காந்தியமும் கவிதைகளும் - காந்தியக் கொள்கைகள் - அஹிம்சைக் கொள்கை
சத்தியம், அஹிம்சை ஆகியவற்றின் வழியாக இந்திய நாடு விடுதலை அடைவதையே தம் கொள்கைகளாகக் கொண்டிருந்தார் காந்தியடிகள் எனவும், சத்தியமே கடவுள் என்று காந்தியடிகள் கருதினார் எனவும், சத்தியம் நிலைபெற அஹிம்சைப் போர்முறையே ஏற்றது என்பதைக் காந்தியடிகள் நன்குணர்ந்தார் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக காந்தியக் கொள்கைகளின் வகைகளில் அஹிம்சைக் கொள்கை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- அஹிம்சைத் தத்துவம்
- அஹிம்சைப் போர்முறை
- அஹிம்சையின் அகராதி
அஹிம்சைத் தத்துவம்:
சத்தியமும் அஹிம்சையும் எனது இரு நுரையீரல்கள் போன்றதாகும். அவையின்றி நான் உயிர்வாழ இயலாது என்கிறார் காந்தியடிகள். இவையிரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையதாகவும் உடலும் உயிரும் போல இணைந்தே செயல்படக் கூடியதாகவும் காந்தியடிகள் கருதினார்.
அஹிம்சை என்பது கொல்லாமையைக் குறிக்கும்(1). உலகில் வாழும் எந்த உயிருக்கும் எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் தீங்கு இழைக்காமல் இருப்பதே அஹிம்சையின் அடிப்படைப் பொருளாகும். நாம் ஒரு உயிரின் நன்மையைக் கருதி கூட அதற்குத் துன்பம் விளைவிக்கக் கூடாது. துன்பம் விளைவிக்காமல் இருப்பது அஹிம்சையின் பொருளாயினும் அதற்கு மாறாக உலகில் உள்ள எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது அஹிம்சையைக் கடைப்பிடிக்கும் உயர்நிலையாகும் என்கிறார் காந்தியடிகள். அஹிம்சைத் தத்துவத்தை வெளிப்படுத்துவதில் கவிதைகளும் பங்கு பெற்றிருந்தன என்பதை நாமக்கல் கவிஞரின்(2),
“கொல்லாதிருப்பது ஒன்றேதான்
கூறும் அஹிம்சை என்றல்ல
எல்லா செயலிலும் நன்னோக்கம்
இணைந்தது அஹிம்சையின் தன்னாக்கம்”
என்ற பாடல் மூலம் அறியமுடிகிறது.
அஹிம்சையைப் பின்பற்றுபவர்கள் பிறரிடம் அளவிலாத அன்பு செலுத்தவேண்டும். நாம் ஒருவரோடு ஒருவர் இணைந்து கடவுளை அடைவ வழிவகுப்பது அஹிம்சையாகும். அஹிம்சையைப் பின்பற்றுகின்றவர்கள் பகைவரிடத்திலும் அன்புடையவர்களாக நடந்து கொள்ளவேண்டும்(3).
அஹிம்சைப் போர்முறை:
அஹிம்சைத் தத்துவத்தின் அடிப்படையிலேயே ஆங்கில ஆட்சியை அழிவு, இல்லாமல் அன்பினாலேயே அவர்களைப் பகைவர்களாகக் கருதாமல் நாட்டைவிட்டு வெளியேறச் செய்யவேண்டுமென்று கருதினார். இக்கருத்தையே நாமக்கல் கவிஞர்(4),
“பொல்லாதவர்க்கும் தீங்கெண்ணாப்
புனிதம் அதனுடைப் பாங்கென்ன
சொல்லாச் சொன்னதைச் செய்தவனும்
சொல்லரும் காந்தி நம் மெய்த்தவனே”
என்ற பாடலாக வெளிப்படுத்தியுள்ளார்.
அஹிம்சை வன்முறையைவிட மிக மேலானது. அஹிம்சை வழியில் தோல்வியே கிடையாது. வன்முறையின் இறுதிமுடிவு தோல்விதான் என்பதை நன்குணர்ந்த காந்தியடிகள் ஒத்துழையாமைப் போராட்டத்தை அஹிம்சை முறையில் மேற்கொண்டார். இப்போராட்டம் ‘சௌரி சௌரா’ என்ற இடத்தில் வன்முறையாக மாறவே அஹிம்சைப் போருக்குக் களங்கம் வந்துவிட்டது என்று ஒத்துழையாமைப் போராட்டத்தை நிறுத்தினார்.
அஹிம்சையின் அகராதி:
ஆன்மீக உணர்வை அரசியல் போராட்டம் அழித்து விடாமல் காக்க ஒத்துழையாமை இயக்கத்துடன் கதர் உற்பத்தி, தீண்டாமை விலக்கு, மது விலக்கு, இந்து-முஸ்லீம் ஒற்றுமை போன்றவற்றையும் இணைத்துச் செயல்படுத்தினார் என்றும் தெரிகிறது.
1920-ஆம் ஆண்டு முதல் காந்திய பக்தியில் தீவிரமாகச் செயல்பட்ட நாமக்கல் கவிஞர் அவருடைய அஹிம்சை நெறியை வெளிப்படுத்திக் காட்டுவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் கூறலாம். காந்தியடிகளின் புகழே அஹிம்சையின் அகராதியாகும். விஞ்ஞானத்தால் இவ்வுலகில் அஞ்ஞானம் அழியும் என்று அஞ்சும் சமயத்தில் மெய்ஞ்ஞான உருவாக வந்து நின்றவர். ஆயுத பலத்தை அகற்றி, அஹிம்சையைக் கடைப்பிடிக்க காந்திய வழியை நாம் பின்பற்றுவோம் என்று கவிதைகளால் வெளிப்படுத்திக் காட்டுகிறார் நாமக்கல் கவிஞர்(7).
தீமையை அதிகமாக உண்டாக்கி அதன் மூலம் சிறிதளவு நன்மையை உண்டாக்குவது எல்லோராலும் செயல்படுத்தக் கூடிய ஒன்றாகும். ஆனால் சிறிதளவு தீமையை உண்டாக்கி பெரிய நன்மையை அடையச் செய்வது அஹிம்சை நெறியாகும். மக்கள் ஒன்றுபட்டுச் சண்டையில்லாமல் வாழ இந்நெறியே சிறந்த பயனைத் தரத்தக்கது. இந்தியாவிற்கும் பெருமையைத் தேடித்தரும் அஹிம்சை நெறியைக் காப்பது நமது கடமையாகும் என உணர்த்துகிறார் நாமக்கல் கவிஞர்.
அடுத்த வலைப்பதிவில் காந்தியின் கொள்கைகளின் வகைகளில் சத்தியாக்கிரகக் கொள்கை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. M.K. Gandhi, The Voice of Truth, P.129.
2. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.99.
3. N.K. Bose, Selections from Gandhi, p.41.
4. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.99.
5. திரு.வி. கல்யாணசுந்தரம், தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு, ப.28.
6. D.G. Tendulkar, Mahatma, Vol.II, p.126.
7. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.100-101.
Sponsorship




0 கருத்துகள்