நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கவிஞர்கள் கையாண்ட உத்திகள் - நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள்- 5
காந்தியடிகளின் சாத்வீகப் போர் முயற்சியாலும் தேசபக்தர்களின் தியாகத்தாலும் சத்தியம் பழித்து சுதந்திரம் கிடைத்ததை பலித்தது தியாகம் பலித்தது சேவை என்ற தொடரின் ஆரம்பத்தில் முற்றெச்சத்தை அமைத்துத் தொடருக்கு புத்துணர்வு தருகின்றனர் எனவும், தேசியப் பாடல்களில் கட்டளைத் தொடரை அமைத்து விடுதலை உணர்வை வெளிப்படுத்தினர் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக உடல் உறுப்புகளை வெளிப்படுத்தும் தொடர்கள் பற்றியும், எதிர்கால செயலை வெளிப்படுத்தும் தொடர்கள் பற்றியும், கவிஞன் பெயரை வெளிப்படுத்தும் தொடர்கள் பற்றியும், தொடர் இறுதி இயைபு பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- உடல் உறுப்புகளை வெளிப்படுத்தும் தொடர்கள்
- எதிர்கால செயலை வெளிப்படுத்தும் தொடர்கள்
- கவிஞன் பெயரை வெளிப்படுத்தும் தொடர்கள்
- தொடர் இறுதி இயைபு
உடல் உறுப்புகளை வெளிப்படுத்தும் தொடர்கள்:
தேச பக்தர்களின் ஒவ்வொரு உடல் உறுப்புகளும் தேச சேவையில் ஈடுபடுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தன என்பதைக் கவிஞர்கள் பாடல்வழி வெளிப்படுத்தியுள்ளனர். தேச பக்தர்களின் உடல் உறுப்புகளை விடுதலை உணர்வுடன் இணைத்துக் காட்டும் திறன் கவிஞர்களின் புதிய உத்திமுறை என்றும் கூறலாம். பகவத்சிங்கின் தேசபக்தியை,
“கண்டவருணர்ச்சிக் கொண்டாடப் பகை
வெருண்டிட நோக்கிடு விழியான்”
என்றும்,
“தேச விடுதலையே சதாகாலமும்
பேசுஞ் சுதந்திர வாயான்”(1)
என்றும் அவருடைய உடல் உறுப்புகளைத் தேசபக்தியுடன் இணைத்துக் காட்டியுள்ளார் புலவர் குழந்தை. தேசியத் தலைவரான காந்தியடிகளின் பெருமையை உணராத தலை, கண், செவி, மூக்கு, நாக்கு, வாய், கை, மெய், உள்ளம் போன்ற உடல் உறுப்புக்களால் பயன் இல்லை என்பதைப் பாடல் தொடர்களாக அமைக்கிறார் ராய.சொக்கலிங்கம்(2). பாரதமக்கள் அனைவரின் உடல் உறுப்புக்களையும் பாரததேவியின் உடல் உறுப்புகளாகக் காட்டுகிறார் பாரதியார்(3). மனிதனுக்கு விடுதலை உணர்வைத் தூண்டுவது மனமாக இருந்தாலும், அவ்வுணர்வு வளர்ச்சியடைய மனிதனின் உடல் உறுப்புக்கள் உதவியாக இருக்கின்றன. எனவே, உடல் உறுப்புக்களை விடுதலை உணர்வுடன் இணைத்துப் பாடும் திறன் கவிஞர்களிடம் வெளிப்பட்டிருத்தலைப் பார்க்கமுடிகிறது.
எதிர்கால செயலை வெளிப்படுத்தும் தொடர்கள்:
எதிர்காலத்தில் நாட்டில் நிகழப்போகும் செயல்களை முன்பாகவே வெளிப்படுத்தும் தொடர்கள் தேசியப் பாடல்களில் வெளிப்பட்டிருத்தலைக் காண முடிகிறது. சுதந்திரம் அடைவதற்கு முன்பே சுதந்திரம் பெற்றதாக ‘சுதந்திரப் பள்ளு’ என்ற பாடலையும், சுதந்திரம் பெற்ற பாரதநாடு செய்யவேண்டிய செயல்களை வெளிப்படுத்துவதாக ‘பாரத தேசம்’(4) என்ற பாடலையும் எதிர்காலத்தை வெளிப்படுத்தும் பாடல் தொடர்களால் அமைத்துள்ளார் பாரதியார். இத்தொடர்கள் கற்பனையாக இருந்தாலும் அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மக்களுக்கு உணர்வூட்டுவதாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.
