நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகள் - காந்திய பக்தி, வீர உணர்வு, அன்னை நிலம்
ஆரியமென்ற எம் அன்னையின்மீது திகழ் அன்பெனும் கொடி வாடியபோது அதற்கு உயிர் தரும் மழையாக இருப்பதுவும், ஆரியரைச் சூழ்ந்துள்ள அடிமை இருட்கணம் ஒழிய வங்க மாக்கடலில் தோன்றிய இளங்கதிராக இருப்பதுவும், விரோதிகள் நெஞ்சு பதைத்திடும் மந்திரமாக இருப்பதுவும், ‘வந்தேமாதரம்’ என்ற மந்திரமே என்று உணர்த்திக் காட்டியவர் பாரதியார் என முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக பழித்தல் மூலம் விடுதலை உணர்வைத் தூண்டுதல் பற்றி சில தகவல்களையும், வீர உணர்வு பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- காந்திய பக்தி
- வீர உணர்வு
- அன்னை நிலம்
காந்திய பக்தி:
காங்கிரஸிலிருந்து விலகி உயர்நீதிபதி பதவியைப் பெற்று அடிமையாக வாழ்ந்த கிருஷ்ணசாமி ஐயரைப் பாரதியார் கண்டித்துப் பேசியுள்ளார்.
“சென்னை மாநகர் வக்கீல் நிரேஷ்டராம்
சீமான் கிருஷ்ணசாமி அய்யரவர்
தன்னை மறந்து தன் தேசத்தை மறந்து
தாவி உட்கார்ந்தாரே ஐக்கோர்ட்டில்”
என்று பெண்கள் கும்மியடித்துக் கொண்டு கேலி செய்வதாகச் சேலத்தைச் சார்ந்த ஒரு கவிஞர் பாடியுள்ளதையும் பார்க்கமுடிகிறது.
மிதவாதியான மேத்தா, இந்தியர்களால் இந்தியாவை ஆளமுடியாது என்று நினைத்ததையும், திலகரின் தீவிரவாதப் போக்கால் இந்தியர்களுக்கு துன்பம் வரும் என்று கருதியதையும் தமது கவிதைகளில் பாரதியார்(1) படைத்துக் காட்டியுள்ளதையும் தெளிவாகப் பார்க்கமுடிகிறது.
கிருஷ்ணசாமி ஐயர், கோகலே, மேத்தா போன்றவர்களுடைய நிதானப் போக்கின் மேல் பாரதியார் தொடுத்த நகைச்சுவையம்புகள் இராமபானத்திலும் கூறியவை. மிண்டோ மார்லிச் சீர்திருத்தத்தை வானளாவப் புகழ்ந்து வந்த கோகலேவை நகைச்சுவையாகப் பழித்துக்காட்டுகிறார் பாரதியார்(2).
மகனே! உடல் வருந்தி உன்னைப் பெற்றதால் பெற்ற இன்பம் எல்லாவற்றையும்விடச் சிறந்ததே. ஆனால், காந்தியின் போரில் ஈடுபட்டு, சலியாமல் தொண்டாற்றிப் பேரின்பம் எய்துவதற்கு இடையூறாக சில நாட்களை வீணாகப் போக்க நீ பிறந்தாயே! என்று ஒருதாய் தன் மகனைப் பார்த்து பழிப்பதாக ராய.சொக்கலிங்கம்(3) வெளிப்படுத்ததிக்காட்டி பெற்ற மகனைவிடக் காந்திய பக்தியே சிறந்தது என்று தாய்மார்கள் உணருமாறு பாடலைப் படைத்துக் காட்டியுள்ளார்.
வீர உணர்வு:
நம் முன்னே தூங்கியிருக்கும் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும் சாமர்த்தியம் எவனிடம் இருக்கிறதோ அவன் தான் கவி என்று காந்தியடிகள்(4) கூறியதைப் போல தூங்கியிருக்கும் தமிழர்களைத் தட்டியெழுப்பி வீர உணர்வு கொள்ளச் செய்ய இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய கவிஞர்களில் பலர் தாங்கள் பெற்ற வீர உணர்வைத் தம் கவிதைகளைப் படிப்பவரும் பெறவேண்டும் என்ற கருதியதைக் கவிதைகள் வழி வெளிப்படுத்திக் காட்டியுள்ளனர்.
சுதந்திரம் பெற முயல வேண்டுமானால் அதற்கு அடிப்படையாக தேசத் தொண்டு செய்யும் மனப்பான்மையை முதலில் மக்களிடம் உருவாக்க வேண்டும். அத்தொண்டு பஞ்சம், அடிமைநிலை, சோம்பல், பட்டினி, படிப்பின்மை, சாதி வேறுபாடு, வரிப்பளு, வீண் செலவு, மக்களை எய்த்தல் போன்றவற்றை அகற்றி சத்திய வாழ்வை உண்டாக்குவதாக அமையவேண்டும்.
