நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கவிஞர்கள் கையாண்ட உத்திகள் - நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள்- 9: விளக்குமுறை உத்திகள் - நாட்டுப்புறப் பாடல் விளக்குமுறை
காந்தியக் கவிஞர்கள் நாட்டுப்பற்றை இசையுடன் இணைத்துப் பாடுவதில் வல்லவர்களாக இருந்தனர் எனவும், காந்திய காலத்தில் நாடகத்துறை நாட்டுப்பற்றை வளர்ப்பதில் பெரும்பங்கு கொண்டிருந்ததால், அக்காலத்தில் தோன்றிய பெரும்பாலான தேசியப் பாடல்கள் ராகம், தாளம், பல்லவி, அனுபல்லவி, சரணம் போன்ற உறுப்புக்களுடன் பாடப்பட்டிருக்கின்றன எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் விளக்குமுறை உத்தியில் உள்ள நாட்டுப்புறப் பாடல் விளக்குமுறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- நாட்டுப்புறப் பாடல் விளக்குமுறை
- வந்தே மாதரக் கும்மிகள்
- புதுமை மணக்கும்மி
- தொழிலாளர்களிடையே விடுதலை உணர்வு
நாட்டுப்புறப் பாடல் விளக்குமுறை:
பழங்காலம் முதல் நாட்டுப்புற மக்களால் பாடப்பட்டு வரும் கும்மிப்பாட்டு, கோலாட்டப் பாட்டு, அம்மானைப் பாட்டு, ஏலேலோ–ஐலேசா பாட்டு, பஜனைப்பாட்டு, ஏலப்பாட்டு, தாலாட்டுப் பாட்டு, ஊசல் பாட்டு ஆகிய நாட்டுப்புறப் பாடல்களைப் பின்பற்றி பாடல்களைப் பாடினால் நாட்டுப்புற மக்களிடம் எளிதில் விடுதலை உணர்வை வளர்க்கலாம் என்ற நம்பிக்கையுடன் சில கவிஞர்கள் நாட்டுப்புறப் பாடல் மெட்டுக்களில் தேசியப் பாடல்களைப் பாடியிருக்க வேண்டும்.
நாட்டுப்புறப் பாடல்கள் தனி ஒருவரின் உணர்ச்சி வெளிப்பாடாக அமையாமல் ஒரு கூட்டத்தினரின் உணர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதால்(1) அக்கூட்டத்தினரின் உணர்ச்சிகளை விடுதலை உணர்ச்சியாக மாற்ற அவர்களின் நாட்டுப்புறப் பாடல்களைப் பின்பற்றி தேசியப் பாடல்களைக் கவிஞர்கள் பாட முன்வந்தனர்.
வந்தே மாதரக் கும்மிகள்:
‘யானையைக் கொண்டு யானையைப் பிடிப்பதைப் போல்’ நாட்டுப்புற மக்கள் பழக்கப்பட்ட முறையிலேயே அவர்களுக்குக் கருத்துக்களை எடுத்துரைக்கும் உத்தியாகப் பாரதியார் நாட்டுப்புறப் பாடல் உத்தியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்கிறார் திருநாவுக்கரசு(2). பாரதியாரைப் பின்பற்றியே விடுதலை உணர்வைத் தூண்ட பிற்காலக் கவிஞர்களும் நாட்டுப்புறப்பாடல் மெட்டுக்களைப் பயன்படுத்த முயன்றனர்.
நாட்டுப்புறங்களில் பெண்கள் இரவில் கும்மிப் பாடல்களைப் பாடுவது மரபாக இருந்து வருகிறது. இம்மரபையொட்டி பெண்களிடம் விடுதலை உணர்வைத் தூண்ட தேசியப் பாடல்களைக் கும்மிப் பாடல்களாக அமைக்கும் மரபு கவிஞர்களிடம் இருந்து வந்ததை உணர முடிகிறது.
கிருஷ்ணசாமி ஐயர் வந்தே மாதரத்தின் சிறப்புக்களை உணர்த்த ‘வந்தே மாதரக் கும்மிகள்’ என்ற பாடலைப் பாடியுள்ளார். அவரைத் தொடர்ந்து இந்திய நாட்டின் சிறப்புக்களை உணர்த்துவதாக மாதவையா ‘இந்தியக் கும்மி’ என்ற பாடலையும், நாமக்கல் கவிஞர் ‘நாட்டுக் கும்மி’ என்ற பாடலையும், சுத்தானந்த பாரதியார் ‘இந்திய சரித்திரக் கும்மி’ என்ற பாடலையும் பாடியுள்ளனர்.
