நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கவிஞர்கள் கையாண்ட உத்திகள் - நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள்- 8: விளக்குமுறை உத்திகள் - இசை விளக்குமுறை
விடுதலை உணர்வை வெளிப்படுத்தவும், அதை மக்களிடையே வளர்க்கவும் கவிஞர்கள் சில விளக்குமுறை உத்திகளைக் கவிதைகளில் கையாண்டு உள்ளனர் எனவும், அவ்வுத்தி முறைகள் உள்ளடக்கத்தை விளக்குவதற்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை எனவும், உள்ளடக்கத்திற்கு புதிய உணர்வையும் புதிய வடிவத்தையும் கொடுக்க உருவாக்கப்பட்டன எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் விளக்குமுறை உத்தியில் உள்ள இசை விளக்குமுறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- இசை விளக்குமுறை
- காங்கிரஸ் பாட்டு
- கட்டபொம்மன் பாடல் மெட்டு
இசை விளக்குமுறை:
பாரதியார் எழுதிய சில தேசியப் பாடல்களுக்கு ராகம், தாளம், பல்லவி, சரணம் போன்ற உறுப்புகள் உணர்வையும், வலிமையையும் தருவதாக அமைந்துள்ளன. காந்தியக் கவிஞர் என்று கருதப்படும் நாமக்கல் கவிஞர் ஓரிரு பாடல்களில் மட்டுமே இவ்வுறுப்புக்களைப் பயன்படுத்தியுள்ளார். காந்திய காலத்தில் வாழ்ந்த பாஸ்கரதாஸ், சதாசிவதாஸ், இலட்சுமணதாஸ், பீர்முகம்மது சாகிப் போன்ற காந்தியக் கவிஞர்களும் நாட்டுப்பற்றை இசையுடன் இணைத்துப் பாடுவதில் வல்லவர்களாக இருந்ததை அவர்களின் பாடல்கள் வழி அறியமுடிகிறது. காந்திய காலத்தில் நாடகத்துறை நாட்டுப்பற்றை வளர்ப்பதில் பெரும்பங்கு கொண்டிருந்ததால், அக்காலத்தில் தோன்றிய பெரும்பாலான தேசியப் பாடல்கள் ராகம், தாளம், பல்லவி, அனுபல்லவி, சரணம் போன்ற உறுப்புக்களுடன் பாடப்பட்டிருக்கின்றன.
பாடல்களுக்கு ஏற்ற உணர்வைக் கொடுத்து உள்ளடக்கத்தை தெளிவுப்படுத்த பாடல் மெட்டுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாடல் மெட்டுக்கள், பழைய நிகழ்ச்சியைப் போலவே இந்நிகழ்ச்சியும் என்பதனை வெளிப்படுத்தவும், பழைய நிகழ்ச்சியுடன் ஒப்புமைக்காட்டி புதிய உள்ளடக்கத்திற்கு புதிய உணர்வைத் தரவும் மெட்டுக்கள் பயன்படுத்தப்பட்டன. வந்தே மாதர மந்திரத்தின் சிறப்பை உணர்த்த விரும்பிய பாரதியார், ‘தாயுமானவரின் ஆனந்தக் களிப்பு மெட்டை’ வந்தேமாதரத்துடன் இணைத்துப் பாடியுள்ள திறன் புதுமையாக உள்ளது. கோபால கிருஷ்ண கோகலேவின் மிதவாதச் செயலை வெளிப்படுத்த, இராமலிங்க ஸ்வாமிகளின் பாடல் மெட்டைப் பின்பற்றியுள்ளார். சோமசுந்தர பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை மெட்டைப் பின்பற்றி, பாரத மக்களின் அடிமைநிலை, மிதவாதிகளின் இழிச்செயல்கள், வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வீர உரைகள், ஆங்கிலேயர்களின் அநியாய பேச்சுக்கள் போன்றவற்றை வெளிப்படுத்தியுள்ளார் பாரதியார்(1).
