காந்தியின் நிர்மான இயக்கங்கள் - 4: நாட்டுத் துரோகி, மயக்க உணர்வு, மதுவினால் வரும் கேடுகள், மதுவினால் பெண்கள்பட்ட அவலநிலை
காந்தியடிகளின் கதர்க் கொள்கையில் ஈடுபட்ட கவிஞர்கள் கதரை உற்பத்தி செய்யவும், கதரை விற்பனை செய்யவும் முன்வந்தனர் எனவும், தேச ரண்டகத்தை ஒழிக்க உதவும் தொண்டர்ப்படையே ராட்டினம் எனவும், அடிமை ஆட்சியை அகற்ற கதராடையை வாங்குமாறு கவிஞர்கள் கவிதைகளால் வேண்டியுள்ளதையும் காணமுடிகிறது எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக காந்தியின் நிர்மான இயக்கங்கள் பற்றி சில தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- நாட்டுத் துரோகி
- மயக்க உணர்வு
- மதுவினால் வரும் கேடுகள்
- மதுவினால் பெண்கள்பட்ட அவலநிலை
நாட்டுத் துரோகி:
யோக்கியமான கதராடையை உடுத்தினால் மட்டில்லா பாக்யம் கிடைக்கும். இந்தியர்களின் கொத்தடிமை தீரும் என்பதை கண்ண முருகனார்(1), விசுவநாத தாஸ், தியாகராச செட்டியார், பீர் முகமது சாகிப் ஆகியோரின் பாடல்கள் தெளிவாக உணர்த்துகின்றன.
நாட்டுத் துரோகி என்று கெட்டபெயர் வாங்கிடாமல் சுயராஜ்யம் பெற நல்ல கதரை அணிவீர் என்றும், காந்தியினுடைய சொற்படி கதரை உடுத்தினால் உங்களுக்குச் சாந்தி கிடைக்கும் என்றும் உணர்த்துகிறார் நடராஜப்பிள்ளை. அன்னியர் ஆடையை உடுத்துவதால் அவர்களுக்கு ஆண்டுக்கு அறுபதுகோடி ரூபாய் லாபம் கிடைக்கின்றது. இதை உணர உங்களுக்குச் சொந்த ஞானமில்லையா? மானமில்லையா? எனக் கேட்கிறார் நடராஜப்பிள்ளை. அவ்வாறு உணர்ந்துக் கொண்டும் கதர் அணியாதவர்களைப் ‘பதர்’ என்று பழித்துக் காட்டுகிறார் விசுவநாத தாஸ். அன்னிய நாடுகளுக்கு ஆடை அனுப்பிய பண்டை மரபை மறந்து அன்னியர் ஆடையை நம்பி அலைவது இழிவல்லவா? எனக் கவிமணியும்(2), பாரதிதாசனும் பாடல்களால் வெளிப்படுத்தியுள்ளனர்.
மயக்க உணர்வு:
கதரை உற்பத்தி செய்ய மக்களைத் தூண்டுவதும், அதனை வாங்கும்படி மக்களை வேண்டுவதும், வாங்காதவர்களை பழித்துக் காட்டுவதும், அவர்களுக்கு நாட்டின் பழைய நிலையும் தற்கால நிலையையும் விளக்கிக் காட்டுவதும் காந்தியக் கவிஞர்களின் கொள்கைகளாக இருந்ததை அவர்களின் கவிதைகள் தெளிவாகக் காட்டுகின்றன.
சங்ககாலம் முதல் மது அருந்துவது துன்பம் தரக்கூடியச் செயல் என்ற உணர்வும், அதனை அகற்றவேண்டும் என்ற உணர்வும் மக்களிடையே இருந்ததை திருக்குறள் வழி அறியமுடிகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மது அருந்துவதை முற்றிலுமாக அகற்றவேண்டும் என்ற போராட்டமும் சட்டமும் தோன்றியதாகத் தெரியவில்லை. ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட மதுபான வகைகள் இந்தியாவில் விற்கப்பட்டன. இதனால் இந்திய நாட்டின் பொருளாதாரம் சுரண்டப்பட்டது. அறியாமையில் இருக்கும் இந்தியர்களுக்கு மயக்க உணர்வை உண்டாக்கி விடுதலை உணர்வைத் தடை செய்யும் நிலை உருவாகியது. இந்நிலையைப் போக்க காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தில் மதுவிலக்குத் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தினார். மதுவிலக்குத் தீர்மானத்தைச் செயல்படுத்த மதுக்கடைகள் முன் மறியல் செய்யும் நிலை மக்களிடையே தூண்டப்பட்டது. 1920-ஆம் ஆண்டு முதல் 1947-ஆம் ஆண்டு வரை மது விலக்குப் பிரச்சாரம் விடுதலை உணர்வைத் தூண்டும் சக்தியாகச் செயல்பட்டதைக் கவிஞர்களின் பாடல்கள் தெளிவாக உணர்த்துகின்றன.
