காந்தியமும் கவிதைகளும் - காந்திய இயக்கங்களும் கவிதைகளும் பகுதி - 1: ரௌலட் சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம்
இந்திய நாடு விடுதலை அடைவதற்குத் தூண்டுதலாக அமைந்தது காந்தியடிகளின் சத்தியாக்கிரகப் போர் என்றே கூறலாம் எனவும், அமுதமொத்த காந்தி மார்க்கமே தமிழக மக்களின் செல்வம். அதை உறுதியுடன் பரப்புவது தமிழர்களது சேவை எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக காந்திய இயக்கங்களும் கவிதைகளும் பகுதியில் ரௌலட் சத்தியாக்கிரகம் பற்றியும், ஒத்துழையாமை இயக்கம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- ரௌலட் சத்தியாக்கிரகம்
- பஞ்சாப் படுகொலை
- ஒத்துழையாமை இயக்கம்
- மக்கள் இயக்கம்
ரௌலட் சத்தியாக்கிரகம்:
இந்திய மக்களின் விடுதலை உணர்வை அடக்க கொண்டு வரப்பட்ட ரௌலட் சட்டங்கள் இந்தியர்களிடையே புதிய சத்தியாக்கிரக உணர்வைக் காந்தியடிகள் உருவாக்கச் சாதகமாக அமைந்தன. முதல் உலகப்போரில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்த காந்தியடிகள் ரௌலட் சட்டத்தை எதிர்த்து சத்தியாக்கிரகப் போருக்கு மக்களைத் திரட்ட முன்னணியில் நின்றார்(1). ரௌலட் சட்டத்தை எதிர்க்கும் மக்கள் தலைவராக காந்தியடிகள் அரசியலில் நுழைந்தபோது தேசத்தை அரசின் பலாத்கார நடவடிக்கையிலிருந்து காப்பாற்றுவது மட்டுமே அவரது நோக்கமாக இருந்தது.
நாட்டு மக்களிடையே சத்தியாக்கிரக உணர்வை வளர்க்க காந்தியடிகள் ‘சத்தியாக்கிரக சபை’ ஒன்றையும், ‘சத்தியாக்கிரகி’ என்ற பத்திரிகையையும் உருவாக்கினார். 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 6 முதல் 13 வரையுள்ள ஒரு வாரத்தை ‘சத்தியாக்கிரக வாரமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அந்நிலையில் சத்தியாக்கிரக சபையினர் சட்டமறுப்பு இயக்கத்திற்குச் சில அரசியல் சட்டங்களைத் தேர்வு செய்தனர். சத்தியாக்கிரக வாரத்தின்போது நாடு முழுவதும் ஏற்பட்ட கிளர்ச்சிகள் பஞ்சாப் படுகொலைக்குத் தூண்டுதலாக இருந்தது என்றும் கூறமுடியும். காந்தியடிகள் மேற்கொண்ட ரௌலட் சத்தியாக்கிரகமும் அதன் விளைவாக பஞ்சாப் படுகொலையும் கவிஞர்களின் உள்ளங்களில் உணர்வை ஏற்படுத்தியதை அவர்களின் கவிதைகள் வழி அறியமுடிகிறது. ரௌலட் சட்டத்தையும், அதை அழிக்கத் தோன்றிய சத்தியாக்கிரக இயக்கத்தையும் உவமைகள் மூலம் திரு.வி.க.(2)
“உள்ள சட்டம் நிறை விலை யென்றுரிமை கொரும் கருஞ்சட்டம்
நள்ளிரவிற் கரியவரை நாகமென நகர்ந்துவே”
என்ற பாடலாகவும்,
“அழிக்க அதைத் தவமுதல்வர் அரிய சத்யாகிரக
ஒழுக்கமுயர் இயக்கமது உவணனென எழுந்ததுவே”
என்ற பாடலாகவும் வெளிப்படுத்திக் காட்டுகிறார். இச்சட்டத்தால் நாடு முழுவதும் காடாகிறது என்று காந்தியடிகள் வருந்தியதைக் கொத்தமங்கலம் சுப்பு(3) தனது பாடலில் வெளிப்படுத்தி உள்ளார். ரௌலட் சத்தியாக்கிரகப் போருக்குக் காந்தியடிகள் மக்களைத் திரட்டிய பாங்கை நாமக்கல் கவிஞரும்(4) இராய.சொக்கலிங்கமும்(5) கவிதைகளால் புலப்படுத்தியுள்ளதை நோக்கும்போது அவர்களின் காந்திய உணர்வு தெளிவாகிறது.
பஞ்சாப் படுகொலை:
ரௌலட் சத்தியாக்கிரகம் பஞ்சாப் படுகொலையை உருவாக்கிய நிலையில் மக்கள் வெறுப்படைந்து விழிப்புணர்வு பெற்றனர்(6). பஞ்சாப் படுகொலை, பாஸ்கரதாஸ், திரு.வி.க., ரத்னம், இராஜகோபால் நாயகர், பீர்முகமது சாகிப் போன்ற கவிஞர்களின் உள்ளங்களையும் பாதித்திருப்பதை அவர்களின் கவிதைகள் வெளிப்படுத்திக் காட்டுகின்றன.
