நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள்- 10: விளக்குமுறை உத்திகள் - நாட்டுப்புறப் பாடல் விளக்குமுறை, பழைய இலக்கிய விளக்குமுறை
பழங்காலம் முதல் நாட்டுப்புற மக்களால் பாடப்பட்டு வரும் கும்மிப்பாட்டு, கோலாட்டப் பாட்டு, அம்மானைப் பாட்டு, ஏலேலோ–ஐலேசா பாட்டு, பஜனைப்பாட்டு, ஏலப்பாட்டு, தாலாட்டுப் பாட்டு, ஊசல் பாட்டு ஆகியப் பாடல்களைப் பாடினால் நாட்டுப்புற மக்களிடம் எளிதில் விடுதலை உணர்வை வளர்க்கலாம் என முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் விளக்குமுறை உத்தியில் உள்ள நாட்டுப்புறப் பாடல் விளக்குமுறை பற்றி சிலத் தகவல்களையும், பழைய இலக்கிய விளக்குமுறை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- தாலாட்டுப் பாடல்
- மகாத்மா காந்தி அம்மானை
- பழைய இலக்கிய விளக்குமுறை
- காந்தி திருப்பள்ளியெழுச்சி
தாலாட்டுப் பாடல்:
‘புதிய கோணங்கி’ என்ற பாடலில் பாரதியார், ‘இந்திய நாட்டுக்கு நல்ல காலம் வருகுது. அடிமை வாழ்வும் துன்பமும் தொலையுது’(1) என்று குடுகுடுப்பைக்காரன் பாடுவதாக வெளிப்படுத்தியுள்ளார். குடுகுடுப்பைக்காரன் சொல்வதை உண்மை என நம்பி வாழ்ந்த அக்கால மக்களுக்கு அக்குடுகுடுப்பைக்காரன் மூலமாகவே விடுதலை உணர்வைத் தூண்டும் பாங்கு புதுமையானது.
குழந்தைகளைத் தூங்க வைக்கவும், நோயாளிகளை நோயிலிருந்து விடுவிக்கவும், இறைவனை வழிபடவும், தாலாட்டுப் பாடல்களைப் பாடுவது நாட்டுப்புற மக்களின் பழக்கமாகும். இப்பழக்க முறையைப் பின்பற்றி விடுதலை உணர்வைத் தூண்டும் தாலாட்டுப் பாடல்களைப் பாடக் கவிஞர்கள் முன்வந்தனர்.
தூங்க வைக்கும் பெண் குழந்தைக்கு நாட்டின் சிறப்புக்களைக் கூறி தாலாட்டுவதாக ‘தாலாட்டு’(2) என்ற பாடலை ராய.சொக்கலிங்கம் வெளிப்படுத்தி உள்ளார்.
குழந்தைக்குத் தாலாட்டு பாடி தூங்கவைக்க எண்ணும் தாய் அக்குழந்தைக்கு,
“தவ மகனாம் காந்தி மகான்
தருமநெறி தழையும்
நவ யுகத்தே வந்துதித்த
நல்லரசே வாழியவே”(3)
என்ற பாடல் மூலம் காந்திய உணர்வை ஊட்டுவதாகப் பாடியுள்ள திறன் போற்றத்தக்கது. பாரதிதாசன் பாடியுள்ள தாலாட்டுப் பாடல்களும் குழந்தைகளிடம் விடுதலை உணர்வை வளர்ப்பதாக அமைந்துள்ளன.
மகாத்மா காந்தி அம்மானை:
முத்துசாமியின் ‘பாரத தேவி பஜனை’, ‘கோவிந்தசாமி நாயக்கரின் ‘சிங்காரத் தெம்மாங்கு’, ‘முகைதீன் அப்துல் காதர் ராவுத்தரின் ‘இந்து-முஸ்லீம் ஒற்றுமை சிங்காரத் தங்கப்பாட்டு’ ஆகிய பாடல்கள் நாட்டுப்புற மக்களிடையே நிலவி வந்த ‘பஜனை’, ‘தெம்மாங்கு’, ‘தங்கப்பாட்டு’ போன்ற பாடல்கள் மூலம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
அம்மானை, ஊசல் என்ற இரண்டும் பெண்களுக்குரிய விளையாட்டுக்களாகும். இவ்விளையாட்டுக்களில் ஈடுபடும் பெண்களிடம் காந்தி உணர்வைத் தூண்ட முகைதீன் அப்துல் காதர், ஆதித்தர், வி.நடராஜப்பிள்ளை ஆகிய மூவரும் ‘மகாத்மா காந்தி அம்மானை’ போன்ற பாடல்களைப் பாடினர். ஊசல் ஆடும் பெண்களுக்கு காந்திய உணர்வை வளர்க்க ‘காந்தி திருப்பொன்னூசல்’ என்ற பாடலை வெளிப்படுத்தியுள்ளார் ராய.சொக்கலிங்கம்.
