நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகள் - மணிக்கொடி, அடிமைச்சங்கிலி, தெய்வ பக்தி, மாகாளி
காந்தியின் போரில் ஈடுபட்டு, சலியாமல் தொண்டாற்றிப் பேரின்பம் எய்துவதற்கு இடையூறாக சில நாட்களை வீணாகப் போக்க நீ பிறந்தாயே என்று ஒருதாய் தன் மகனைப் பார்த்து பழிப்பதாக ராய.சொக்கலிங்கம் வெளிப்படுத்ததிக்காட்டி பெற்ற மகனைவிடக் காந்திய பக்தியே சிறந்தது என்று தாய்மார்கள் உணருமாறு பாடலைப் படைத்துக்காட்டியுள்ளார் என முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகளில் வீர உணர்வு பற்றி மேலும் சில தகவல்களையும், தெய்வ பக்தி பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- மணிக்கொடி
- அடிமைச்சங்கிலி
- தெய்வ பக்தி
- மாகாளி
மணிக்கொடி:
நான் அன்னியர்க்கு அடிமையல்ல, பாரததேவிக்கும், அத்தேவியிடம் தீவிர பக்திகொண்ட திலகர், பூபேந்திரர், விபின் சந்திரபாலர் போன்ற தேசபக்தர்களுக்கு அடிமையாக இருப்பேன். எங்கள் தாயின் மணிக்கொடியினை தேசபக்தர்கள் தங்கள் நல்லுயிரை ஈந்தும் காக்கும் தன்மையுடையவர்கள். எங்கள் பாரதத் தாயைக் கோடிக்கணக்கான வீரர்கள் எதிர்த்தாலும் அவர்களை ஒரு கணத்தில் மாய்த்துக் குருதி வெள்ளத்தில் ஆழ்த்திவிடுவாள். முன்பு இலங்கையை அழிக்கவும், இந்திரஜித்தை இரண்டு துண்டாகச் செய்யவும் பயன்பட்ட வில் எங்கள் பாரத மாதாவாகிய ஆரிய ராணியின் வில் என்று பாரதத்தாயின் வீர உணர்வுகளை வெளிப்படுத்திக்காட்டி மக்களை வீர உணர்வுகொள்ளச் செய்கிறார் பாரதியார்(1).
நெஞ்சின் நேரே வாளை நீட்டி நெருங்கிவந்த போதிலும் அஞ்சக்கூடாது என்கிறார் சீராளன்(2). உச்சி மீது வான் இடிந்து வீழ்ந்தாலும் அஞ்சாத வீர உணர்வு வேண்டும் என்று பாரதியார்(3) கூறியுள்ள பாங்கு வீர உணர்வின் உச்சநிலையைக் காட்டுகிறது.
ஒருதாய் தன் மகனுக்குப் பாரதநாட்டின் பழைய வீரநிலையை வெளிப்படுத்திக் காட்டி புகழ் விளையுமிடம் போர் முனையே. சற்றும் தளராமல் சண்டைக்குப் போய் வருவாய், வெற்றி கிடைக்கும். தாய் நிலம் காத்திடவே ருஷியர் சாவும் மறந்து போரில் ஈடுபட்டதையும், வெளிப்படுத்திக்காட்டி மகனைப் போருக்கு அனுப்புவதாக படைத்துக்காட்டுகிறார் கவிமணி(4).
அடிமைச்சங்கிலி :
அடிமைச்சங்கிலி அறுத்து மடமையைத் தீர்க்க அன்னை உன்னை அழைக்கும்முன் ஆர்த்தெழுந்து வெளியே வா, இனிமேல் அஞ்சியஞ்சி பிழைக்காமல் மூர்க்கரோடு இணங்காமல், முன்னேற்றம் காண ஒரு தாயின் வயிற்றில் பிறந்த நாம் அனைவரும் ஒற்றுமையுடன் எதிர்ப்போம். அன்னியரின் வேர் களைந்து அரசுரிமை நாமடைய முரசடித்து, மார்பைக் காட்ட இந்தியனே நீ எழுவாய் என்று கவிஞர்கள் தம் வீர உணர்வைக் கவிதைகளாக்கியுள்ளதையும் காணமுடிகிறது.
பெண்களும் இந்தியத் தாயின் அடிமை நிலையை அகற்ற வீர உணர்வு கொண்டெழ வேண்டும் என்பதை,
“வீறு கொண்டு எழுமினோ பாரதத்தின் மாதர்களே!
சோறு ஊட்டும் கைதனில் சூரமென்பதில்லையோ?”
