நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகள் - பாரத நாட்டின் விடுதலை வேண்டல், நாட்டின் பழமைச் சிறப்பு, இந்தியக்கும்மி
தெய்வ பக்திக்கும், இராஜபக்திக்கும் அடிப்படையாய் இருப்பது தேசபக்தி. தேசத்திலுள்ள உயிர்களிடத்து அன்பு செலுத்துவது தேசபக்தி எனவும், உயிர்களிடத்து அன்பு செலுத்துவது கடவுளிடத்து அன்பு செலுத்துவதாகும் எனவும், தேசபக்தியும் தெய்வபக்தியும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதனை நன்குணர்ந்த கவிஞர்கள், நாடு அடிமையில் இருந்து விடுபடத் தெய்வத்தை வழிபட்டதை அவர்களுடைய கவிதைகள் நமக்குத் தெளிவாக காட்டுகின்றன எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகளில் தெய்வ பக்தி பற்றி சில தகவல்களையும், நாட்டின் பழமைச் சிறப்பு பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- பாரத நாட்டின் விடுதலை வேண்டல்
- நாட்டின் பழமைச் சிறப்பு
- இந்தியக்கும்மி
பாரத நாட்டின் விடுதலை வேண்டல்:
அன்பையும் அறத்தையுமே நம்பி வாழ்ந்த இந்தியர்களுக்குச் சாபமென வந்த ஆங்கிலப் பகையை அகற்ற சக்தி, சித்தி, ஆயுதபலம் ஆகிய மூன்றையும் தருக எனப் பரமனிடமும், மடமை, அடிமை, வறுமை போன்றவற்றால் வாடும் மக்கள் விடுதலை பெற்று குடியரசு அமைத்திடவேண்டும் எனக் காளியிடமும் முறையீடு செய்கிறார் சுத்தானந்த பாரதியார்.
1924-இல் சிறையிலிருக்கும் காந்தியடிகளைக் காக்க தேவனை வேண்டுகிறார் தமிழ்க்குமரன்.1932-இல் தனித்தொகுதியைக் கண்டித்தும், தீண்டாமையைக் கண்டித்தும் உண்ணாவிரதம் இருந்த காந்தியைக் காக்க ஈசனை வேண்டுகிறார் ராய.சொக்கலிங்கம்(1).
பாரதிதாசன் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்த பிறகு நாத்திகக் கவிஞராக மாறினார். ஆரம்ப காலத்தில் இவர் முருகனிடம் ஈடுபாடு கொண்டு, ‘மயிலம் சுப்பிரமணியர் துதியமுது’(2) என்ற பாடலைப் பாடியுள்ளதையும் காணமுடிகிறது. இந்நூலில் ‘பாரத நாட்டின் விடுதலை வேண்டல்’ என்ற தலைப்பில்,
“வீழ்தலும் யாம் வாழ்தலுமே வேலவா உன் கையிலுண்டு
வீணில் நாங்கள் பட்டதெல்லாம் சொல்லவோ நின்பால்
வேண்டி நிற்பதெல்லாம் இன்பமல்லவோ - இந்த
ஆழ்கடல் புவிமே லெமக்கினி
தான பாரத பூமியை நீ
அட்டதிக்கும் போற்றும் வண்ணம் ஆக்குவாய் வானில்
எட்டவே உரிமைக்கொடி தூக்குவாய்”
என்று வேலவனிடம் நாட்டின் முன்னேற்றம் குறித்தும், நாட்டின் உரிமை குறித்தும் வேண்டுகிறார் பாரதிதாசன்.
உயர்வு தாழ்வுக்குக் காரணமான தீண்டாமை நீங்க வேண்டுமென தெய்வத்திடம் முறையீடு செய்கிறார் அருணகிரிநாதர். தெய்வ பக்தியால் உந்தப்பட்ட கவிஞர்கள் தேசபக்தியையும் இணைத்துக் காட்டி பாடல்களை வெளிப்படுத்தும் நிலை அக்காலக் கவிஞர்களிடம் இருந்ததை அவர்களுடைய பாடல்கள் நமக்குத் தெளிவாக உணர்த்திக் காட்டுகின்றன.