ஒத்துழையாமை இயக்கம்:
பஞ்சாப் படுகொலையை எதிர்க்கும் வகையில் காந்தியடிகளின் சிந்தனையில் உருவாகிய சத்தியாக்கிரக இயக்கத்தின் ஒருவகையே ஒத்துழையாமை இயக்கமாகும். அரசாங்கத்திடம் ஒத்துழைக்க மறுப்பதன் மூலம் வன்முறைச் செயல்களில் ஈடுபடாமல் சாத்வீக எதிர்ப்பு தெரிவிப்பதே இதன் நோக்கமாகும். சில தலைவர்களின் எதிர்ப்புக்கு இடையிலும் ஒத்துழையாமை இயக்கம் நடத்த பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது. இவ்வியக்கம் தன்னலத்தைத் தியாகம் செய்யும் இயக்கமாக இருந்தும் மக்கள் இதனை விரும்பிச் செயல்பட்டது விடுதலை உணர்வின் உச்சநிலையைக் காட்டுகிறது.
மக்கள் இயக்கம்:
ஒத்துழையாமை இயக்கம் தோல்வியைத் தந்தாலும் இந்தியர்களிடையே தன்னம்பிக்கையையும், சுதேசிய உணர்வையும், கதர் உற்பத்திச் செய்யும் ஆற்றலையும் உருவாக்கிய காங்கிரசை மக்கள் இயக்கமாக மாறச் செய்தது. மக்களியக்கமாக மாறிய ஒத்துழையாமையை ஆதரித்து கவிஞர்களிடத்தில் வெளிப்பட்ட உணர்வு அவர்களின் கவிதைகள் மூலம் அறியமுடிகிறது. காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தின் தலைமையை ஏற்ற நிலையை,
“உத்தமசற்குண தேசபக்தர்
ஒத்துழையாமையின் தவகர்த்தர்”
சதாசிவதாசின்(7) பாடல் வெளிப்படுத்தியுள்ளதையும் காணமுடிகிறது. ஒத்துழையாமை இயக்கத்தை ‘நெருங்கிய பயன் சேர் ஒத்துழையாமை’(8) என்று பாரதியாரும் ‘தத்துவம்’ என்ற இராய.சொக்கலிங்கமும், ‘நான்மறை’ என்று வீரணக் கோனாரும், ‘வஞ்சகத்தை அகற்ற வந்த மருந்து’ என்ற கண்ண முருகனாரும்(9) கவிதைகளால் வெளிப்படுத்தியிருத்தலை என்னும்போது ஒத்துழையாமை இயக்கத்தின் சிறப்பு தெளிவாகிறது.
ஒத்துழையாமை இயக்கத்தின் வலிமை காந்தியடிகளைச் சிறைப்படுத்திய நிலையில் காந்தியக் கவிஞர்கள் அவரின் சிறைத் தண்டனையையும், சிறையில் அவருக்கு ஏற்பட்ட துன்ப நிலையையும் கவிதைகளால் வெளிப்படுத்தி மக்களைத் தூண்டியுள்ளார். இவர் கைதான நிகழ்ச்சியைப் பொன்னாண்டிப் பிள்ளையும், மாணிக்க நாயக்கரும், கவிதைகளாக்கி உள்ளனர். அவர்மீது தொடரப்பட்ட வழக்கு அதற்குக் கொடுக்கப்பட்ட சிறைத் தண்டனை ஆகிய நிகழ்ச்சிகளைப் பொன்னுசாமிப்பிள்ளை கவிதையாக்கி உள்ளார். குடல் நோயால் மகாத்மா காந்தி விடுதலையான நிகழ்ச்சியை முகமது அலிப் பாவலர், அசலாம்பிகை அம்மையார், இராய.சொக்கலிங்கம், பீர்முகமது போன்றோரும் பாடல்களால் வெளிப்படுத்தியுள்ளனர். காந்தியக் கொள்கைகளையும் ஒத்துழையாமை இயக்கத்தையும் ஆதரித்துக் கவிதைகள் பாடவேண்டும் என்ற உணர்வு, தமிழ்க் கவிஞர்களின் கொள்கையாக இருந்ததைத் தெளிவாகப் பார்க்கமுடிகிறது.
அடுத்த வலைப்பதிவில் காந்திய இயக்கங்களும் கவிதைகளும் பகுதியில் ஒத்துழையாமை இயக்கம் பற்றி மேலும் சில தகவல்களையும், காந்தியின் நிர்மான இயக்கங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. Mahajan, The Nationalist Movement in India, P.233.
2. திரு.வி.க. தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு, ப.33.
3. கொத்தமங்கலம் சுப்பு, காந்தி மகான் கதை, ப.33.
4. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.327.
5. ராய. சொக்கலிங்கம், காந்தி கவிதைகள், ப.41.
6. P.N. Chopra, (Ed), Who’s who of Indian Martyrs, Vol.III, P.165.
7. ஏ.எஸ். சதாசிவதாஸ், இந்தி தேசாபிமானிகள் செந்தமிழ்த் திலகம், ப.28.
9. கண்ண முருகனார், சுதந்திர கீதம், ப.53.
Sponsorship



0 கருத்துகள்