தேசத்தொண்டு செய்ய மக்களுக்கு வீர அழைப்பு விடுத்த நாமக்கல் கவிஞர்(5). தூங்கியிருக்கும் தமிழர்களைத் தட்டியெழுப்ப தேசபக்தர் திருக்கூட்டம் வருவதாகவும், அக்கூட்டம் தூங்கியிருக்கும் தமிழர்களை நோக்கி,
“தூங்கித் தூங்கி விழும் தமிழா! – உன்
தூக்கம் போக்க வந்தோம் தமிழா!
ஏங்கிப் படுத்திருக்கும் தமிழா! – உன்னை
எழுப்ப வந்த சக்தி தமிழா!
எழுந்து நின்று கண்ணைத் துடைத்தே – உன்
இரு கையாலும் கொடி பிடித்தே
அழுந்திக் கீழிருந்து வாடும் - அன்னை
அடிமை நீக்க வழி தேடும்”
என்ற பாடல் மூலம் தமிழர்களுக்கு வீர உணர்வைப் புகட்டியுள்ளார்.
பாரத அன்னை கூவி உங்களை அழைக்கிறாள். தூங்கிக் கொண்டிருக்கும் வீரர்களே! வெள்ளையர் ஆட்சியை அகற்ற விரைவில் எழுவீர்! என்ற சின்னசாமிப்பிள்ளை வீரவுணர்வூட்டும் பாடலைப் பாடியுள்ளதையும் காணமுடிகிறது.
அன்னை நிலம்:
இந்துதர்ம பேரிகை எட்டுத்திக்கும் முழங்க வீறுடன் கிளம்புவோம். தேசியப் போர் புரிந்து சேமம் திகழ் சுதந்திரம் பெறுவோம் என்று கவிஞர்கள் மக்களுக்கு வீர உணர்வை உண்டாக்கிய நிலையினை அவர்களின் கவிதைகள் வழி காணமுடிகிறது.
அடிமை வாழ்வின் அவல நிலையைப் போக்க மக்கள் வீர உணர்வு கொண்டெழ வேண்டும் என்ற உணர்வை,
“தோள்கள் விம்முது தசையுந்துடிக்குது
சுதந்திரம் என்றவுடன் - கொலை
வாள் கொண்டு தாக்கினாற் போன்றே இருக்குது
அடிமையென நினைத்தால்!”
என்ற பாடலில் வீர உணர்வின் உச்சநிலையை வெளிப்படுத்திக் காட்டுகிறார் கி.மு.ஷெரிப்.
புழுதி என எமை மிதித்துப் போகின்றீர்கள். நாங்கள் இனிமேல் அயர்விலாத புது விழிப்புக்கொண்டு விட்டோம். அச்சமில்லை, பழிக்குப்பழி வாங்க வந்தோம். விண்ணிடி போல் போர்முரசு கொட்டுகின்றோம் என்று 1946-இல் நடந்த போரின் போது தமது கவிதை மூலம் மக்களைத் திரட்டுகிறார் கம்பதாசன்(6).
அன்னை நிலம் காப்பதற்கு உயிரையும் தியாகம் செய்யும் மனப்பான்மையை மக்களிடையே உருவாக்கக் கருதிய எஸ்.டி.சுந்தரம்(7),
“உன்னாட்டுத் தன்மானம் காக்க வேண்டில்
உயிரின் மேல் உடலின் மேல் அச்சம் வேண்டாம்
அன்னை நிலம் காப்பதற்கு அஞ்சினால்
அந்த நிலம் நமைக்காக்க அஞ்சும் நாளை”
என்ற பாடலாக வெளிப்படுத்தியுள்ளதையும் பார்க்கமுடிகிறது.
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகளில் வீர உணர்வு பற்றி மேலும் சில தகவல்களையும், தெய்வ பக்தி பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. பாரதியார் கவிதைகள், பக்.190-192.
2. பாரதியார் கவிதைகள், பக்.187-188.
3. ராய.சொக்கலிங்கம், காந்தி கவிதை, ப.128.
4. மகாத்மா காந்தி, என் சரிதம், ப.80.
5. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.343-344.
6. கம்பதாசன், புதுக்குரல், பக்.1-2.
7. எஸ்.டி. சுந்தரம், கவியின் கனவு, ப.16.
Sponsorship




0 கருத்துகள்