காந்தியமும் கவிதைகளும் - காந்தியக் கொள்கைகள் - சத்தியாக்கிரகக் கொள்கை
அஹிம்சைத் தத்துவத்தை வெளிப்படுத்துவதில் கவிதைகளும் பங்கு பெற்றிருந்தன எனவும், அஹிம்சை வன்முறையைவிட மிக மேலானது. அஹிம்சை வழியில் தோல்வியே கிடையாது எனவும், காந்தியடிகளின் புகழே அஹிம்சையின் அகராதியாகும். சிறிதளவு தீமையை உண்டாக்கி பெரிய நன்மையை அடையச் செய்வது அஹிம்சை நெறியாகும் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக காந்தியின் கொள்கைகளின் வகைகளில் சத்தியாக்கிரகக் கொள்கை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- அஹிம்சை நெறியின் நன்மைகள்
- சத்தியாக்கிரகக் கொள்கை
- சத்தியாக்கிரகப் போராட்ட முறைகள்
- சத்தியாக்கிரகமே அணுக்கிரகம்
அஹிம்சை நெறியின் நன்மைகள்:
காந்தியின் அஹிம்சை நெறியில் மக்களிடையே நட்புறவு நயமாக வளரும், நகை முகத்துடன் கூடிய இனிய சொல் எங்கும் ஒளிரும், தரித்திரக் கொடுமைகள் நீங்கி எங்கும் தானமும் தருமமும் ஓங்கி வளரும், உலக நாடுகள் அனைத்தையும் பகை நீக்கி பயம் இல்லாமல் வாழ வைக்கும், அன்பும் அறனும் சிறக்கத் துணை புரியும், அரசியல் முறை சிறப்பாக அமையும், தொழில்களில் தூய்மையையும் வன்மையையும் நிலைக்கும், பிச்சையெடுப்பவர் என்ற நிலை நீங்கிப் பொதுவுடைமை அரசை அமைக்கும்(1). காந்தியடிகளின் அஹிம்சைப் போரின் விளைவுகளையும், அதனைப் பாதுகாக்கவேண்டிய முறைகளையும் கவிதைகளால் வெளிப்படுத்திக் காட்டி மக்களைத் தூண்டும் நிலை கவிஞர்களிடம் இருந்ததைக் காணமுடிகிறது.
சத்தியாக்கிரகக் கொள்கை:
இந்திய நாடு விடுதலை அடைவதற்குத் தூண்டுதலாக அமைந்தது சத்தியாக்கிரகப் போர் என்றே கூறலாம். சத்தியாக்கிரகம் என்பது சத்தியத்தை அஹிம்சை வழியில் அடைவதற்குப் புகுத்தப்பட்ட ஒரு புதுப்போர் முறையாகும். அரசியல் விடுதலையை ஆன்ம பலத்தினால் அடைய முயல்வதே சத்தியாக்கிரகத்தின் சிறப்பு அம்சம் என்பது தெளிவாகிறது.
வன்முறைப் போரை அறப்போராக மாற்றவேண்டும் என்ற உணர்வு முதன் முதலில் அமெரிக்கச் சிந்தனையாளரான வில்லியம் ஜேம்ஸ் என்பவரிடத்தில் உருவானது உடல் வலிமையைக் கொண்டு நிகழ்த்தும் வன்முறைப் போராட்டத்திற்குப் பதிலாக மனவலிமையால் நிகழ்த்தும் போராட்ட முறையை டால்ஸ்டாயும் வெளிப்படுத்தியுள்ளார். “சாத்வீக எதிர்ப்பு” என்ற சொல் எட்டு ஆண்டுகளாக தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்டாலும்(2) அதற்கு முன்பே பண்டை வைதீக ஆங்கில உணர்வில் கிருஸ்துவப் பாதிரிமார்களால் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. கருத்தளவில் கூறப்பட்டு வந்த இக்கொள்கையை காந்தியடிகள் சத்தியத்தையும், அஹிம்சையையும் இணைத்து முதன் முதலில் ‘சாத்வீக எதிர்ப்பு’ என்ற போராக தென்னாப்பிரிக்காவில் ஆரம்பித்தார்.
தென்னாப்பிரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக இயக்கம் முதன் முதலில் உலக வரலாற்றில் போர் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டுப் புதியதோர் தத்துவத்தைக் கொண்ட திட்டத்தை ஆயுதமின்றி இரகசியமின்றி வெளிப்படையாகத் தூய்மையுடன் விடுதலைப் போராக நடத்தினார்.
சாத்வீக எதிர்ப்புப் போரை ‘சத் கிரகப் போர்’ என அழைத்தார் மகன்லால் காந்தி. ஒரு நல்ல விசயத்தில் உறுதி என்பது அதன் பொருள்; அவ்வார்த்தை எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் நான் எதிர்பார்த்த முழுக் கருத்தையும் அது தெரிவிக்கவில்லையாதலால் அச்சொல்லை ‘சத்தியாக்கிரகம்’ என மாற்றினேன். அதன் பிறகு இந்திய இயக்கத்தை சத்தியாக்கிரக இயக்கம் என்று கூற ஆரம்பித்தேன் என்று காந்தியடிகளே கூறியுள்ளார்.
