காந்தியமும் கவிதைகளும் - காந்திய இயக்கங்களும் கவிதைகளும் பகுதி - 2: ஒத்துழையாமை இயக்கம், காந்தியின் நிர்மான இயக்கங்கள்
இந்திய மக்களின் விடுதலை உணர்வை அடக்க கொண்டுவரப்பட்ட ரௌலட் சட்டங்கள் இந்தியர்களிடையே புதிய சத்தியாக்கிரக உணர்வைக் காந்தியடிகள் உருவாக்கச் சாதகமாக அமைந்தன எனவும், பஞ்சாப் படுகொலையை எதிர்க்கும் வகையில் காந்தியடிகளின் சிந்தனையில் உருவாகிய சத்தியாக்கிரக இயக்கத்தின் ஒருவகையே ஒத்துழையாமை இயக்கமாகும் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக காந்திய இயக்கங்களும் கவிதைகளும் பகுதியில் ஒத்துழையாமை இயக்கம் பற்றி சில தகவல்களையும், காந்தியின் நிர்மான இயக்கங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- சட்டசபை பொம்மைகள்
- காந்தியின் நிர்மான இயக்கங்கள்
- சுதேசிய பொருள் உற்பத்தி
- கதர் அரசர்
சட்டசபை பொம்மைகள்:
ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்ட நிலையில் சட்ட மன்றங்களுக்குச் சென்று ஒத்துழையாமையைத் தொடர்ந்து நடத்தவேண்டும் என்ற ஆலோசனையை சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு, விட்டல்பாய் படேல் ஆகியோர் வெளிப்படுத்திக் காட்டினர். இக்கருத்தை காந்தியடிகளின் ஆதரவாளர்களான இராஜாஜி, அன்சாரி போன்றோர் எதிர்த்தனர். இதனால் காங்கிரசில் இருவேறுபட்ட குழுக்கள் தோன்றின. ஒரு குழு சட்டசபை நுழைவை எதிர்த்தது. மற்றொரு குழு சட்டசபை நுழைவை விரும்பியது(1). காந்தியக் கொள்கைகளில் ஈடுபட்ட கவிஞர்கள் சட்டசபை நுழைவை மேற்கொண்டவர்களையும், கவிதைகளால் பழித்துக்காட்டியுள்ளனர். சட்டசபை நுழைவை எதிர்த்து அருணகிரி நாதர்,
“புதுவாத மாடியே காந்திசொல் போதனை
புறக்கணித்தெறிந்துவிட்டோம்
புத்தியில்லாமலே சட்டசபை என்கின்ற
பொரிதனில் புகுந்து கொண்டோம்”
என்ற பாடலாக வெளிப்படுத்திக் காட்டுகிறார். எல்லா உரிமைகளும் ஆட்சியாளரிடம் இருப்பதால் சட்டசபைக்குச் சென்று என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்று காந்தியடிகள் வருந்திக் கூறியதை இரா.சொக்கலிங்கத்தின் கவிதைகள் தெளிவாக்குகிறது(2). சட்டையும் தொப்பியும் போட்டவர்களே சட்டசபை நுழைவை விரும்பியவர்கள். அவர்கள் பொம்மைகளாக சட்டசபையில் செயல்படுகிறார்கள் என்பதனை,
“காந்தி மறுத்திட்ட சட்டசபை
காட்டிக் கொடுத்திட்ட சட்டசபை
பூந்து புறப்பட்ட ஆளுகளை
பொம்மை களாக்கிடும் சட்டசபை”
என்ற பாடல் மூலம் கொத்தமங்கலம் சுப்பு(3) சட்டசபையில் நுழைந்தவர்களை பொம்மைகள் என பழித்துக் காட்டியுள்ளார். சட்டசபையில் இருப்பவர்களை பொம்மைகள் என்று பாடியுள்ளார் பாஸ்கரதாஸ்(4). காந்தியத்தை எதிர்ப்பவர்களையும் பாடல்களால் வெளிப்படுத்தும் நிலை இருந்ததைக் காணமுடிகிறது.
காந்தியின் நிர்மான இயக்கங்கள்:
ஒத்துழையாமை இயக்கத்தால் சிறை சென்ற காந்தியடிகள் விடுதலை அடைந்ததும் சுயராஜ்யக் காட்சியினரின் செல்வாக்கு வலிமை பெற்றிருப்பதை நன்குணர்ந்தார். இந்நிலையில் இந்திய விடுதலை உணர்வுக்குத் தடைகளாக இருக்கும் தீண்டாமை, மதவேறுபாடு, மது, அன்னியப்பொருள், பெண்ணடிமை, சாதி வேறுபாடு ஆகியவற்றை அகற்றி மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முயன்றார்.
