர்வு பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. சி.எம். இராமச்சந்திரன் செட்டியார், இளைஞர் பாடல்கள், ப.33.
2. திரு.வி.க, உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல், ப.42.
3. பாரதியார் கவிதைகள், பக்.133-135, 175-176, 673-674.
4. பாரதியார் கவிதைகள், பக்.188-189.
5. பாரதிதாசன் கவிதைகள், ப.185.
6. பாரதியார் கவிதைகள், பக்.196-198.
Sponsorship




0 கருத்துகள்