நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - சுதந்திரமும் தேசியப் பாடல்களும், இந்தியக் குடியரசும் தேசியப் பாடல்களும்
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக 1757 முதல் 1947 வரை போராடிய சுதந்திர வீரர்களின் தியாகச் செயல்களைப் பாராட்டி வாழ்த்துப் பாடும் நிலையும் தேசியக். கவிஞர்களிடம் இருந்ததை அறிய முடிகிறது எனவும், வீரம் தழைத்து வெற்றி கிடைப்பதற்கும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்கும், உலக நாயகியையும், முருகனையும் வேண்டுகிறார் கவிமணி எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக சுதந்திரமும் தேசியப் பாடல்களும் பற்றியும், இந்தியக் குடியரசும் தேசியப் பாடல்களும் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- கற்பகச் செடி
- ராம ராஜ்ஜியம்
- இந்தியக் குடியரசு
- குடியரசின் ஆக்கம்
கற்பகச் செடி:
சோறு துணிமணிகளால் அடையும் இன்பத்தை விட சுதந்திரத்தால் தருகின்ற இன்பம் மேலானது. இவ்வின்பத்தால் கருணையும், ஞானமும் வளரும், எனவே சுதந்திரத்தைக் கற்பகச் செடியாக வளர்த்து அதனைக் காயவும், கருகவும் விடாமல் இருக்க சபதம் செய்ய வேண்டுகிறார் நாமக்கல் கவிஞர்(1).
சுதந்திரப் பயிர், தியாகிகளின் கண்ணீரால் வளர்த்தப் பயிர் அதனைக் கருத்துடன் பாதுகாக்க வேண்டுகோள் விடுகிறார் தங்கவேலு. சுதந்திரத்தை உயிராகவும், இருளை அகற்றும் வான ஜோதியாகவும், திருவாகவும் விளித்துக் காட்டிய கம்பதாசன் இனிமேல் உன்னை இமையம் போல் உயர்த்திடுவோம்; அன்புடன் காப்போம் என்று கவிதைகளால் வெளிப்படுத்தியுள்ளார்.
சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் உயிர்க் கொலையை ஒதுக்கி அன்புநெறி பழகவேண்டும். புதுமுறையில் தொழில்களை விருத்தி செய்யவேண்டும். உயர்வு-தாழ்வு மனப்பான்மை ஒழிக்கப்படவேண்டும். விஞ்ஞான முறையை ஒழித்து காந்தியடிகளின் மெய்ஞ்ஞான முறையை மேற்கொள்ளவேண்டும்(2) என்று பாடுகிறார் நாமக்கல் கவிஞர்.
ராம ராஜ்ஜியம்:
நாம் பெற்றுள்ள சுதந்திரம் காந்தியடிகளின் ராம ராஜ்ஜிய கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவும், சமதர்ம உணர்வை வெளிப்படுத்துவதாகவும் சத்தியம், சாந்தம், கருணை போன்றவற்றை அழியாமல் காத்து மக்களுக்கு அறிவூட்டும் சோதியாகவும், சுதந்திரம் நிலைக்க வேண்டும். உலகில் உள்ள எந்த நாடும் நம் நாட்டுடன் பகை கொள்ளாமல் இருக்கவும், பகை கொண்ட நாட்டையும் அடக்கும் வலிமையைக் கொண்டதாகவும் சுதந்திரம் திகழவேண்டும்(3). சுதந்திரம் நன்கு நிலைக்க காந்திய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பது கவிஞர்களின் கொள்கையாக இருந்ததை அவர்களின் உணர்வுகளால் மலர்ந்த கவிதைகள் அறிவிக்கின்றன.
அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெற தம் உணர்வுகளைக் கவிதைகளாக்கிய கவிஞர்கள் விடுதலை பெற்ற பிறகு சுதந்திரத் திருநாளின் சிறப்பையும் அது கிடைப்பதற்கு பாடுபட்ட தேச பக்தர்களின் சிறப்பையும் அது பாதுகாக்க வேண்டிய முறையையும், அதை இழிவாகக் கருதுபவர்களை இடித்துறைக்கும் நிலையையும் பாடு பொருளாக்கி மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க முயன்றதையும் காண முடிகிறது.