காந்தியடிகளின் கருத்துப்படி சத்தியாக்கிரகம் என்பது நிர்மானத் திட்டங்களையும் குறிக்கிறது(5). ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் வன்முறையும், பிளவு சக்திகளும் உருவாவதைக் கண்ட காந்தியடிகள்(6) இந்தியா விடுதலையடைவதற்குரிய பக்குவத்தை மக்களிடையே ஏற்படுத்த,
“நிர்மானத் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதே
முழு அளவிலான விடுதலையை எய்தும் வழியாகும்”
என்ற கருத்தை பரப்ப முயன்றார். இக்கருத்தை கொத்தமங்கலம் சுப்பு(7),
“நிர்மானத் திட்டமெனும் நேர் வழியாம்பாதை
நீள நடை போட்டு விட்டால் நிச்சயம் சுயராஜ்யம்”
என்ற பாடலாக வெளிப்படுத்திக்காட்டி காந்திய நிர்மானத் திட்டத்தை மக்களிடையே பரப்ப முயல்கிறார். தமிழகத்தில் நிர்மானத் திட்டங்களை பிரச்சாரம் செய்ய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செங்கோட்டில் 1924-இல் ‘காந்தி ஆசிரமம்’ அமைக்கப்பட்டது(8).
சுதேசிய பொருள் உற்பத்தி:
வங்காளப் பிரிவினையின் போது அன்னியப் பொருள்களை அகற்றவேண்டும் என்ற சுதேசிய உணர்வு தோன்றிய போதிலும் சுதேசிய பொருள்களை அதிகமாக உற்பத்தி செய்யவேண்டும் என்ற முயற்சி தீவிரமடையாத நிலையில் இருந்தது. இக்குறையை நன்குணர்ந்த காந்தியடிகள் சுதேசிய பொருள் உற்பத்தியே உணமையான சுயராஜ்ஜியத்திற்கு வழி வகுக்கும் என்றும் கருதினார்(9).
அன்னியப் பொருள்களை அகற்றுவதில் கதர் உற்பத்தி முக்கியமான ஒன்றாகும். விடுதலைக்கான சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ‘அன்னியத் துணிக்கடை மறியல்’ கதர் உற்பத்தியை நோக்கமாகக் கொண்டே இடம்பெற்றது. அன்னியப் பொருள்களை புறக்கணிப்பதன் வாயிலாக அன்னிய நாட்டினர் இந்தியப் பொருளாதாரத்தில் வலுவான பிடிப்புக் கொண்டிருப்பதை அகற்றமுடியும் என்றும் கருதினார். இக்கருத்தை நிறைவேற்றவே காந்தியடிகள் கதர் உபயோகத்தைச் சுதேசியத்தின் அடிப்படையாகக் கொண்டார்(10) எனக் கருதமுடிகிறது.
கதர் அரசர்:
ஆங்கிலேயர் இந்தியாவில் விளையும் பருத்தியை எடுத்துச் சென்று ஆடை உற்பத்திச் செய்து அதை இந்தியாவில் விற்று பொருளாதாரத்தைச் சுரண்டிச் சென்றனர். அதை தடுக்கவேண்டும் என்ற நோக்கத்திலும், வேலையற்ற இந்தியருக்கு வேலையளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், இந்தியப் பொருளாதாரத் தன்னிறைவை நோக்கமாகக் கொண்டும் கதர் கைத்தொழில்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். இதன்மூலம் கோடானகோடி இந்திய மக்களின் வறுமையை அகற்றி பொருளாதார விடுதலையையும் அரசியல் விடுதலையையும் பெற(11) காந்தியடிகள் ‘கதர்ப்பொருளாதாரக் கொள்கையை’ உருவாக்கினார்(12). இக்கொள்கையைச் செயல்படுத்த அயல்நாட்டுத் துணிகளைப் புறக்கணித்தல், ராட்டின நெசவுத் தொழிலைக் கற்பித்தல், கையால் நெய்யப்பட்ட துணிகளை மட்டுமே உபயோகித்தல் என்ற மூன்றையும் மக்கள் முன்வைத்தார். இத்தகைய கதர்க் கொள்கையை உருவாக்கிய காந்தியடிகளை ‘கதர்’ அரசர்(13) என வெளிப்படுத்திக் காட்டியுள்ளது ‘குமரன்’ பத்திரிகை.
அடுத்த வலைப்பதிவில் காந்தியின் நிர்மான இயக்கங்கள் பற்றி மேலும் சில தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. Nirmal Kumar Bose, Studies in Gandhism, p.157.
2. ராய. சொக்கலிங்கம், காந்தி கவிதைகள், ப.48.
3. கொத்தமங்கலம் சுப்பு, காந்தி மகான் கதை, ப.54.
4. பாஸ்கரதாஸ், இந்து தேசாபிமானிகள் செந்தமிழ்த் திலகம், ப.37.
5. V. Bondurant, Joan, Conquest of Non Violence, The Gandhian Philosophy of Conflict, p.38.
6. M.K. Gandhi, Constructive Programme, Its meaning and place, p.5.
7. கொத்தமங்கலம் சுப்பு, காந்தி மகான் கதை, ப.61.
8. நாரணதுரைக் கண்ணன், இராஜாஜி, ப.70.
9. M.K. Gandhi, Collected works of Mahatma Gandhi, VII, p.332.
10. M.K. Gandhi, Collected works of Mahatma Gandhi, VII, p.16.
11. J. Bandyopadhyaya, Social and Political thoughts of Gandhi, P.208.
12. M.K. Gandhi, Economics of Khadi, P.XV.
13. சொ. முருகப்பச் செட்டியார், குமரன், 5.9.1927.
Sponsorship




0 கருத்துகள்