காந்தியமும் கவிதைகளும் - காந்தியக் கொள்கைகள் - சத்தியக் கொள்கை, அஹிம்சைக் கொள்கை
விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் காந்தியக் கவிஞர்களின் தொண்டு சிறப்பு வாய்ந்த சக்தியாக விளங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது எனவும், காந்தியடிகள் புதிய அறப்போர் முறையைச் செயல்படுத்திக் காட்டினார். இப்போர் முறை அவர் மேற்கொண்டிருந்த கொள்கைளின் முழு வடிவமாகத் திகழ்கிறது எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக காந்தியக் கொள்கைகளின் வகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- காந்தியக் கொள்கைகளின் வகைகள்
- சத்தியக் கொள்கை
- சத்தியமே கடவுள்
- அஹிம்சைக் கொள்கை
காந்தியக் கொள்கைகளின் வகைகள்:
சத்தியம், அஹிம்சை ஆகியவற்றின் வழியாக இந்திய நாடு விடுதலை அடைவதையே தம் கொள்கைகளாகக் கொண்டிருந்தார் காந்தியடிகள்(1). இவர் மேற்கொண்ட நிர்மானத் திட்டங்கள் சமுதாய மறுமலர்ச்சியையே குறிக்கோளாகக் கொண்டிருந்த போதிலும் பாமர மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டுவதில் சிறந்த சக்தியாகச் செயல்பட்டன. எனவே காந்தியக் கொள்கைகளை சத்தியம், சத்தியாக்கிரகம், அஹிம்சை, நிர்மானத் திட்டங்கள் என நான்காகப் பாகுபடுத்தலே சிறந்தது. இக்கொள்கைகள் இந்திய விடுதலைப்போரில் செயல்பட்ட முறையையும், கவிஞர்கள் பாடுபொருளாக்கி கவிதைகளால் விடுதலை வெளிப்படுத்திய முறையையும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
சத்தியக் கொள்கை:
சத்தியம் என்பது ‘சத்’ என்ற சொல்லிலிருந்து உருவானது. ‘சத்’ என்பது கடவுளின் பெயரைக் குறிக்கும். சத்-சித்-ஆனந்தம் கடவுளின் பெயரைக் குறிக்கும். எனவே, ‘கடவுளே சத்தியம்’, ‘சத்தியமே கடவுள்’(2) என உணர முடிகிறது. சத்தியம் என்பது கடவுளையும், உண்மையான ஒழுக்கநெறியில் வாழ்வதையும் குறிக்கும் என்கிறார் காந்தியடிகள். கடவுள் பக்தியே சத்தியத்தைக் கடைப்பிடிக்க உதவும் தூண்டு சக்தி என்றும் கருதலாம். முற்காலத்தில் கடவுள் பக்தியில் ஈடுபட்ட அரிச்சந்திரன், பிரகலாதன், இராமச்சந்திரன், இமாம் உசேன், கிருஸ்துவப் பாதிரிகள் போன்றோர் கடவுள் பக்தியால் இவ்வுலகில் சத்தியத்தை மெய்ப்பித்துக் காட்டினர். இத்தகைய பெரியோர்களின் வாழ்க்கை முறை காந்தியடிகளுக்குச் சத்திய உணர்வைத் தூண்டியிருக்க வேண்டும்.
சத்தியத்தைவிட மேலான சமயம் இல்லை என்ற உபநிடதக் கொள்கைகளை தமது வாழ்வில் அடிப்படையாகக் கொண்டிருந்த காந்தியடிகள்(3) தான் எழுதிய நூலுக்குச் ‘சத்திய சோதனை’ என்று பெயர் வைத்திருப்பதிலிருந்து அவருடைய சத்திய உணர்வு தெளிவாகிறது. பண்டைக்காலம் முதல் நீதிமன்றங்களில் மட்டும் நிலை நாட்டப்பட்டு வந்த சத்தியத்தை அரசியல் விடுதலைக்குப் புகுத்தியவர் காந்தியடிகளாவார்.
சத்தியமே கடவுள்:
நாட்டு விடுதலையைக் காட்டிலும் சத்தியத்திற்கே முதன்மை தரும் அரசியல்வாதியாக விளங்கிய தன்மையே காந்தியடிகளைப் புகழ்பெற்ற தலைவராக விளங்கச் செய்தது(4). இவருடைய சத்திய உணர்வு கவிஞர்களின் உள்ளங்களிலும், கவிதைகளாக மலர்ந்துள்ளது. சத்தியமே கடவுள் என்று கருதிய காந்தியடிகளை நாமக்கல் கவிஞர்(5), சத்திய மூர்த்தியாகவும் சத்திய சீலனாகவும் தமது பாடல்களில் வெளிப்படுத்திக் காட்டுகிறார். அவர் நடத்திய தண்டி உப்பு சத்தியாக்கிரகப் போரைச் ‘சத்தியப் போர்’ என்ற பாடலாகவும் வெளிப்படுத்திக் காட்டி அதில் சேரும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.