இந்தியக் குடியரசு:
1927-ஆம் ஆண்டு சென்னையில் கூடிய காங்கிரஸ் இந்தியாவிற்குப் பூரண சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தது. 1928-இல் கல்கத்தாவில் மோதிலால் நேருவின் தலைமையில் கூடிய காங்கிரஸ் 1929-ஆம் ஆண்டு முடிவதற்குள் இந்தியாவிற்கு குடியேற்ற நாட்டுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் இல்லையானால் 1930-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி முதல் ‘பூரண சுதந்திர கோரிக்கை பிரகடனம் வெளியிடப்படும்’ என்றும் தீர்மானிக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் இத்தீர்மானத்தை ஏற்க மறுத்ததால், 1929-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவின் தலைமையில் கூடிய காங்கிரஸ் 1930-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஐ பூரண சுதந்திர நாளாகக் கொண்டாடத் தீர்மானம் செய்தது. 1930 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ஆம் தேதி பூரண சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டது(4). சுதந்திரம் கிடைத்த பிறகு ஜனவரி 26-இன் புனிதத் தன்மை காக்கும் பொருட்டு 1948-இல் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், ராஜாஜி போன்ற தலைவர்களின் ஆலோசனைப்படி இந்திய அரசியல் சட்டம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-இல் அமுலாக்கப்பட்டது. அன்று தொடங்கி ‘பூரண சுதந்திர நாள்’ என்பது ‘பூரண குடியரசு நாளாக’ பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்தியா குடியரசு நாளைக் கொண்டாடியபோது தேசியக் கவிஞர்களும் தங்களின் கவிதையுணர்வால் குடியரசின் சிறப்பினையும், அதனைப் பாதுகாக்க வேண்டிய முறையையும் வெளிப்படுத்த முன் வந்ததை அவர்களின் கவிதைகள் தெளிவாகக் காட்டுகின்றன. அண்ணல் காந்தியடிகளால் அடிமை வாழ்வு நீங்கி குடியாட்சி மலர்ந்ததை வெளிப்படுத்துவதாக,
“கூடினோம் கூடினோம் - இன்று
குடியரசுத் தினம் கொண்டாட நாமெல்லோரும்”
என்ற பாடல் மூலம் குடியரசுத் தினத்தைக் கொண்டாடுவதை வெளிப்படுத்துகிறார் ராமசாமி. குலம் முழுவதும் நலமடைய வகுத்த மக்கள் குடியரசு நீடுழி வாழ்க மாதோ! என வாழ்த்துகிறார் அருணகிரிநாதர்.
குடியரசின் ஆக்கம்:
இந்தியத் தாயின் குடியரசு நாளாகிய இந்நாள் இமயம் முதல் குமரி வரையுள்ள மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ முயன்றால் அதுவே குடியரசின் ஆக்கம் காக்க வழியாகும். சாதி மத பேதத்தை ஒழித்து சமதர்ம உணர்வுடன் காந்தியடிகளின் போதனை வழி செயல்பட்டால் குடியரசில் இன்பம் பொங்கும்(5). அதற்குத் திட்டமிட்டு சேவை செய்யும் தியாக புத்தி மக்களிடையே வளரவேண்டும்(6). குடியரசு சிறப்படைய ஒற்றுமை உணர்வும் காந்திய நெறியும் தியாக உணர்வும் கவிஞர்களின் உணர்வாக வெளிப்பட்டதைக் காண முடிகிறது.
இந்திய நாட்டில் தோன்றியுள்ள குடியரசுக்கு எந்த அரசும் ஈடாகாது என்று மண்ணவரும், விண்ணவரும் வியப்படையவும், அது நிலைத்து நிற்கவும் இறைவனை வேண்டுகிறார் கவிமணி(7). குடியரசு மூலம் மக்கள் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்றும் அக்குடியரசு பிற நாட்டவர் வியக்கும் வண்ணம் காந்திய வழியைப் பின்பற்ற வேண்டும்.
அடுத்த வலைப்பதிவில் தேசியச் சின்னங்களும் தேசியப் பாடல்களும் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.140.
2. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.138.
3. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.136-137.
4. Mahajan, The Nationalist Movement in India, p.283.
5. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.273-274.
6. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.139.
7. தேசிக விநாயகம்பிள்ளை, மலரும் மாலையும், பக்.192-193.
Sponsorship






0 கருத்துகள்