கவிஞன் பெயரை வெளிப்படுத்தும் தொடர்கள்:
கவிஞர்கள் தங்கள் பெயரைக் கவிதைகளுடன் இணைப்பதிலும், தங்கள் கவிதைகளைப் படிப்பதால் மக்கள் விடுதலை உணர்வு பெறவேண்டும் என்பதிலும் குறிக்கோளாக இருந்ததை அவர்களின் பாடல் தொடர்கள் வழி அறியமுடிகிறது. வீரணக்கோனார் தாம் எழுதிய ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் தன் பெயரை இணைத்துள்ளார். தான் சொல்லும் செந்தமிழ் பாட்டைச் சிந்தையுடன் கேட்கவேண்டும் என்பதை,
“தேர்ச்சி மேவிய காமாஷிதாசன் சொல்லும்
செந்தமிழைச் சிந்தையிலு கந்தருரும்”
என்ற பாடலில் வெளிப்படுத்துகிறார் காமாஷிப்பிள்ளை. பாடல் இறுதியில் பீர்முகம்மது தன் பெயரை வெளிப்படுத்தித் தன்னுடைய கதர்க் கொள்கையைப் பின்பற்றுமாறு பாடியுள்ளதையும் பார்க்க முடிகிறது. எஸ்.ஜி.ராமசாமி, பாஸ்கரதாஸ்(5), வி.ஏ.தியாகராசசெட்டியார், ராய.சொக்கலிங்கம்(6) போன்றோரும் தங்களின் பெயர்களைச் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளதையும் பார்க்கமுடிகிறது. தன் புகழை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணமும், தன் பாடல்களை மக்கள் படிக்க வேண்டும் என்ற எண்ணமும் இக்கவிஞர்களிடம் இருந்ததைக் கவிதைகள் தெளிவுப்படுத்திக் காட்டுகின்றன.
தொடர் இறுதி இயைபு:
தொடர்களின் இறுதியில் இயைபை அமைப்பதன் மூலம் கவிதைகளுக்கு உணர்வும், வலிமையும், ஓசை நயமும் கொடுத்து விடுதலை உணர்வுக்கு புத்தொளி தந்திருப்பதை அவர்களின் கவிதைகள் தெளிவாகக் காட்டுகின்றன. தேசியக் கொடியின் சிறப்புகளை வெளிப்படுத்த ‘கொடி’ என்ற சொல்லையும், காங்கிரஸின் பெருமையை வெளிப்படுத்த ‘கப்பல்’ என்ற சொல்லையும் ஒவ்வொரு தொடரின் இறுதியிலும் இயைபுடன் அமைத்துள்ளார் கவிமணி(7). பாரத நாட்டின் பெருமையை வெளிப்படுத்தத் தொடர் இறுதியில் ‘நாடு’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் திரு.வி.க.(8).
காந்தியின் புகழை வெளிப்படுத்த ‘கண்டாய்’ என்ற சொல்லையும், இந்திய நாட்டின் அடிமை நிலையை அகற்றப் பேரிகை கொட்ட வேண்டும் என்பதை உணர்த்த ‘பேரிகை’ என்ற சொல்லையும், இந்தியாவின் பழம்பெருமையை வெளிப்படுத்த ‘இந்தியா’ என்ற சொல்லையும் ஒவ்வொரு பாடல் அடியிலும் அமைத்துத் தொடர் இயைபை ஏற்படுத்துகிறார் ராய.சொக்கலிங்கம்(9).
காந்தியின் புகழை உணர்த்த ‘காந்தி’ என்ற சொல்லையும், துன்பங்களைப் போக்க ராட்டை சுழற்றவேண்டும் என்பதை வெளிப்படுத்த ‘ஆடு ராட்டே’ என்ற சொல்லையும், காங்கிரஸின் தொண்டுகளை வெளிப்படுத்த ‘காங்கிரசே’ என்ற சொல்லையும் தொடர் இறுதியில் இயைபாக அமைத்துள்ளார் நாமக்கல் கவிஞர்(10).
நான் அன்னியர்களுக்கு அடிமை இல்லை. தேச பக்தர்களாகிய திலகர், பூபேந்திரர், விபின் சந்திரபாலர் ஆகியோருக்கு அடிமை என்பதை அறிவுறுத்த ‘அடிமைக்காரன்’ என்ற சொல்லைத் தொடர் இறுதியில் வெளிப்படுத்துகிறார் பாரதியார்(11).
‘ஜெய்ஹிந்த்’ என்ற சொல்லைச் சுருளியாண்டிப் பாவலரும், ‘தெய்வம்’ என்ற சொல்லை அருணகிரிநாதரும், ‘காந்தி’ என்ற சொல்லை சீராளனும், ‘தம்பி’ என்ற சொல்லை ராமநாதனும், பாடல்களின் ஒவ்வொரு அடிகளின் இறுதியிலும் இயைபுடன் அமைத்து கருத்துக்கு உணர்வு கொடுத்துள்ளதையும் காணமுடிகிறது.
தேசியக் கவிதைகள் எழுத முன்வந்த கவிஞர்கள், கருத்துக்களை வெளிப்படுத்த பாடல் அடிகளில் பல புதிய உத்திமுறைகளையும் கையாண்டுள்ளதை அறியமுடிகிறது.
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் யாப்பமைப்பு உத்திகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. புலவர் குழந்தை, புலவர் குழந்தைப் பாடல்கள், பக்.226-227.
2. ராய. சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.199-200.
3. பாரதியார் கவிதைகள், பக்.143-144.
4. பாரதியார் கவிதைகள், பக்.138-139, 181.
5. பாஸ்கரதாஸ், இந்து தேசாபிமானிகள் செந்தமிழ்த்திலகம், ப.19.
6. ராய.சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.3,35,119,171,182,185.
7. தேசிக விநாயகம் பிள்ளை, மலரும் மாலையும், பக்.181-184.
8. திரு.வி.க. உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல், பக்.9-12.
9. ராய. சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.205-207, 250-255.
10. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.57,376-377, 468-469.
11. பாரதியார் கவிதைகள், பக்.192-193.
Sponsorship



0 கருத்துகள்