மதுவினால் வரும் கேடுகள்:
ஒரு மனிதன் குடிபோதையில் இருக்கும்போது அவனது தாய்க்கும், மனைவிக்கும், சகோதரிக்கும் இடையே வேறுபாடு காணமுடியாத நிலையை மது உருவாக்குகிறது(3) என்று காந்தியடிகள் கருதியதைப் பாலயானந்த சாமியும், கந்தசாமியும் தமது பாடல்களில் வெளிப்படுத்திக் காட்டியுள்ளனர். மதுவினால் மனைவி மக்களை இழிவாகப் பேசும்நிலை ஏற்படுகிறதென்று வீரணதாசும், பஞ்சமா பாதகத்தைவிட பாழுங்குடியே கொடிது, அதனால் கொலை, களவு, காமம் போன்ற இழிச்செயல்கள் செய்ய நேரிடுகிறது என்று பீர் முகம்மதுவும் வெளிப்படுத்தியுள்ளனர். கள் உண்பவனின் வீடு நரகமாகிறது என்று கந்தசாமியும், குணம், குலம், சம்பாத்தியம் ஆகியவற்றை அழித்து கோமாளியாக்கும் சிறப்புடையது மது என்று வீரணக் கோனாரும், மது அறிவுக்கு எதிரியாகச் செயல்படுகிறது என்று பெத்தண்ணச் செட்டியாரும், மது என்னும் நஞ்சுண்டால் மன அமைதி கெடுகிறது, மதிப்பும் கெடுகிறது என்று கி.வா.ஜெகந்நாதனும், ஏழைகளை பித்தர்களாவும், கஞ்சியற்றவர்களாகவும், நோயாளிகளாகவும் மாற்றுவது மது என்று நாமக்கல் கவிஞரும்(4) கவிதைகளைப் படைத்துள்ளனர். மதுவை அருந்தும் குடும்பத்தில் நாளுக்கு நாள் பொருளாதாரம் குறைந்து வறுமையை உண்டாக்குகிறது. அதனால் அக்குடும்பம் உண்ண உணவும் கிடைக்காமல் பசியால் வருந்துகிறது என்று நடராஜப்பிள்ளையும், துரைராஜனும் மதுவினால் வரும் கேடுகளைப் பாடல்களால் வெளிப்படுத்திக் காட்டியுள்ளனர்.
மதுவினால் பெண்கள்பட்ட அவலநிலை:
குடியை வெறுத்தால் அல்லாது நாட்டில் இன்பம் விளையாது என்று வேண்டுகோள் விடுக்கிறார் வீரணக் கோனார். பாம்பினுடைய நஞ்சு மனிதனுடைய உடலை மட்டுமே அழிக்கும் மது அதனுடைய உடலுடன் ஆன்மாவையும் அழித்து விடுகிறது என்று காந்தியடிகள்(5) எண்ணியதை, கோடி பொன் கொடுத்தாலும் கள்ளைக் குடித்து உடலைக் கெடுத்து நொந்து மடியாதீர் எனப் பாடியுள்ளார் நடராஜப்பிள்ளை. கள்ளைக் குடிப்பதால் வயிற்றுக்குச் சோறில்லாமல் பிள்ளைகள் சாகுதே என்றும், வீட்டிலும் நாட்டிலும் கலகம் ஏற்படுகிறதே என்றும் அழுது கொண்டு, கள்ளுக் கடைக்குச் செல்லும் தன் கணவனைப் போகாதே! என்று தன் மனைவி தடுப்பதாகப் பழனிவேல் பெண்கள்பட்ட அவலநிலையைப் பாடலால் வெளிப்படுத்திக் காட்டுகிறார். கள், சாராயம் போன்றவற்றைக் குடித்து, பெரியோர் சம்பாதித்து வைத்த சொத்துக்களை நாஸ்தி செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறார் எஸ்.ஜி. ராமசாமி. கள்ளினைக் குடிப்பதைவிட்டால் கைப்பணம் மிச்சமாகும், கௌரவம் கிடைக்கும் எனச் சுட்டிக்காட்டுகிறார் கி.வா.ஜகந்நாதன்.
அடுத்த வலைப்பதிவில் காந்தியின் நிர்மான இயக்கங்கள் பற்றி மேலும் சில தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. கண்ண முருகனார், சுதந்திர கீதம், ப.42.
2. தேசிய விநாயகம்பிள்ளை, மலரும் மாலையும், ப.186.
3. R.K. Prabhu,. and Rao, (Ed), The Mind of Mahatma Gandhi, P.472.
4. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.176-177.
5. D.G. Tendulkar, Mahatma, Vol.-II, p.297.
Sponsorship




0 கருத்துகள்