என்ற பாடலில் வாலமும்(5),
“தாய்மார்கள் சுதந்திரப்போர் செய்திடவே
தருணமிது தயங்கிடாதீர்
பேய்த்தனமாய் பாருலகில் பிணம் பிடுங்கும்
பிறராட்சி கொல்லச் சேர்வீர்”
என்ற பாடலில் அய்யன் பெருமாளும் வெளிப்படுத்திக் காட்டியுள்ளதையும் பார்க்க முடிகிறது.
தெய்வ பக்தி:
தெய்வ பக்திக்கும், இராஜபக்திக்கும் அடிப்படையாய் இருப்பது தேசபக்தி. தேசத்திலுள்ள உயிர்களிடத்து அன்பு செலுத்துவது தேசபக்தி. உயிர்களிடத்து அன்பு செலுத்துவது கடவுளிடத்து அன்பு செலுத்துவதாகும். தேசபக்தியும் தெய்வபக்தியும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதனை நன்குணர்ந்த கவிஞர்கள், நாடு அடிமையில் இருந்து விடுபடத் தெய்வத்தை வழிபட்டதை அவர்களுடைய கவிதைகள் நமக்குத் தெளிவாக காட்டுகின்றன.
பாரதியாரே முதன் முதலில் தெய்வ பக்தியைத் தேசபக்தியுடன் இணைத்துப் பாட முற்பட்ட முதல் கவிஞர் என்றும் கூறலாம். அடிமைநிலையில் நாட்டு மக்கள் படும் அவலநிலையை எடுத்துக்காட்டி, நீயும் உன் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால் கண்ணீரால் வளர்த்த சுதந்திரப் பயிர் வளர அருள் புரிவாய் என்ற சர்வேசனையும், முன்னாளில் பாரதப்போரை நடத்தி வாய்மையை வெற்றி பெறச் செய்தேனோ.
“என்று தணியுமிந்த சுதந்திர தாகம்?
என்று மடியுமெங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னை கைவிலங்குகள் போகும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?”
என்று கண்ணனையும் வேண்டியுள்ளதையும் பார்க்க முடிகிறது.
மாகாளி:
புதுவையில் பாரதியாருக்கு ஆங்கிலேயர்கள் பல தொல்லைகள் கொடுத்து வந்தனர். அந்தச் சூழ்நிலையில் தன் மனத்தை நோக்கி நமக்குக் கணபதி துணை இருக்கிறார். அண்டஞ் சிதறினும் கடல் பொங்கி எழுந்தாலும் எதற்கும் எப்போதும் அஞ்ச வேண்டியதில்லை. நமக்கு எல்லா காரியங்களையும் வெற்றியடையச் செய்ய காளி இருக்கிறாள். மாகாளியே ரஷியநாட்டின் விடுதலைக்கு காரணம் என்று பாரதியார்(6) மனதிற்கு ஆறுதல் கூறியுள்ளதையும் காணமுடிகிறது. பாரதியார்(7) சர்வேசன், கண்ணன், கணபதி, காளி போன்ற தெய்வங்களை வழிபடும்போது நாட்டுப்பற்றை மறக்காமல் வெளிப்படுத்தியிருப்பது அவருடைய நாட்டுப்பற்றின் உச்சநிலையைக் காட்டுகிறது.
அடிமை உணர்வை அகற்றி விடுதலை உணர்வைத் தந்தவன் முருகன். இந்திய நாட்டில் பிறந்த நாங்கள் எங்கள் செல்வத்தை அனுபவிக்காமல், எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயர்களிடம் அடிமையாகிக் கஞ்சியுமின்றி நோயால் வாடி விலங்குகள் போல் இருக்கின்றோம். இவ்வடிமை வாழ்வை அகற்ற எங்களுக்கு அன்பும், அறிவும், ஆண்மையும், ஆற்றலும், கேண்மையும் தருமாறு இறைவனிடம் பிரார்த்தனைச் செய்கிறார் நாமக்கல் கவிஞர்(8).
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகளில் தெய்வ பக்தி பற்றி மேலும் சில தகவல்களையும், நாட்டின் பழமைச் சிறப்பு பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. பாரதியார் கவிதைகள், பக்.142, 145, 154-155, 192-193.
4. தேசிக விநாயகம்பிள்ளை, மலரும் மாலையும், பக்.289-290.
5. ஹா.கி.வாலம், மோகன முறுவல், ப.20.
6. பாரதியார் கவிதைகள், பக்.176-177.
7. பாரதியார் கவிதைகள், பக்.9, 94, 220-221.
8. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.11.
Sponsorship




0 கருத்துகள்