நாட்டுப்புற மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்ட அவர்கள் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களைப் பின்பற்றியே தேசியக் கவிதைகளைக் கவிஞர்கள் வெளிப்படுத்தும் நிலையும் அக்காலத்தில் நிலவியதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
பழைய இலக்கிய விளக்குமுறை:
பழைய தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த கவிஞர்கள் தம் புலமையை வெளிப்படுத்தவும், நாட்டுப்பற்றைத் தூண்டவும் பழைய உணர்வுகள் வழி விடுதலை உணர்வைத் தூண்ட முயன்றுள்ளதை அவர்களின் கவிதைகள் வழி காணமுடிகிறது. திருப்பள்ளியெழுச்சி, நவரத்னமாலை, திருத்தசாங்கம், பஞ்சரத்ன மாலை, பள்ளு, குறவஞ்சி, பிள்ளைத் தமிழ், பஞ்சகம், சிந்தாமணி, வெண்பா, சதகம், தூது, அந்தாதி, பாமாலை, இருபா இருபஃது, திருப்பொன்னூசல், நான்மணிமாலை, திருப்புகழ், திருத்தாண்டகம் போன்ற இலக்கிய வகைகளின் பிரதிபலிப்பாக தேசபக்திப் பாடல்களைக் கவிஞர்கள் வெளிப்படுத்த இருப்பது போற்றத்தக்கது.
தலைவனை உறங்கச் சொல்லுதல் பற்றியும், விழித்தெழச் செய்தல் பற்றியும் கண்படைநிலை எனவும், துயிலெடை நிலை எனவும் தொல்காப்பியம் புறத்திணையியல் வெளிப்படுத்திக் காட்டுகிறது. தூங்குகின்றவர்களை விடியலில் தூக்கத்திலிருந்து விழித்தெழச் செய்யும் நிலை பிற்காலத்தில் ‘பள்ளியெழுச்சி’ என்று அழைக்கப்பட்டது. கடவுளைத் துயிலெழுப்ப மாணிக்கவாசகரும், தொண்டரடிப் பொடியாழ்வாரும் பள்ளியெழுச்சிப் பாடியுள்ளனர். கடவுளை வழிபடத் தூங்குகின்ற பெண்களை துயில் எழுப்ப, ‘திருப்பாவை’ என்ற பாடலைப் பாடியுள்ளார் ஆண்டாள். துயில் எழுப்பும் இம்மரபை பின்பற்றி, கவிஞர்கள் தேசபக்தியை உள்ளடக்கமாகக் கொண்ட பள்ளியெழுச்சியைப் பாடியுள்ளனர். அடிமையால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் பாரத மக்கள் அவ்வடிமை நிலையிலிருந்து நீங்க உன்னை வணங்குவதற்குச் சூழ்ந்திருக்கும்போது பாரதமாதாவே நீ தூங்கலாமா? பள்ளி எழுந்தருள்க என பாரத மாதாவுக்கு பள்ளியெழுச்சிப் பாடுகிறார் பாரதியார்(4).
காந்தி திருப்பள்ளியெழுச்சி:
பாரத மாதா மாலையணிந்து மணிமுடி சூட காரிகையர்கள் பாரத மாதாவை பள்ளியெழுப்புவதாக கண்ணமுருகனாரும்(5), துயில் கொண்டிருக்கும் சுதந்திர தேவியை தேசத் தொண்டர்கள் பள்ளியெழுப்புவதற்காக கி.வா. ஜகந்நாதனும் தம் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
அடிமையிலிருந்து விடுபட பாரதமக்கள் ஒன்றுசேர்ந்து காங்கிரஸ் பொன்விழாக் கொண்டாடுவதைக் காண ஆரியர் தேவியே; விடுதலைத் தாயே; அம்பிகையே; பள்ளியெழுந்தருள்க! என்று காங்கிரஸ் பொன்விழாப் பள்ளியெழுச்சிப் பாடுகிறார் ச.து.க. யோகியார்.
இந்திய நாடு அடிமையிலிருந்து விடுதலை பெற காந்தியைத் தலைமையேற்று நடத்தும்படி தூங்குகின்ற காந்தியைப் பாரதமக்கள் துயில் எழுப்புவதாகக் காந்தி திருப்பள்ளியெழுச்சி பாடியுள்ளார் ராய.சொக்கலிங்கம்(6).
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் விளக்குமுறை உத்தியில் உள்ள பழைய இலக்கிய விளக்குமுறை பற்றி மேலும் சிலத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. பாரதியார் கவிதைகள், பக்.505-506.
2. ராய சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.231-235.
4. பாரதியார் கவிதைகள், பக்.146-147.
5. கண்ண முருகணார், சுதந்திர கீதம், ப.4.
6. ராய.சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.182-184.
Sponsorship




0 கருத்துகள்