காந்திய இயக்கங்களும் கவிதைகளும் பகுதி - 3: காந்தியின் நிர்மான இயக்கங்கள் (கதர்க் கொள்கை,தேச ரண்டகம், அடிமை ஆட்சியை அகற்றுதல்)
சட்டையும் தொப்பியும் போட்டவர்களே சட்டசபை நுழைவை விரும்பியவர்கள். அவர்கள் பொம்மைகளாக சட்டசபையில் செயல்படுகிறார்கள் எனவும், சத்தியாக்கிரகம் என்பது நிர்மானத் திட்டங்களையும் குறிக்கிறது எனவும், காந்தியடிகள் சுதேசிய பொருள் உற்பத்தியே உணமையான சுயராஜ்ஜியம் என்று கருதினார் எனவும், கதர்க் கொள்கையை உருவாக்கிய காந்தியடிகளே கதர் அரசர் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக காந்தியின் நிர்மான இயக்கங்கள் பற்றி சில தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- கதர்க் கொள்கை
- தேச ரண்டகம்
- அடிமை ஆட்சியை அகற்றுதல்
கதர்க் கொள்கை:
காந்தியடிகளின் கதர்க் கொள்கையில் ஈடுபட்ட கவிஞர்கள் கதரை உற்பத்தி செய்யவும், கதரை விற்பனை செய்யவும் முன்வந்தனர். நாமக்கல் கவிஞர், பாரதிதாசன், பீர்முகமது சாகிப் போன்றவர்கள் கதரை அணிந்து கொண்டு கதர் மூட்டையைச் சுமந்துக் கொண்டு தெருத்தெருவாக கதர்த்துணியை விற்பனை செய்தனர். மக்களையும் கதர் உற்பத்திச் செய்து அதனை விற்பனை செய்யும்படி தூண்டும் பாடல்களைத் தெருத்தெருவாக பாடிச் சென்றனர். கதர் உற்பத்திக்கு ஆதாரமான ராட்டினத்தின் சிறப்பையும் கவிதைகளால் வெளிப்படுத்தியுள்ளனர்.
மக்கள் ராட்டையை இழந்து விட்டதோடு தங்கள் சுதந்திரத்தையும் இழந்து விட்டார்கள். கிராமங்கள் முன்னர் இருந்த நல்ல நிலைக்குத் திரும்பி வர வேண்டுமானால் ராட்டையும் அது சம்பந்தமானவைகளும் புத்துயிர்ப் பெற வேண்டும் என்ற காந்தியடிகளின் கருத்தைப் பரப்ப ராட்டினத்தைக் கவிதைகளால் வெளிப்படுத்தியுள்ளனர். நானிலம் போற்றும் நயமிகத் தோற்றமுடைய ராட்டினம் தன்னரசு அளிக்கவல்லது. அதனைக் கையில் தரித்து நொடியும் தாளாது சுழற்றுக என்று காந்தியடிகள் கூறியதை, இராய.சொக்கலிங்கமும்(1), கவிக்குஞ்சரமும் கவிதைகளால் வெளிப்படுத்திக் காட்டியுள்ளனர். நாட்டின் வறுமையை அகற்ற ராட்டினத்தைச் சுற்றவேண்டும் என்ற கருத்தை,
“ராட்டினம் எல்லோரும் சுற்று வீரே யிந்த
நாட்டின் வறுமையை அகற்றுவீரே”
என்ற பாடலில் பீர் முகமதுவும்,
“நந்நியாய மெய்க் கதருண்டாக்குவோம்
இனி – நாமனை வரும்கைராட்டைத் தூக்குவோம்”
என்ற பாடல் மூலம் வீரணக் கோனாரும் ராட்டினத்தைச் சுற்ற மக்களை அழைத்துள்ளதைக் காணமுடிகிறது. தேனருந்தும் ஈக்கள் ஒன்றுசேர்ந்து மொய்த்தல் போல் இந்தியர்கள் ஒன்றுகூடி ராட்டினத்தைச் சுற்றுவீர் என பாரதிதாசனும், ராட்டை ஓட்டுவதால் இந்தியாவை மீட்போம் என கவிக் குஞ்சரமும், அன்னிய நூலைத் தொடாமல் அகற்றிட அறுபதுகோடி கைகளாலும் ராட்டினத்தைச் சுற்றவேண்டும். இதனால் காந்தியடிகளின் அறச்செயல் வெல்லும் எனப் பாரதிதாசனும் ராட்டினத்தின் சிறப்பை வெளிப்படுத்திக்காட்டி மக்களைக் கதர் அபிவிருத்தியில் ஈடுபட வைக்கும் திறன் போற்றத்தக்கது.
