நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகள் - பழைய வரலாற்றுக் கதைகள், வீர வரலாறு, பழங்கதைகள்
இயற்கையுடன் இயைந்து வாழும் பறவைகள் எப்போதும் யாருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக வாழுகின்றன எனவும், இயற்கையிலிருந்து விடுபட்டுச் செயற்கையால் நாகரிக உலகைப் படைக்கும் மனிதன் போட்டி, பொறாமை காரணமாக ஒருவனை ஒருவன் அடிமைப்படுத்தி வாழும் இழிநிலையை உருவாக்குகிறான் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகளில் பழைய வரலாற்றுக் கதைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- பழைய வரலாற்றுக் கதைகள்
- வீர வரலாறு
- பழங்கதைகள்
பழைய வரலாற்றுக் கதைகள்:
பழங்காலம் முதல் தற்காலம் வரை மக்களிடையே வீர உணர்வையும், இன்ப உணர்வையும் தூண்டும் கருவியாக வரலாற்றுக் கதைகள் திகழ்கின்றன. நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பழங்காலக் கதைகள் மூலம் இக்கால மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்கவேண்டும் என்ற உணர்வு கவிஞர்களிடையே வெளிப்பட்டது. அவ்வுணர்வின் வெளிப்பாடாக பாரதியார்(1), ‘பாஞ்சாலி சபதம்’ என்ற பாடலைப் பாடினார். துரியோதனனுடைய கொடுங்கோல் ஆட்சியை அழிக்க, பாஞ்சாலி சபதம் செய்ததைப் போல ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை அகற்றப் பாரத மக்கள் சபதம் செய்யவேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடே இப்பாடல் உருவாவதற்கான சூழல் எனக் கூறலாம்.
தமிழச் சாதிக்கு புதிய வாழ்வு தரவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கும் பராசக்தியே என்னை ‘பாஞ்சாலி சபதம்’ எழுதத் தூண்டினாள். பாஷாபிமானிகளும், தேசாபிமானிகளும் அவசியம் படிக்கவேண்டிய புஸ்தகம் என்று சுப்பிரமணிய சிவாவும் தம் உணர்வை வெளிப்படுத்தியிருப்பதை நோக்கும்போது தமிழ் மக்களிடையே வீர உணர்வைத் தூண்டவே இப்பாடல் எழுதப்பட்டது என ஊகிக்கமுடிகிறது.
வீர வரலாறு:
நாட்டின் பழம்பெருமையைச் சத்திரபதி சிவாஜி வீர உரையாக தன் சைத்தன்யத்திற்கு கூறியதையும், குரு கோவிந்தர், ஒளரங்கசீப் ஆட்சியை ஒழிக்க தன் உயிரையே தியாகம் செய்யும் ஆற்றல் வாய்ந்த தேச பக்தர்களை உருவாக்கி கொடுங்கோல் ஆட்சியை ஒழித்ததையும் பாரதியார்(2) கதைப் பாடலாக வெளிப்படுத்தியுள்ளார். சிவாஜி, குரு கோவிந்தர் போன்றோர்களின் வீர வரலாற்றை எடுத்துக் காட்டி அவர்களைப் போல் பாரத மக்களும் தேசபக்தியுடன் செயல்பட்டால் நாம் அடிமை இருளிலிருந்து விடுபட்டுச் சுதந்திரம் பெறமுடியும் என்பதை உணர்த்தவே இக்கதைப் பாடல்களை எழுதினார் என்றும் கருதலாம்.
முன்பு துச்சாதனால் பாஞ்சாலியின் ஆடை பறிக்கப்பட்டதைக் கண்ட கண்ணபிரான் அவளுக்கு ஆடை கொடுத்து அவளின் மானத்தைக் காப்பாற்றியது போல ஆடையை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் பாரதத்தாய் பெற்ற மக்களுக்குப் பிறரை எதிர்பாராமல் தானே பஞ்சினால் ஆடை செய்து உடுத்திக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தத் தோன்றியவரே கண்ணக்காந்தி என்பதை ‘அன்னைக்கு ஆடை வளர்க’ என்ற பாடலாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளார் பாரதிதாசன்(3).
பழங்கதைகள்:
துரியோதனன், இராவணன் போன்றோர் தன் நாட்டைப் பிறருக்கு அடிமைப்படுத்தாமல் இருந்த நிலையை,
“நெஞ்சிலூறிக் கிடந்த தம் பூமியை
நேரில் மற்றவர் ஆண்டிடப் பார்த்திடும்
பஞ்சையன்று, துரியன் இராவணன்
பாரத குலம் வேண்டிடும் பண்பிதே”
என்ற பாடலாக வெளிப்படுத்திக்காட்டி, இராவணன், துரியோதனன் போன்று, தன் நாட்டைப் பிறரிடம் விட்டுக்கொடுக்காத பண்பு இந்தியர்களிடம் வளரவேண்டும். தன்னையே விற்று அடிமையாக வாழும் மனப்பான்மை அழியவேண்டும். விபிஷ்ணனைப் போல் ஆங்கிலேயர்களிடம் நாட்டைக் காட்டிக்கொடுக்காமல் இருக்க வேண்டும். இராவணன், துரியோதனன் ஆகியோர்களின் தீச்செயல்களை எடுத்துக் கொள்ளாமல் அவர்களின் நெஞ்சுறுதியை இந்தியர்கள் பெறவேண்டும் என்றும், விபிஷ்ணனின் நல்ல பண்புகளை எடுத்துக்கொள்ளாமல் அவனுடைய தீச்செயலை மட்டும் எடுத்துக்காட்டி இந்தியர்களிடம் அத்தகைய காட்டிக்கொடுக்கும் பண்பு வளரக்கூடாது என்றும் பாரதிதாசன்(4) வெளிப்படுத்தியுள்ளதைப் பார்க்கமுடிகிறது.
விபிஷ்ணன், தருமன், துரோபதி, பற்குணன், இராவணன், பரதன், இந்திரஜித்து, சிபி மன்னன், மனுநீதி சோழன், பாண்டிய நெடுஞ்செழியன், கண்ணகி, புத்தன் போன்றோர்களின் கதைகள் மூலம் நாட்டின் சிறப்பை வெளிப்படுத்துகிறார் ராய. சொக்கலிங்கம்(5). பாஞ்சாலியின் துயரம் போன்றது கதராடை நெய்யும் பெண்ணின் துயரம் என்று கவிமணி(6) வெளிப்படுத்தியுள்ளார். கண்ணன், அனுமன் போன்றோர் முன்பு தூது சென்றதைப் போல காந்தியடிகள் லண்டனுக்குத் தூது சென்றார் என்று குற்றாலம் பிள்ளையும் பழங்கதைகள் மூலம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியுள்ளதையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகளில் பிறநாடுகளின் விடுதலை வரலாறு பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. சுப்பிரமணிய பாரதியார், பாஞ்சாலி சபதம், முகவுரை.
2. பாரதியார் கவிதைகள், பக்.182-187, 200-206.
3. பாரதிதாசன் கவிதைகள், தொகுதி-4, பக்.216-218.
4. பாரதிதாசன் கவிதைகள், தொகுதி-1, ப.184.
5. ராய. சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.264-266.
6. தேசிக விநாயகம்பிள்ளை, மலரும் மாலையும், ப.184.
Sponsorship




0 கருத்துகள்