நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கவிஞர்கள் கையாண்ட உத்திகள் - நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள்- 7: யாப்பமைப்பு உத்திகள், விளக்குமுறை
கவிதைகளுக்கு உருவத்தையும் ஓசை நயத்தையும் இனிமையையும் தருவது யாப்பு ஆகும். யாப்பமைப்பு இல்லாத கவிதை உயிரில்லாத உடல் போன்றது; மனமில்லாத மலர் போன்றது. எதுகை, மோனை, இயைபு, அளபெடை ஆகியன இன்றியமையாத யாப்பமைப்பு உறுப்புக்களாகும் என முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் யாப்பமைப்பு உத்திகள் பற்றி மேலும் சில தகவல்களையும், விளக்குமுறை உத்திகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- இயைபு
- விளக்குமுறை உத்திகள்
- இசை விளக்குமுறை
இயைபு:
சுதந்திரம் பெற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்த ‘அம்’ என்ற தொடர் இறுதி இயைபையும், தமிழகத்துக்குச் சுதந்திரத்தின் பெருமையை விளித்துக்காட்ட ‘ஆ’ என்ற தொடர் இயைபையும் தங்கவேலு தமது பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
அலி சகோதரர்களின் நாட்டுப்பற்றை உணர்த்த ‘அர்’ என்ற இயைபை பாஸ்கரதாசும்(1), நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் ஆற்றலைப் புலப்படுத்த ‘ஆன்’ என்ற இயைபை சுருளியாண்டிப் பாவலரும்(2), கதரின் சிறப்பை விளக்க ‘அம்’ என்ற இயைபை அருணகிரிநாதரும் தொடர்களின் இறுதியில் அமைத்து தங்களின் கருத்துக்கு உணர்ச்சியூட்டுவதையும் காணமுடிகிறது.
சுதந்திரம் பெற்ற மகிழ்ச்சியை வெற்றி முரசு கொட்டிக் கொண்டாடவேண்டும் என்பதை ‘ஆ’ என்ற இயைபின் மூலமும், சுதந்திரம் பெற மக்கள் அடைந்த இன்னல்களை ‘ஏ’ என்ற இயைபின் மூலமும் தொடர்களை அமைத்துள்ளார் எஸ்.ஜி.ராமசாமி
டி.பிரகாசம், பகவத்சிங் ஆகியோரின் பெருமைகளை ‘ஏ’ என்ற இயைபின் மூலம் தியாகராச செட்டியாரும், இந்திய மக்களின் இழிநிலையை ‘ஆர்’ என்ற இயைபு மூலம் வாலமும்(3) தொடர் இறுதியில் அமைத்துக் கருத்துக்கு உணர்வைத் தந்துள்ளனர்.
உப்புச் சட்டத்தினை தடுக்கவேண்டும் என்பதனை வெளிப்படுத்த ‘ஓம்’ என்ற இயைபை நடராஜபிள்ளையும்(4), வெள்ளையனே வெளியேறு போராட்ட நிகழ்ச்சிகளை உணர்த்த ‘ஆம்’ என்ற இயைபைக் கந்தசாமியும் வெளிப்படுத்தியுள்ளனர்.
விடுதலைப் போராட்டக் கவிஞர்கள் தங்களின் கருத்துக்களுக்கு உணர்வு கொடுக்கத் தொடர்களின் இறுதியில் இயைபைப் பயன்படுத்திப் பாடல்களைப் பாடியுள்ளதை அவர்களுடைய கவிதைகள் தெளிவாக உணர்த்தியுள்ளன.