தேச ரண்டகம்:
தேச ரண்டகத்தை ஒழிக்க உதவும் தொண்டர்ப்படையே ‘ராட்டினம்’ என்கிறார் கவிக்குஞ்சரம். பீரங்கிப் படைக்கு எதிர்ப் படையாக விளங்குகிறது ராட்டினம் என்ற அருணகிரி நாதரும் பாடியுள்ளதை நோக்கும்போது ராட்டினம் அக்காலத்தில் பொருளாதாரச் சுரண்டலை ஒழித்து அன்னியர்களை நாட்டைவிட்டு அகற்ற ஆயுதமாகக் கருதப்பட்டதைத் தெளிவாக உணரமுடிகிறது.
வாடும் பயிருக்கு உதவும் மாரியைப் போல் அடிமை நிலையை அகற்றிச் சுய ஆட்சி உண்டாக்கவும், அதன்மூலம் சுகவாழ்வு பெறவும் ராட்டையைச் சுழன்று சுழன்று வேகமாக ஆடவைக்க வேண்டுகோள் விடுகின்றனர் நாமக்கல் கவிஞர்(2) கவிக்குஞ்சரமும், அழகன் போன்றோர்.
அடிமை ஆட்சியை அகற்றுதல்:
ராட்டினத்தின் சுழற்சியால் உருவான கதராடையின் சிறப்பையும் கவிஞர்கள் பாடும் பொருளாக்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சி செழிக்கத் தோன்றியதே ‘கதராடை’ என்று தியாகராசச் செட்டியாரும், புண்ணியர்களும், தேவர்களும், மன்னர்களும் மாதவத்தவர்களும் மதிக்கும் சிறப்புடையது ‘கதராடை’ என்று கண்ண முருகனாரும், கவிதைகளைப் படைத்துள்ளனர்.
“துதி பெறுந் தனி மகிமை கொண்டது – சுதந்திரக் கதருடையே
தொழில்களில் வளர் புனிதமிகு சுகந்தரும் கதருடையே”
என்று இராமநாதனும், தேசத்திலேயே விசுவாசத்திலும் ரோசத்திலும், வீர வேசத்திலும் காரணன் காந்தியே கதருடையே சிறப்புடையது என்று அருணகிரிநாதரும் கதராடையின் சிறப்புக்களைப் புலப்படுத்தியுள்ளனர்.
கதராடையை நெய்வதற்கு அடையும் துன்பங்களை வெளிப்படுத்திக்காட்டி அவற்றை வாங்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கும் நிலையும் கவிஞர்களிடம் இருந்ததைப் பார்க்கமுடிகிறது. கணவனை இழந்த ஒரு விதவைப்பெண் குடும்பத் துன்பங்களுக்கிடையிலும், பிற துன்பங்களுக்கிடையிலும் நெய்தக் கதராடையை விற்பனை செய்வதாக,
“மறுந்து நீர் தள்ளாமல் கொள்ளுவீரே – எங்கள்
வயிற்றில் எரி தணியச் செய்குவீரே”
என்ற பாடலைப் புலம்பலாக வெளிப்படுத்திக் காட்டுகிறார் கவிமணி(3). ஏழைகளும், எளியவர்களும், கன்னியர்களும், களைத்தவர்களும், கூனர்களும், குருடர்களும், தாழ்ந்தவர்களும், தளர்ந்தவர்களும் நூற்றுக் கதராடையை அவர்கள் இன்பமடைய கதர்த்துணி வாங்கலையோ! ஐயா! அம்மா! என்று ஒரு பெண் விளித்துக் கேட்பதாகப் பாடியுள்ளார் நாமக்கல் கவிஞர்(4). வறுமையால் ஏங்கித் தவிப்பவரைக் காக்கவும், பகைவரின் துன்பம் வேறுடன் தூளாகவும், அடிமை ஆட்சியை அகற்றவும், ஒத்துழையாமை மாட்சி பெறவும் கதராடையே வாங்குமாறு கவிஞர்கள் கவிதைகளால் வேண்டியுள்ளதையும் காணமுடிகிறது. காந்திய பக்தியில் ஈடுபாடுகொண்டிருந்த சின்னசாமிப் பிள்ளை, தீபாவளி தினத்தில் கதருடையை உடுத்தவேண்டும் என்பதனை,
“தீபாவளி வருகுதையா
சீமைத் துணி வேண்டாமையா
ஆவலோடு கதரை – தேச பக்தரே
அன்போடு வாங்குமையா!”
என்ற பாடலாக வெளிப்படுத்தியுள்ளார்.
அடுத்த வலைப்பதிவில் காந்தியின் நிர்மான இயக்கங்கள் பற்றி மேலும் சில தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. ராய. சொக்கலிங்கம், காந்தி கவிதைகள், ப.19.
2. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.376.
3. தேசியவிநாயகம்பிள்ளை, மலரும் மாலையும், பக்.184-187.
4. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.386.
Sponsorship




0 கருத்துகள்