இந்நாள் வரையில் இவ்வுலகில் வாழ்ந்த பெரியோர்களின் ஞானமெல்லாம் ஒன்றுசேர்ந்து கலியுகத்தில் சத்திய உருவாய்த் தோன்றியவரே காந்திமகான். அவர் சத்தியத்தை மந்திரமாகவும், சாந்தத்தைத் தந்திரமாகவும் கொண்டு உண்டாக்கிய சாத்வீக நெறியை நாம் உறுதியுடன் ஏற்றுக்கொள்வோம் என வேண்டுகோள் விடுக்கிறார் நாமக்கல் கவிஞர்(6).
காந்தியின் வாழ்வு சத்திய நெறிதரும் சாத்திரமாகவும், சமுத்திரமாகவும், அறத்தை நிலைநாட்டிய பிரகலாதன், மகமது நபி, புத்தன், இயேசு போன்றோர்களின் மாற்று உருவமாகவும் விளங்குகிறது என்கிறார் நாமக்கல் கவிஞர்(7). சத்தியத்தை உலகில் நிலை நிறுத்த பெரியோர்களின் உருவமாகவும் கடவுளின் உருவமாகவும் தோன்றிய காந்தியடிகளின் விடுதலைப் போருக்கு மக்களைத் திரட்டுவது கவிஞர்களின் குறிக்கோளாக இருந்ததைக் காண முடிகிறது.
அஹிம்சைக் கொள்கை:
அஹிம்சையின் சிறப்பை சிரவணன், புத்தன் போன்றோரின் வாழ்க்கையின் மூலம் நன்குணர்ந்த காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் அதைப் பயன்படுத்தி வெற்றியும் கண்டார். இவ்வெற்றியே இந்தியாவில் அஹிம்சை பரவ அடிப்படையாக இருந்ததை,
“அஹிம்சா தத்துவ போதனை செய்ய ஐயன் காந்திக்கு
ஆப்பிரிக்காவே அடிப்படையாகி அஸ்திவாரமாச்சு
அந்த நாட்டிலே இந்தத் தத்துவம் ஐயன் கண்டுகிட்டே
ஆத்தா நாட்டைக் காத்திட வேண்டி அவசரமாய் வந்தார்”
என்ற பாடல் மூலம் காந்தியின் அஹிம்சைச் சிறப்பை வெளிப்படுத்துகிறார் கொத்தமங்கலம் சுப்பு(8).
பலாத்காரப் போரை விரும்பும் மனித இனம் இன்னும் விலங்கு நிலையிலேயே இருக்கிறது. விலங்குத்தன்மை பெற்றிருக்கும் மனித இனத்தைப் பகுத்தறிவு படைத்த இனமாக மாற்ற சத்தியத்தை நிலைபெறச் செய்வது அவசியமாகிறது. சத்தியம் நிலைபெற அஹிம்சைப் போர்முறையே ஏற்றது என்பதைக் காந்தியடிகள் நன்குணர்ந்தார். அஹிம்சைப் போர் அதிக அழிவை ஏற்படுத்தாது; போர்க் கருவிகளும் தேவையில்லை; இதற்கு ஆன்ம பலமும் அன்புமே போர்க்கருவிகளாம். இந்தியா விடுதலை பெற இப்போர் முறையே சிறந்தது. “சத்தியம் நமது குறிக்கோள் அஹிம்சை வழியில் செல்லாமல் நாம் சத்தியத்தை உணரவும், அடையவும் முடியாது”(9) என்ற காந்தியடிகளின் கூற்றே ஆதாரமாக அமைகிறது.
அடுத்த வலைப்பதிவில் காந்தியின் கொள்கைகளின் வகைகளில் அஹிம்சைக் கொள்கை பற்றி மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. D.G. Tendular, Mahatma, Vo.III. P.78.
2. M.K. Gandhi, The Voice of Truth, P.P.96-97.
3. Bandyopadhayaya, Social and political throught of Gandhi, p.22.
4. Byles B. Marie, The Lotus and the spinning wheel, p.166.
5. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.66-74.
6. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.53.
7. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.60-67.
8. கொத்தமங்கலம் சுப்பு, காந்தி மகான் கதை, ப.29.
9. R.K. Prabhu, & Rao (Ed), The mind of MahatmaGandhi, P.118.
Sponsorship




0 கருத்துகள்