நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கவிஞர்கள் கையாண்ட உத்திகள் - நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள் - 6: யாப்பமைப்பு உத்திகள்
தேச பக்தர்களின் ஒவ்வொரு உடல் உறுப்புகளும் தேச சேவையில் ஈடுபடுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தன என்பதைக் கவிஞர்கள் பாடல்வழி வெளிப்படுத்தியுள்ளனர் எனவும், எதிர்காலத்தில் நாட்டில் நிகழப்போகும் செயல்களை முன்பாகவே வெளிப்படுத்தும் தொடர்கள் தேசியப் பாடல்களில் வெளிப்பட்டிருத்தலைக் காண முடிகிறது எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் யாப்பமைப்பு உத்திகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- யாப்பமைப்பு உத்திகள்
- மோனை
- எதுகை
- அளபெடை
- இயைபு
யாப்பமைப்பு உத்திகள்:
கவிதைகளுக்கு உருவத்தையும் ஓசை நயத்தையும் இனிமையையும் தருவது யாப்பு ஆகும். யாப்பமைப்பு இல்லாத கவிதை உயிரில்லாத உடல் போன்றது; மனமில்லாத மலர் போன்றது. எதுகை, மோனை, இயைபு, அளபெடை ஆகியன இன்றியமையாத யாப்பமைப்பு உறுப்புக்களாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை பாடப்பட்டு வந்த யாப்பமைப்பு முறைகள், இருபதாம் நூற்றாண்டில் சிறிது மாற்றம் பெற்றன. இம்மாற்றத்தை முதன் முதலில் ஏற்படுத்தியவர் பாரதியார். யாப்பமைப்பு முறையில் ஏற்பட்ட புதிய மாற்றம் படிப்பறிவு குறைந்தவர்களையும், படிப்பறிவு இல்லாதவர்களையும் கவரும் தன்மையைப் பெற்றிருந்ததால் பாரதியார் இம்முறையில் விடுதலை உணர்வை வெளிப்படுத்த முன்வந்தார். இவரைத் தொடர்ந்து பல கவிஞர்கள் புதிய யாப்பமைப்பு முறையில் கவிதைகள் பாடியுள்ளனர். கவிஞர்கள் யாப்பமைப்பு முறையிலும் சில உத்திகளைப் பயன்படுத்தி விடுதலை உணர்வைத் தூண்ட முயன்றுள்ளதை அவர்களின் கவிதைகள் வழி ஆராய்வோம்.
மோனை:
பாடல் அடிகளை மோனையாக அமைத்து விடுதலை உணர்வைத் தூண்டும் நிலையும் கவிஞர்களிடம் இருந்தது. பாரதியார்(1) சுதந்திர உணர்வை வெளிப்படுத்த ‘சுதந்திர தாகம்’ என்ற பாடலில் ‘எ’ என்ற முதலெழுத்தை மோனையாக அமைத்து பாடியுள்ளதை,
என்ற அடிகள் வழி அறியலாம். இப்பாடலின் தாக்கமாக ‘இ’ என்ற முதலெழுத்தை மோனையாக அமைத்து சுதந்திரம் பெற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் தங்கவேலு.
தேசபக்தியை வெளிப்படுத்திய எல்லா கவிஞர்களும் மோனையை அமைத்து கவிதைகளுக்கு உணர்வூட்டியதை தெளிவாகப் பார்க்கமுடிகிறது. பாரதியார், நாமக்கல் கவிஞர் போன்றோர் தாம் பாடிய எல்லா பாடல்களிலும் மோனையின் மூலம் கருத்துக்கு உணர்வு தந்துள்ளார். பாரதிதாசன், கவிமணி, பாஸ்கரதாஸ், ஜீவானந்தம், தங்கவேலு, சொக்கலிங்கம் போன்றோர் சில பாடல்களில் மட்டும் மோனையைப் பயன்படுத்தியுள்ளனர்.
எதுகை:
நாட்டுப்பற்றை வெளிப்படுத்த எதுகையை அமைத்துக் கவிதைக்கு உணர்வூட்டுவதில் புதிய உத்திமுறைகளைக் கவிஞர்கள் பின்பற்றி உள்ளனர். பாரதியார், நாமக்கல் கவிஞர் போன்றோர் பெரும்பாலான பாடல்களை எதுகையாகப் பாடியுள்ளனர். ராய.சொக்கலிங்கம், எஸ்.டி.சுந்தரம், கவிமணி, பாரதிதாசன், எஸ்.ஜி.ராமசாமி, கொத்தமங்கலம் சுப்பு, தங்கவேலு ஆகியோரும் சில பாடல்களில் எதுகையை அமைத்துள்ளதையும் காணமுடிகிறது.