விளக்குமுறை உத்திகள்:
விடுதலை உணர்வை வெளிப்படுத்தவும், அதை மக்களிடையே வளர்க்கவும் கவிஞர்கள் சில விளக்குமுறை உத்திகளைக் கவிதைகளில் கையாண்டு உள்ளனர். அவ்வுத்தி முறைகள் உள்ளடக்கத்தை விளக்குவதற்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை. உள்ளடக்கத்திற்கு புதிய உணர்வையும் புதிய வடிவத்தையும் கொடுக்க உருவாக்கப்பட்டன. சில கவிஞர்கள் பழைய இலக்கிய வகைகளைக் கையாண்டு நாட்டுப்பற்றை வெளிப்படுத்த முற்பட்டனர்.
சில கவிஞர்கள் பழைய இசை மரபையும், பாடல் மெட்டுக்களையும் நாட்டுப்பற்றுடன் இணைத்துக் காட்டியுள்ளனர். சிலர் அணி நலத்தைப் பின்பற்றி நாட்டுப்பற்றை விளக்கியுள்ளனர். இவ்விளக்கு முறைகள் கவிஞர்களுடைய அனுபவத்தால் வெளிப்பட்டதா? அல்லது விடுதலை உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்ற உள்ளுணர்வினால் தோன்றியதா? என்பது தெளிவாக உணரமுடியாத நிலையில் இருக்கிறது.
இசை விளக்குமுறை:
பழங்காலம் முதல் இசையும் கவிதையும் ஒன்றோடொன்று தொடர்புடையதாகச் செயல்பட்டு வருகின்றன. இசையில்லாத பாடல் உணர்வற்றிருக்கும். எனவே, பாடல்களுக்கு உணர்வை ஏற்படுத்தி புதிய உற்சாகத்தையும் இனிமையையும் கொடுத்து உள்ளடக்கத்தைச் சிறப்புடையதாக்குவதே இசையை இணைத்துப் பாடுவதன் நோக்கமாக இருந்திருக்கலாம். உணர்வற்றிருக்கும் உள்ளடக்கத்திற்கு ராகம், தாளம், பல்லவி, அனுபல்லவி, சரணம், மெட்டுக்கள் போன்ற உறுப்புக்கள் இசையைத் தரக்கூடியவை என்றும் கூறலாம்.
கிராமங்களிலும், பட்டிணங்களிலும் பழங்காலம் முதல் தெருக்கூத்துக்களில் பாடப்பட்ட இசையும், நாடக இசையும், பழைய இசைப்பாக்களின் இசையும் தேசியப் பாடல்களைக் கவிஞர்கள் இசையுடன் படைப்பதற்குக் காரணமாக அமைந்தது.
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய நாடக ஆசிரியர்களில் சிலர் தேசியக் கவிஞர்களாகவும் சிறந்து விளங்கினர். இக்கவிஞர்கள் தேசியப் பாடல்களைப் படைக்கும்போது நாடகத்திற்கு ஏற்ப ராகம், தாளம், பல்லவி, அனுபல்லவி, சரணம் போன்ற இசை உறுப்புக்களைப் பயன்படுத்தியுள்ளதையும் பார்க்கமுடிகிறது.
ஒரு கருத்தை எடுத்துரைப்பது பல்லவி. அதனை விரித்துரைப்பது அனுபல்லவி. அந்தக் கருத்தைப் பலநிலைகளில் விளக்குவது சரணம். நாட்டுப்பற்றை இசையுடன் இணைத்து மக்களிடையே விடுதலை உணர்வைத்தூண்ட முற்பட்ட முதல் கவிஞர் சுப்பிரமணிய பாரதியாராவார்.
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் விளக்குமுறை உத்தியில் உள்ள இசை விளக்குமுறை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. பாஸ்கரதாஸ்,இந்து தேசாபிமானிகள் செந்தமிழ்த்திலகம், ப.24.
2. சுருளியாண்டிப் பாவலர், கள்ளும் கவிதையும், ப.77.
3. ஹா. கி.வாலம், மோகன முறுவல், ப.78.
4. நடராஜப்பிள்ளை, வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிரகமென்னும் காங்கிரஸ் பாட்டு, ப.4.
Sponsorship



0 கருத்துகள்