சத்தியாக்கிரகப் போராட்ட முறைகள்:
சத்தியத்தை உறுதியாகப் பற்றியிருப்பது என்பது சத்தியாக்கிரகத்தின் சாதாரண பொருள்; ஆகையால் சத்தியத்தின் வலிமை என்றும், அன்பு அல்லது ஆன்ம வலிமை என்றும் சொல்லப்படுகிறது. அஹிம்சையை அடிப்படையாகக் கொண்டு சத்தியத்தைக் காக்கும் முறையில் அதிகாரக் கொடுமைகளை எதிர்த்து நிற்கும் போராட்ட நெறிமுறையாக காந்தியடிகள் சத்தியாக்கிரகக் கொள்கையை உருவாக்கினார்(3). இம்சையை அடிப்படையாகக் கொண்ட முறைகளுக்குப் பதிலாகக் கையாளப்படும் முற்றிலும் சத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட இயக்கமாகவும், இந்தியர்கள் தங்களுடைய குறைகளைப் போக்கிக்கொள்ளவும், அதே சமயத்தில் இந்தியா முழுவதும் இம்சை தலைதூக்காமல் தடுக்க உதவும் இயக்கமாக சத்தியாக்கிரகம் அமையவேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார்.
சுதந்திரம் அடைவதற்குச் சத்தியாக்கிரகத்தைவிட முதலும் முடிவுமான வேறு நல்ல பாதை இல்லை(4) என்று கூறிய காந்தியடிகள் சமுதாய பொருளாதார அரசியல் விடுதலைக்காக நாற்பதிற்கு மேற்பட்ட சத்தியாக்கிரக இயக்கங்களை நடத்தியுள்ளார்(5). உண்ணாவிரதம், விரும்பி இடம்பெயர்தல், வேலை நிறுத்தம், அமைதியான மறியல், ஒத்துழையாமை, சட்ட மறுப்பு, அமைதி அணிவகுப்பு, ஊர்வலம்(6) போன்ற பல சத்தியாக்கிரகப் போராட்ட முறைகள் இருப்பினும் இந்திய விடுதலைப் போரில் ஒத்துழையாமை, சட்டமறுப்பு ஆகிய இரண்டை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்(7). இவை இரண்டும் சத்தியாக்கிரகம் என்ற மரத்தில் தோன்றிய இருவேறுபட்ட கிளைகளாகும்.
சத்தியாக்கிரகமே அணுக்கிரகம்:
காந்தியடிகளிடம் பக்திக் கொண்டிருந்த நாமக்கல் கவிஞர், திரு.வி.க. வீரணக்கோனார், பாஸ்கரதாஸ், சதாசிவதாஸ், பீர்முகமது சாகிப், இராய.சொக்கலிங்கம் போன்றோர் சத்தியாக்கிரக் கொள்கையை கவிதைகளால் பரப்ப முயன்றனர். காந்தியடிகளின் சத்தியாக்கிரக நெறியைப் பின்பற்றினால் கருத்தாட்சி மலர்ந்துவிடும் என்கிறார் திரு.வி.க.(8) சத்தியாக்கிரகமே சாரும் அணுக்கிரகம் என்று வீரணக் கோனார் வெளிப்படுத்தியுள்ளார்.
அமுதமொத்த காந்தி மார்க்கமே தமிழக மக்களின் செல்வமாம். அதை உறுதியுடன் பரப்புவது தமிழர்களது சேவையாம் என்று வேண்டுகோள் விடுக்கிறார் நாமக்கல் கவிஞர்(9). சத்தியத்தை நம்பும் யாவரும் சத்தியப் போரில் சேரும்படி அழைப்புவிடுக்கிறார் நாமக்கல் கவிஞர்(10). காந்தியினுடைய சத்தியாக்கிரகப் போருக்கு மக்களைத் தயார் செய்வது அக்காலக் கவிஞர்களின் கருத்தாக அமைந்ததை அவர்களின் கவிதைகள் தெளிவாகக் காட்டுகின்றன.
சர்வோதயம், நிர்மானத் திட்டங்கள் போன்ற காந்தியக் கொள்கைகள் சமுதாயச் சீர்திருத்தத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படுத்தப்பட்டதால் அக்கொள்கைகள் பற்றி இங்கு பதிவிடவில்லை. விடுதலை உணர்வைக் கவிஞர்கள் கவிதைகளாக வெளிப்படுத்தியுள்ளதை ஆராய்வதே இவ்வலைப்பதிவின் தலையாய பணியாகும்.
அடுத்த வலைப்பதிவில் காந்திய இயக்கங்களும் கவிதைகளும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.97.
2. M.K. Gandhi, The Voice of Truth, P.179.
3. N. Raghavan Iyer, The Moral and Political thought of Mahatma Gandhi, P.252.
4. M.K. Gandhi, The Voice of Truth, P.202.
5. Nirmal kumar Bose, Studies in Gandhism, p.86.
6. V.P. Varma, The political philosophy of Mahatma Gandhi and Sarvodoya, P.P.200-208.
7. V. Bondurant, Joan, Conquest of Non Violence, The Gandhian Philosophy of Conflict, p.36.
8. திரு.வி.க. தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு, ப.33.
9. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.103.
10. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.115.
Sponsorship




0 கருத்துகள்