நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகள் - இளைஞர்களிடம் விடுதலை உணர்வைத் தூண்டுதல், பறவைகள் மூலம் விடுதலை உணர்வை வெளிப்படுத்துதல்
கற்பனை என்பது எல்லா மனிதர்களிடமும் தோன்றும் இயல்பான உணர்வாகும். சிலர் வாழ்க்கையைக் கற்பனையாகக் காண்பர் எனவும், சிலர் இயற்கையைக் கற்பனையாகக் காண்பர் எனவும், சிலர் மனதில் கடவுளையே கற்பனையாகக் காண்பர் எனவும், நாட்டுப்பற்றைக் கற்பனையாகத் தம் கவிதைகளில் வெளிப்படுத்திக்காட்டும் ஆற்றல் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களிடம் வெளிப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காண முடிகிறது எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகளில் கற்பனை உணர்வு பற்றி சில தகவல்களையும், இளைஞர்களிடம் விடுதலை உணர்வைத் தூண்டுதல் பற்றியும், பறவைகள் மூலம் விடுதலை உணர்வை வெளிப்படுத்துதல் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- பயணத்தின் நோக்கம்
- இளைஞர்களிடம் விடுதலை உணர்வைத் தூண்டுதல்
- சிறுவர் சிறுமியர் தேசியகீதம்
- பறவைகள் மூலம் விடுதலை உணர்வை வெளிப்படுத்துதல்
- பறவைகளின் வாழ்க்கை
பயணத்தின் நோக்கம்:
உலகம் முழுவதும் உலாவி வந்த நிலாவைப் பார்த்து அதன் நீண்ட பயணத்தின் நோக்கத்தைக் கேட்பதாகவும், அதற்கு நிலா மறுமொழியாக, நித்தம் நாட்டை உயர்த்தவும், வீட்டைச் சுரண்டும் அடிமையை விலக்கவும், கொடுமையைத் தவிர்த்துக் குலத்தைக் காக்கவும், சுதந்திர தேவியின் சுகநிலை காண்பதும் பயணத்தின் நோக்கம் என்று கூறுவதாகக் கற்பனை செய்துள்ளார் பாரதிதாசன்.
தாய்மை உணர்வு, விலங்குகள், இயற்கைப் பொருள்கள், உயிரற்ற செயற்கைப் பொருள்கள் போன்றவற்றின் மூலம் கற்பனையாக விடுதலை உணர்வைக் கவிதைகளாக்கிக் காட்டும் நிலை அந்நாளில் இருந்ததையும் காணமுடிகிறது.
இளைஞர்களிடம் விடுதலை உணர்வைத் தூண்டுதல்:
இளைஞர்களின் உள்ளத்தில் இளமை முதல் விடுதலை உணர்வை வளரச் செய்தால் அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த தேசபக்தர்களாக மாறுவார்கள் என்ற நம்பிக்கையில் கவிஞர்கள் தம் உள்ள உணர்வை வெளிப்படுத்தி இருப்பதையும் காண முடிகிறது.
பாரத நாட்டுப் பெண்களின் வயிற்றில் பிறக்கும் குழந்தைகள் தேசபக்தர்களாகத் திகழவேண்டும் என்பது பாரதியின் எண்ணம். இவ்வெண்ணம் கொண்ட பாரதியார்(1) இளைஞர்களிடையே ஒற்றுமையுணர்வையும், வீர உணர்வையும், விடுதலை உணர்வையும் வளர்க்க ‘அச்சந்தவிர்’, ‘மடமையில் அழிந்திடேல்’, ‘தேசத்தைக் காத்தல் செய்’ என்று புதிய ஆத்திச்சூடியில் வெளிப்படுத்தியுள்ளார். நம் ஆன்றோர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டைப் பெற்ற தாயாக கும்பிடவேண்டும். பாரத நாடு பழமைச் சிறப்புடையது என்று பாப்பா பாட்டிலும் இளைஞர்களிடையே விடுதலை உணர்வைத் தூண்ட முயன்றுள்ளார்.
பாரதியாரைப் பின்பற்றி வீரணதாஸ்,
“இந்திய தேசமிது தம்பி - இங்கு
யாரும் சகோதரரே தம்பி”
என்ற பாடலில் இளைஞர்களிடையே ஒற்றுமையை வளர்க்க முயன்றுள்ளதையும் உணர முடிகிறது.
சிறுவர் சிறுமியர் தேசியகீதம்:
இளைஞர்களின் மனப்பாங்கை நன்கு அறிந்திருந்த பாரதிதாசன், அவர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு, தாலாட்டு, விடுகதை, விலங்குகள் பற்றிய அறிவு, அறிவியல் பற்றிய அறிவு, போலி நடிப்பு ஆகிய செயல்களின் மூலம் நாட்டுப்பற்றை எளிதில் வளர்க்க இயலும் என்று கருதியதை அவருடைய பாடல்கள் வழி தெளிவாக அறியமுடிகிறது. பாரதியார் வழி வந்த பாரதிதாசன் நேரடியாகவே இளைஞர்களிடம் நாட்டுப்பற்றை வளர்க்க முயன்றார். ஏனெனில் இப்போதுள்ள இளைஞர்கள் அவர்கள் சுதந்திரமாக வாழவும், பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் முடியும் என்று கருதியிருக்கலாம். இக்கருத்தை வெளிப்படுத்துவதாக பாரதிதாசன், ‘சிறுவர் சிறுமியர் தேசியகீதம்’ என்ற நூலை இயற்றியுள்ளதையும் காணமுடிகிறது.
