நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கவிஞர்கள் கையாண்ட உத்திகள் - நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள்- 4
ஒரு தொடரில் அல்லது ஒரு பாடலில் முதலில் வந்த எழுத்தையோ, சீரையோ, சொல்லையோ, மீண்டும் மீண்டும் தொடர்களில் அமைப்பது தொடர் மடக்கு எனவும், தேசபக்தர்களின் அவல நிலையையும் வினாத் தொடர்களாக அமைத்து அதற்குரிய விடையைத் தொடரிலேயே உள்ளுறைப் பொருளாகவும் குறிப்புப் பொருளாகவும் வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் முற்றெச்சத் தொடர் பற்றியும், வினாத்தொடர் பற்றியும், விளித்தொடர் பற்றியும், உருவகத் தொடர் பற்றியும், கட்டளைத் தொடர் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- முற்றெச்சத் தொடர்
- வினாத்தொடர்
- விளித்தொடர்
- உருவகத் தொடர்
- கட்டளைத் தொடர்
முற்றெச்சத் தொடர்:
காந்தியடிகளின் சாத்வீகப் போர் முயற்சியாலும் தேசபக்தர்களின் தியாகத்தாலும் சத்தியம் பழித்து சுதந்திரம் கிடைத்ததை ‘பலித்தது தியாகம் பலித்தது சேவை’ என்ற தொடரின் ஆரம்பத்தில் முற்றெச்சத்தை அமைத்துத் தொடருக்கு புத்துணர்வு தருகிறார் தங்கவேலு. காந்திய உணர்வை மக்களிடையே பரப்ப இத்தகைய பாடல்கள் தூண்டுதலாக இருந்தன.
வினாத்தொடர்:
கதரின் சிறப்பு, கதரை உற்பத்தி செய்யும் பெண் அடையும் துன்பம் ஆகியவற்றை வெளிப்படுத்தவும், வட்டமேஜை மாநாட்டின் முடிவு என்ன ஆகுமோ என்பதை குறி கூறும் பெண்ணிடம் கேட்பதையும் வினாத்தொடர்கள் மூலம் அமைத்துள்ளார் கவிமணி(1).
ஆங்கில ஆட்சியினால் இந்தியர் அடையும் துன்பங்களைக் கண்டு மனம் வருந்திய ராய.சொக்கலிங்கம், இக்கொடுமைகள் ஒழியும் நாள் எந்நாளோ?(2) என ஒவ்வொரு தொடரின் இறுதியிலும் வினாவை எழுப்பியுள்ளதைப் பார்க்கமுடிகிறது.
கடின உழைப்பும் தியாகமும் செய்யாமல் சுதந்திர சுகம் வாராது என்பதை உணர்த்தவும், அடிமை வாழ்வு வாழும் மனிதன் சுதந்திரத்தின் பெருமையை தானே வினாவிக் கொள்வதாகவும் நாமக்கல் கவிஞர்(3) வினாத்தொடரை அமைத்திருப்பதைக் காணமுடிகிறது. சுதந்திரம் பெற எண்ணம் கொண்டவர்கள் பிற இன்பங்களை விரும்பமாட்டார்கள் என்பதையும், அடிமை வாழ்வு மேற்கொள்ளும் உங்களுக்குச் சுதந்திர நினைவோ?(4) என்று ஆங்கிலேயர்கள் கேட்பதையும் உள்ளுறைப் பொருள் மூலம் பாரதியார் வினாத்தொடர்களில் அமைத்துள்ள திறன் புதுமையானது.
உலக சபையில் பாரதத்தாய் இல்லாததை அறிந்த ஒரு இந்தியன், பாரதத்தாய் எங்கே? எங்கே? என்று ஒளி, மரம், செடி, கொடி, மலை, அலை, கடல், காற்று, மேகம் போன்ற இயற்கைப் பொருள்களையும், மயில், புள்ளிமான் போன்ற விலங்குகளையும் கேட்பதாகப் பாடல் தொடர்களை அமைக்கிறார் திரு.வி.க.(5) தாய்நாட்டைத் தன் கண்ணின் மணிபோல காக்கும் நாள் எந்நாளோ? என வினாவை எழுப்புகிறார் வாலம்(6). பாடல் தொடர்களில் வினாவை அமைத்து விடுதலை உணர்வை உள்ளறை உடையதாக வெளிப்படுத்துவதில் கவிஞர்கள் திறம்பட செயல்பட்டனர் என்றும் கருதமுடிகிறது.