புதுமை மணக்கும்மி:
முதல் உலகப்போரின் நிகழ்ச்சிகளை ‘ஐரோப்பிய யுத்தக் கும்மி’ என்ற பாடலாக வெளிப்படுத்தியுள்ளார் நடேச சாஸ்திரி. பாரத மாதாவின் அடிமை நிலையைக் கண்டு மனமிரங்கிய ஆர்.ஐயர் என்பவர் அவ்வடிமை நிலையை முற்றிலும் அகற்ற வேண்டும் என்ற உள்ள உணர்வை ‘பாரத மாதா பலாந்தகக் கும்மி’ என்ற பாடலின் மூலம் உணர்த்தி உள்ளார். பெத்தன்னச் செட்டியார் மதுவினால் வரும் கேடுகளை தெளிவுப்படுத்திக்காட்டி மதுவினை அகற்றவேண்டும் என்பதனை ‘மதுவிலக்குக் கொம்மி’ என்ற பாடலாக வெளிப்படுத்தியுள்ளதையும் காணமுடிகிறது.
மகாத்மா காந்தியின் கொள்கைகளையும், சிறப்பையும் உணர்த்த ‘மகாத்மா காந்தி கும்மியும் தெம்மாங்கும்’ என்ற பாடலைப் பொன்னுசாமிப் பிள்ளையும், ‘காந்தி சரித்திரக் கும்மி’ என்ற பாடலை ரங்கம்மாளும், ‘கும்மி’ என்ற பாடலை ராய.சொக்கலிங்கமும் நாட்டுப்புற மக்களை தூண்ட முன்வந்ததைத் தெளிவாகக் காண முடிகிறது.
அன்னியர் ஆட்சியால் ஏற்பட்டுள்ள அடிமை நிலையை அகற்ற தருமபுரிக்கு அருகில் உள்ள அன்னசாகரம் என்ற ஊரின் மாதர்களை ஒன்று திரட்டிக் கும்மியடிக்க வேண்டுகோள் விடுக்கிறார் அய்யன் பெருமாள். இவர் 1941-இல் அலிபுரம் சிறையில் இருக்கும்போது அன்னசாகரம் மாதர்களிடையே விடுதலை உணர்வை வளர்க்க ‘புதுமை மணக்கும்மி’ என்ற பாடலை எழுதி அனுப்பினார்(3).
தொழிலாளர்களிடையே விடுதலை உணர்வு:
சுதந்திரம் பெற்ற மகிழ்ச்சியைப் பெண்கள் கும்மியடித்துக் கொண்டு வெளிப்படுத்த வேண்டும் என்ற உணர்வு கவிஞர்களிடம் வெளிப்பட்டதை,
“கொஞ்சும் மதிமுகக் கோதைகள் - இன்று
கும்மியடித்திட வாருங்கடி
செஞ்சுடர் வீசும் சுதந்திர தேவியின்
சேவடி எண்ணி அடிப்போமடி”(4)
என்ற பாடல் தெளிவாக உணர்த்துகிறது.
பெண்கள் கோலடித்துக் கொண்டு பாடல்களைப் பாடும் வழக்கம் இன்றும் கிராமப்புறங்களில் இருந்து வருகிறது. இம்மரபு மூலம் விடுதலை உணர்வை வெளிப்படுத்த முற்பட்ட கவிஞர் ஒருவர். தேசபக்தர்களான பாரதி, காந்தி, நேரு ஆகியோரின் சிறப்புக்களைப் பெண்கள் கோலடித்துக் கொண்டு பாட வேண்டுகோள் விடுக்கிறார்.
மீனவர்களும் மற்ற தொழிலாளர்களும் கடின உழைப்பில் ஈடுபட்டிருக்கும்போது துன்பத்தைக் குறைக்க ‘ஏலேலோ-ஐலேசா’ போன்ற சொற்களை பாடலாகப் பாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இம்மரபைப் பின்பற்றி விடுதலை உணர்வை,
“இந்த ராஜ்யம் ஏலேலோ என்னும் கரையை
விளங்கிடவே ஏலேலோ செய்திடலாம்”
என்ற பாடலை அமைத்துத் தொழிலாளர்களிடையேயும் விடுதலை உணர்வைத் தூண்ட கவிஞர்கள் விரும்பியதைப் பார்க்க முடிகிறது.
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் விளக்குமுறை உத்தியில் உள்ள நாட்டுப்புறப் பாடல் விளக்குமுறை பற்றி மேலும் சிலத் தகவல்களையும், பழைய இலக்கிய விளக்குமுறை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. மு.வரதராசன், இலக்கிய மரபு, ப.39.
2. க.த. திருநாவுக்கரசு, தமிழ்க் கவிதையில் பாரதியின் தாக்கம், ப.130.
3. அய்யன் பெருமாள், ‘புதுமை மணக்கும்மி’, வே.பச்சியப்பன் (தொ.ஆ.), கையெழுத்துப் பிரதிகள்.
4. மரியப்பிரகாசம் (தொ.ஆ.), தேசிய கீதங்களும் நாடோடிப் பாடல்களும், ப.24.
Sponsorship





0 கருத்துகள்