நாட்டின் சுதந்திரத்தை நிலைநாட்டி, நாடு முன்னேற நாம் உழைக்க வேண்டும் என்பதை,
என்ற பாடலில் வெளிப்படுத்திய எஸ்.ஜி.ராமசாமி பாடலின் எல்லா இறுதி எழுத்துக்களையும் எதுகையாக வெளிப்படுத்தியுள்ளார்.
அளபெடை:
காந்தியின் சிறப்புக்களைப் பிள்ளைத் தமிழால் பாடிய ராய.சொக்கலிங்கம்(2), காந்தியுடன் விளையாட அம்புலியை அழைக்குமிடத்து,
என்ற பாடலில் அளபெடையை அமைத்துள்ளதை அறியமுடிகிறது.
இயைபு:
தேசியப் பாடல்களில் தொடர் இறுதி எழுத்தை ஓசை நயத்தோடு இயைபுபடுத்தி விடுதலை உணர்வை வெளிப்படுத்துவதில் கவிஞர்கள் புதுமையைப் புகுத்தியுள்ளனர். இரு அடிகளை இயைபாக அமைத்து நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவதில் எல்லா கவிஞர்களும் சிறந்து விளங்குகின்றனர். இரண்டுக்கு மேற்பட்ட அடிகளில் இயைபை அமைப்பதில் நாமக்கல் கவிஞர், பாரதியார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். அடிகளின் இறுதி இயைபு பெரும்பாலும் ஏகார, ஓகார எழுத்துக்களையும், ஏவல், வியங்கோல், வினா போன்றவற்றையும் கொண்டதாக அமைந்துள்ளன.
‘அச்சமில்லை’ என்பதை வெளிப்படுத்த ‘எ’ என்ற இயைபையும், வெற்றியுணர்வை வெளிப்படுத்த ‘ஈ’ என்ற இயைபையும், நாட்டின் பழம்பெருமையை வெளிப்படுத்த ‘ஏ’ என்ற இயைபையும், விடுதலையடைந்த பாரத நாடு மேற்கொள்ள வேண்டிய செயல்களை வெளிப்படுத்த ‘ஓம்’ என்ற இயைபையும், வருகின்ற இந்தியாவும் போகின்ற இந்தியாவும் எப்படி இருக்கவேண்டும் என்பதை வெளிப்படுத்த ‘வா’, ‘போ’ என்ற இயைபுகளையும், பாரத சமுதாயத்தின் இழிவு நிலையையும் அது எப்படி இருக்கவேண்டும் என்பதனையும் வெளிப்படுத்த ‘ஓ’ என்ற வினா இயைபையும், ‘ஓம்’, ‘ஆம்’ என்ற இயைபுகளையும் அடிகளின் இறுதியில் அமைத்து உள்ளடக்கத்திற்குப் புத்துணர்வைக் கொடுத்துள்ளார் பாரதியார்(3).
காந்தியின் சிறப்புக்களை வெளிப்படுத்த ‘உம்’இ ‘ஏ’, ‘ஓம்’, ‘உ’ போன்ற இயைபுகளை நாமக்கல் கவிஞரும்(4), ‘உம்’, ‘ஆய்’ போன்ற இயைபுகளை ராய.சொக்கலிங்கமும்(5) வெளிப்படுத்தி உள்ளதை அவர்களின் கவிதைகள் உணர்த்துகின்றன. ‘அன்’, ‘ஆன்’ என்ற இயைபுகள் மூலம் திரு.வி.கவின் பெருமையை வெளிப்படுத்துகிறார் பாஸ்கரதாஸ்(6).
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் யாப்பமைப்பு உத்திகள் பற்றி மேலும் சில தகவல்களையும், விளக்குமுறை உத்திகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
2. ராய சொக்கலிங்கம், காந்திக்கவிதை, ப.35.
3. பாரதியார் கவிதைகள், பக்.102-103, 135-138, 157-158, 209.
4. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.70, 79-82, 96-100, 155-156.
5. ராய. சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.205-210.
6. பாஸ்கரதாஸ், இந்து தேசாபிமானிகள் செந்தமிழ்த்திலகம், ப.11.
Sponsorship





0 கருத்துகள்