நாட்டின் பழமைச் சிறப்பு:
சுதந்திரத்தை இழந்து அடிமை, நோய், பஞ்சம், வறுமை போன்றவற்றால் வாடும் இந்தியர்களுக்கு, முன் நம் முன்னோர்கள் வாழ்ந்த நாட்டின் பழமைச் சிறப்பையும், பண்பாட்டையும், செல்வச்சிறப்பையும் வெளிப்படுத்திக் காட்டி மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்ட முயன்றனர் சிலர். அவர்களுள் முன்னோடியானவர் பாரதியார் என்றே கூறலாம். தமிழரின் தன்மான உணர்ச்சியை வளர்ப்பதற்காகப் பழமையைப் பாடினார். பழமைச் சிறப்பு பெற்ற தமிழர் புதுமைச் சிறப்பும் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டார். இவர் பழமைச் சிறப்பை எடுத்துப் பாடிய அளவு வேறு எந்தத் தமிழ்ப் புலவரும், தமிழரின், இந்தியரின் பழமைச் சிறப்பை எடுத்துப் பாடவில்லை என்கிறார் வேலுப்பிள்ளை(3).
பாரத நாடு எல்லா இயற்கை வளங்களையும் பெற்று பாருக்குள்ளே உயர்ந்த நாடாக விளங்கியது என்று, இந்தியாவை இகழ்ந்து பேசும் ஆங்கிலேயர்களுக்குப் பதிலடி கொடுப்பதாகவும், அடிமையால் பழமையை உணராமல் இருக்கும் தமிழர்களுக்கு ஆவேசம் ஊட்டுவதாகவும் பழமையை வெளிப்படுத்துகிறார் பாரதியார்(4).
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
மிருந்தது மிந்நாடே”
என்றும்,
“தொண்டு நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடும்
சூழ் கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவ ளென்றுணராத
இயல் பினளாமெங்கள் தாய்”
என்றும் பழமைச் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளதை தெளிவாகப் பார்க்க முடிகிறது.
இந்தியக்கும்மி:
பாரத நாடு பழமை பெற்ற நன்னாடு என்று பாரதிதாசனும் கூறியுள்ளார். ‘இந்தியக்கும்மி’ என்ற பாடலாக மாதவையாவும்(5), ‘நாட்டுக்கும்மி’ என்ற பாடலாக நாமக்கல் கவிஞரும்(6), ‘இந்திய சரித்திரக்கும்மி’ என்ற பாடலாகச் சுத்தானந்த பாரதியாரும்(7) இந்திய நாட்டின் பழமைச் சிறப்பைப் பெண்கள் கும்மியடித்துக் கொண்டு பாடுவதாக அமைத்துள்ளது போற்றத்தக்கதாக உள்ளது.
பாரதநாட்டின் இயற்கை வளம், செல்வச்சிறப்பு, கலைவளம், தொழில் வளம், வீரச்சிறப்பு, தியாக உணர்வு ஆகியவற்றைப் ‘பாரத நாடு’ என்ற பாடலாகப் படைத்துக்காட்டுகிறார் திரு.வி.க.(8) பாரத நாட்டின் வீரச் சிறப்பை வெளிப்படுத்த ‘வீரநாடு’ என்ற பாடலையும், பழமைச் சிறப்பை வெளிப்படுத்த ‘இந்தியா’ என்ற பாடலையும் ராய.சொக்கலிங்கம்(9) தெளிவாகப் பாடியுள்ளார்.
மந்திர முனிவர்களும், சந்திர குல மன்னர்களும் வாழ்ந்த நாடு. சத்தியத்தைப் போற்றுகின்ற உத்தமர்கள் வாழும் நாடு என்ற நாட்டின் பழமைச் சிறப்பை பாடி மக்களைத் தூண்டும் நிலை அக்காலத்தில் இருந்ததைத் தெளிவாக அறியமுடிகிறது.
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகளில் நாட்டின் இழிவுநிலை பற்றியும், கற்பனை உணர்வு பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. ராய. சொக்கலிங்கம், காந்திக் கவிதை, ப.213.
2. பாரதிதாசன், மயிலம் சுப்பிரமணியர் துதியமுது, ப.44.
3. ஆ.வேலுப்பிள்ளை, தமிழ் இலக்கியத்தின் காலமும் கருத்தும், ப.196.
4. பாரதியார் கவிதைகள், பக்.135-143.
5. அ.மாதவையா, இந்தியக் கும்மி, பக்.16-23.
6. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.303-316.
7. சுத்தானந்த பாரதியார், இந்திய சரித்திரக் கும்மி, பக்.9-72.
8. திரு.வி.க. உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல், பக்.9-12.
9. ராய.சொக்கலிங்கம், காந்திக் கவிதை, பக்.255, 264-266.
Sponsorship




0 கருத்துகள்