விளித்தொடர்:
தாய்நாட்டின் பெருமையை வெளிப்படுத்த கவிமணியும்(7), காந்தியை குழந்தையாகக் கற்பனை செய்து அவருடைய புகழை வெளிப்படுத்த பல பெயர்களால் விளித்துக் கூற ராய.சொக்கலிங்கமும்(8) தொடர் இறுதியில் விளச்சொற்களை அமைத்து விடுதலை உணர்வைத் தூண்டியுள்ள திறன் போற்றத்தக்கதாக உள்ளது.
பெற்ற சுதந்திரத்தை உயிரே! என்றும், வானஜோதியே! என்றும், திருவே! என்றும், விளித்துக் காட்டுகிறார் கம்பதாசன். சுதந்திரம் கிடைத்ததால் வந்த நன்மைகளை ‘சொல்லு பாப்பா’ என்ற விளித்தொடர்கள் மூலம் சுதந்திரம் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார் தங்கவேலு.
வெள்ளையர் ஆட்சி வேண்டாம் என்பதை வீரர்களுக்கு வெளிப்படுத்த,
“வேண்டாம் வேண்டாம் வெள்ளையர் ஆட்சி
விரைவில் எழுவீர்! வீரர்களே!”
என்ற பாடல் மூலம் விளித்துக் காட்டுகிறார் சின்னசாமிப் பிள்ளை. சுப்பிரமணிய சிவாவின் பெருமை கந்தசாமியின் விளித்தொடர்கள் வழியும், பாரதத்தாயின் பெருமைகளை மாதவையாவின் விளித்தொடர்கள் வழியும் தெளிவாக உணரமுடிகிறது.
உருவகத் தொடர்:
காந்தியின் புகழை வெளிப்படுத்த விரும்பிய நாமக்கல் கவிஞர், ‘வான்முகிலே!’ பாத்திரமே! சாத்திரமே! மாமணியே! அற்புதமே! மோகனமே!(9) போன்ற உருவகத் தொடர்கள் மூலம் கூறியிருப்பதைப் பாடல்கள் வழி அறியமுடிகிறது.
கட்டளைத் தொடர்:
தேசியப் பாடல்களில் கட்டளைத் தொடரை அமைத்து விடுதலை உணர்வை வெளிப்படுத்தும் நிலையும், அதன் மூலம் மக்களை விழிப்புணர்வு பெறச் செய்யும் நிலையும் இருந்ததைக் கவிதைகள் வழி காணலாம். அடிமையை அகற்ற உழைப்பவர்களும், கோழையர்களும் உணர்வுபெற வீரமுரசை எழுப்புக! என்ற கருத்தை கட்டளைத் தொடராக அமைத்துள்ளார் சாரணபாஸ்கரன். தேச பக்தர்களின் சிறப்பையும், தேசத்தின் சிறப்பையும் வெளிப்படுத்த ‘சங்கே ஊது’ எனக் கட்டளையிடுகிறார் கண்ணமுருகனார்(10). எத்தகைய துன்பம் வந்தாலும் நாட்டை மறவாதே மனமே! என்பதை கட்டளைத் தொடரால் வெளிப்படுத்துகிறனர். பாரத மாதாவின் அடியை பணிவீர்! என்றும் கதரை அணிவீர்! என்றும் தமது பாடல் மூலம் கட்டளையிடுகிறார் தியாகராச செட்டியார்.
அடுத்த வலைப்பதிவில் உடல் உறுப்புகளை வெளிப்படுத்தும் தொடர்கள் பற்றியும், எதிர்கால செயலை வெளிப்படுத்தும் தொடர்கள் பற்றியும், கவிஞன் பெயரை வெளிப்படுத்தும் தொடர்கள், தொடர் இறுதி இயைபு பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. தேசிய விநாயகம்பிள்ளை, மலரும் மாலையும், பக்.185-187.
2. ராய. சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.246-249.
3. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.338,378.
4. பாரதியார் கவிதைகள், பக்.175-177, 188-189.
5.திரு.வி.கல்யாணசுந்தரம், உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல், பக்.14-15.
6. ஹா.கி.வாலம், மோகன முறுவல், ப.15.
7. தேசிக விநாயகம் பிள்ளை, மலரும் மாலையும், ப.289.
8. ராய. சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.15-19, 220-224, 235-238.
9. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.77-82.
10. கண்ணமுருகனார், சுதந்திர கீதம், ப.67.
Sponsorship




0 கருத்துகள்