காங்கிரஸ் பாட்டு:
பாரதியாரைத் தொடர்ந்து வந்த நாமக்கல் கவிஞர் மெட்டுக்களைப் பயன்படுத்தவில்லை என்றே கூறலாம். காந்தியக் கவிஞர்கள் பழைய பாடல் மெட்டுக்களையும், பாரதியாரின் பாடல் மெட்டுக்களையும், புதிய பாடல் மெட்டுக்களையும் தமது தேசியப் பாடல்களில் பயன்படுத்தியுள்ளனர். நாட்டு மக்களின் உள்ளங்களில் வேரூன்றியிருந்த பழைய பாடல் மெட்டுக்கள் மூலம் விடுதலை உணர்வைத் தூண்ட வேண்டும் என்பது பாரதியாரின் குறிக்கோளாக இருந்திருக்கலாம். பாரதியாரின் இம்மரபைப் பற்றியே காந்தியக் கவிஞர்களும் தேசியப் பாடல்களை மெட்டுக்களுடன் பாடினர் என்றும் கூற முடியும். தியாகராச செட்டியார் எழுதியுள்ள ‘காங்கிரஸ் பாட்டு’ என்ற நூல் பல பாடல் மெட்டுக்களில் அமைந்துள்ளது.
‘சுதந்திர நாதம்’ என்ற நூலை எழுதிய மணியவர்மன் ‘ஐந்து கரணுக்கிளை’, ‘மேரேமைல புலாலோ’, ‘கல்லோ சொல்லாய் மனது’, ‘ஏத்துக புகு’, ‘நாத சங்கீத’, ‘ஏறு மயிலேறு விளையாடு முகம்’, ‘பாரெங்கும் புகழ் பெறு சரபம்’, ‘தய சூடவே’, ‘சரக கார மாமா’, ‘சாது ஐனோர்த்தனராமா’, ‘தண்டாயுத குரு மலரடி’ , ‘வருத்து வதழகோ’, ‘ஸ்ரீராம பாதமா’ போன்ற பாடல் மெட்டுக்களில் பகவத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் சிறப்புக்களை அவலச்சுவை மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இம்மூவரின் சிறப்புக்களைப் புலவர் குழந்தையவர்களும் பல பாடல் மெட்டுக்களில் வெளிப்படுத்தியுள்ளார்(2).
கட்டபொம்மன் பாடல் மெட்டு:
மது அருந்துவதால் வரும் கேட்டை கணவனுக்கு மனைவி கூறுவதாகக் கட்டபொம்மன் பாடல் மெட்டில் பழனிவேலு பாடியுள்ளார். கதரின் சிறப்பை வெளிப்படுத்த பாரதியாரின் ‘ஞானத்திலே பரமோனத்திலே’ ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ போன்ற பாடல் மெட்டுக்களை அருணகிரிநாதர்117 பயன்படுத்தியுள்ளார். மகாத்மா காந்தியின் சிறப்புக்களை வெளிப்படுத்த பாரதியாரின் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’, ‘தாயின் மணிக்கொடி’, ‘விடுதலை விடுதலை’, ‘ஓம் சக்தி ஓம் சக்தி’ போன்ற பாடல் மெட்டுக்களை நடராஜக் கவிராயர் பயன்படுத்தியுள்ளார்.
சுபாஷ் சந்திரபோஸ், பண்டிட் ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, சுப்பிரமணிய பாரதியார், மகாத்மா காந்தி போன்றோரின் சிறப்புக்களைப் பல பாடல் மெட்டுக்களில் வெளிப்படுத்தியுள்ளார் நடராஜக் கவிராயர்.
மக்களின் மனதில் நன்கு வேரூன்றியிருந்த பாடல் மெட்டுக்களைப் பின்பற்றி தேசியப் பாடல்களை உருவாக்கி மக்களிடம் விடுதலை உணர்வைத் தூண்டுவதே அக்கால கவிஞர்களின் நோக்கமாக இருந்திருக்கலாம்.
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் விளக்குமுறை உத்தியில் உள்ள நாட்டுப்புறப் பாடல் விளக்குமுறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. பாரதியார் கவிதைகள், பக்.133-135, 187-195.
2. புலவர் குழந்தை, புலவர் குழந்தைப் பாடல்கள், பக்.218-231.
Sponsorship



0 கருத்துகள்