இந்நூலில் நல்ல பாடல் மெட்டுக்களில் தேசியகீதங்கள், தேசிய விடுகதைகள், தேசிய தாலாட்டுக்கள், தேசிய விளையாட்டுக்கள், சிட்டுக் குருவிப் பாட்டு, நிலாப்பாட்டு, தாய்ப்பாட்டு, தேசியக்கப்பல், தேசியக் கல்யாணப் பாட்டுக்கள் ஆகியவை அமைந்துள்ளன.
பறவைகள் மூலம் விடுதலை உணர்வை வெளிப்படுத்துதல்:
இயற்கையுடன் இயைந்து வாழும் பறவைகள் எப்போதும் யாருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக வாழுகின்றன. இயற்கையிலிருந்து விடுபட்டுச் செயற்கையால் நாகரிக உலகைப் படைக்கும் மனிதன் போட்டி, பொறாமை காரணமாக ஒருவனை ஒருவன் அடிமைப்படுத்தி வாழும் இழிநிலையை உருவாக்குகிறான். இவ்வுண்மையை அடிமையால் துன்புறும் மக்களுக்குப் பறவைகள் எடுத்துரைப்பதாகக் கவிஞர்கள் கவிதைகளை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது.
சாதி, சமய வேறுபாடு, உயர்வு – தாழ்வு மனப்பான்மை, பாவம் நீங்க தருமம் செய்தல், கருமம் நீங்கக் கடவுளை வழிபடுதல், நியாயம் வழங்க நீதிமன்றம் அமைத்தல், பண ஆசை, அச்ச உணர்வு, பிச்சையெடுத்து வாழுதல், வெற்றி தோல்வி பாராட்டுதல், கல்விச் செருக்கு போன்ற செயல்கள் இல்லாமல் பறவைகள் சுதந்திரமாக வாழ்வதைச் சுட்டிக்காட்டி, அவைகளிடம் கற்ற பாடமே ரஷிய நாட்டின் பொதுவுடமை ஆட்சி என்று கருதுகிறார் கவிமணி(2).
பறவைகளின் வாழ்க்கை:
மனிதனிடத்தில் காணப்படும் ஆசை உணர்வும், பொறாமை உணர்வும் அவனை அடிமையாக்குகிறது என்பதை பறவைகளின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுக்காட்டும் நிலை கவிதைகளில் வெளிப்பட்டிருப்பதைத் தெளிவாகப் பார்க்கமுடிகிறது.
நாங்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சுதந்திரமாக வேந்தராகத் திரிவோம். பொருளுக்காகப் பிறரிடம் அடிமைத்தொழில் செய்வதில்லை. நாங்கள் வானத்தையே வாழுமிடாகக் கொண்டு உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும் உணவாக உட்கொண்டு, சமதர்ம வாழ்வை மேற்கொண்டிருக்கிறோம். நாங்கள் கடவுளைத் தொழுது மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம். எள்ளற்குரிய இழிதொழில் செய்து வாழ்வது உன் குலத்திற்கே உரியது என்று மனிதனை நோக்கிச் சிட்டுக்குருவி இடித்து உரைப்பதாகவும், நீங்கள் அன்பு, சத்தியம், தர்மம் இவற்றைக் கைக்கொண்டு அச்சத்தைவிட்டு ஆண்மையுடன் இருந்தால் துன்பங்கள் அனைத்து ஒழிந்து விடுதலை கிடைக்கும் என்று குருவி மனிதனுக்கு ஆலோசனைக் கூறுவதாகவும், குருவியின் மூலம் சுதந்திர உணர்வையும், அடிமையின் அவலநிலையையும் வெளிப்படுத்திக் காட்டுகிறார் பாரதியார்(3).
பேசாத இயல்புடைய பறவைகளின் சுதந்திர வாழ்வை எடுத்துக்காட்டிப் பேசும் இயல்புடைய மனித இனத்தின் இழிநிலையைக் குறிப்பாக இடித்துரைக்கும் நிலை கவிதைகளில் வெளிப்பட்டிருப்பது புதுமையான ஒன்று எனலாம்.
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகளில் பழைய வரலாற்றுக் கதைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. பாரதியார் கவிதைகள், பக்.258-260, 266-268.
2. தேசிக விநாயகம்பிள்ளை, மலரும் மாலையும், பக்.115-118.
3. பாரதியார் கவிதைகள், பக்.686-689.
Sponsorship






0 கருத்துகள்