காந்தியமும் கவிதைகளும் - காந்தியக் கொள்கைகள் (மகாத்மா காந்தி விடுதலை, காந்தியக் கவிஞர்களின் தொண்டு, காந்தியக் கொள்கைகள் பாகுபாடு)
காந்தியடிகளின் கொள்கைகளையும், வாழ்க்கை வரலாற்றையும், ‘கவிதை’ என்ற படைக்கலனால் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த முற்பட்டவர் ஒரு சில கவிஞர்களே என்று கருத முடிகிறது. அவர்களைக் ‘காந்தியக் கவிஞர்கள்’ என்று அழைப்பது பொருந்தும் எனவும், காந்தியத்தை வெளிப்படுத்திக் காட்டுவதில் கவிஞர்கள் தமிழ் இலக்கிய முறைகளைப் பின்பற்றி உள்ளனர் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக காந்தியின் கொள்கைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- மகாத்மா காந்தி விடுதலை
- காந்தியக் கவிஞர்களின் தொண்டு
- காந்தியக் கொள்கைகளும் கவிதைகளும்
- காந்தியக் கொள்கைகள் பாகுபாடு
மகாத்மா காந்தி விடுதலை:
முகையதீன் அப்துல் காதிரு, கான்முகமது, ஆதித்தர், நடராசப் பிள்ளை போன்றோர் அம்மானைப் பாடல் வடிவிலும், இராமலிங்கக் கவிராயர் அகவல் வடிவிலும் கவிதைகளைப் படைத்துள்ளனர். கொத்தமங்கலம் சுப்பு கதை வடிவிலும், சிவகுருநாதன் விருத்த வடிவிலும், காந்தியப் பிரியன் கிளிக்கண்ணி வடிவிலும் காந்தியடிகளின் வரலாற்றையும், தொண்டுகளையும் கவிதைகளாக்கி உள்ளனர். இக்கவிஞர்கள் பழைய இலக்கியங்களில் பெற்றிருந்த அனுபவம் காந்தியக் கவிதைகளை உருவாக்கத் தூண்டுதலாக இருந்ததை நாம் தெளிவாக அறிய முடிகிறது.
அவருடைய கொள்கைகளில் ஈடுபட்ட சில கவிஞர்கள் புதுவகையான வடிவங்களைப் பயன்படுத்திக் காந்தியத்தை வெளிப்படுத்தியுள்ளதையும், அவர்களின் கவிதை நூல்கள் மூலம் உணர முடிகிறது. பொன்னாண்டிப்பிள்ளை ‘மகாத்மா காந்தி’ என்ற பாடலிலும், கோபால்சாமி நாடார், ‘மகாத்மா காந்தி சுதந்திர பேரிகை’ என்ற பாடலிலும், பீர்முகமது சாகிப் ‘காந்தி மாளிகை’ என்ற பாடலிலும் காந்தியத்தைப் புலப்படுத்தியுள்ளனர். சண்முகதாஸ், சொக்கலிங்கத் தேவர், கவிக்குஞ்சரம் போன்றோர் ‘மகாத்மா காந்தி தியானம்’ என்ற பாடல்களிலும், அகமது அலிப்பாவலர் ‘மகாத்மா காந்தி விடுதலை’ என்ற பாடலிலும், அப்துல்காதர் ‘காந்தி கப்பற்பாட்டு’ என்ற பாடலிலும், கோவிந்தசாமிப்பிள்ளை ‘காந்திப்பாட்டு’ என்ற பாடலிலும், சிங்காரவேல் நாயக்கர், ‘மகாத்மா காந்தி சிங்காரப்பாட்டு’ என்ற பாடலிலும், மணிநீலன் ‘காந்தி கண்டவ கீதம்’ என்ற பாடலிலும், ராமைய்யர் ‘மகாத்மா காந்தி புகழ் பிரதாப கீதம்’ என்ற பாடலிலும், சீராளன் ‘தேசத் தந்தை’ என்ற பாடலிலும், சக்திவேல் ஆச்சாரியார் ‘மகாத்மா காந்தியடிகள் பரம கீதம்’ என்ற பாடலிலும், காந்தியக் கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இராஜா சண்முகதாஸ் ‘அஹிம்சா மூர்த்தி மகாத்மா காந்தி அமரஜோதி கீதம்’ என்ற பாடலிலும், நடராச கவிராயர் ‘மகாத்மா காந்தி தேசிய கீதம்’ என்ற பாடலிலும், இராய சொக்கலிங்கம் ‘காந்தியும் வள்ளுவரும்’ என்ற பாடலிலும், விசுவநாதன் ‘பொன்னேடு புகழ்பாடும் அண்ணல் காந்தி’ என்ற பாடலிலும், சின்னசாமிப்பிள்ளை ‘காந்திஜி தண்டியாத்திரை’ என்ற பாடலிலும், சுத்தானந்த பாரதியார் ‘காந்தி காலட்சேபம்’ என்ற பாடலிலும், சுந்தரம் ‘காந்தியுகம்’ என்ற பாடலிலும் புதிய வடிவங்களில் காந்தியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
காந்தியக் கவிஞர்களின் தொண்டு:
இந்தியாவில் தீவிரவாதம் வளர்ச்சியடைந்த நிலையில் சில கவிஞர்கள் தீவிரவாதத்தை வெளிப்படுத்தும் கவிதைகளை வெளியிட்டுள்ளனர். அதற்கு மாறாகக் காந்தியம் இந்தியாவில் வளர்ச்சியடைந்த காலத்தில் பல கவிஞர்கள் காந்தியத்தைப் பாடுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். ஓரிரு கவிஞர்கள் காந்தியத்தை எதிர்த்துப் பாடியிருத்தலையும் காணமுடிகிறது. எனவே விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் காந்தியக் கவிஞர்களின் தொண்டு சிறப்பு வாய்ந்த சக்தியாக விளங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது.
காந்தியக் கொள்கைகள்:
‘காந்தியம்’ என்பது பரிணாம வளர்ச்சியால் ஏற்பட்ட ஓர் ஒப்பற்ற தத்துவமாகும். 19-ஆம் நூற்றாண்டில் இறுதிவரை ஆயுதப்போர் முறையாக இருந்த இவ்வுலகிற்குக் காந்தியடிகள் புதிய அறப்போர் முறையைச் செயல்படுத்திக் காட்டினார். இப்போர் முறை அவர் மேற்கொண்டிருந்த கொள்கைளின் முழு வடிவமாகத் திகழ்கிறது. இக்கொள்கைகளே ‘காந்தியம்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகின்றது என்கிறார் சபா அருணாசலம்(1).
காந்தியம் என்ற சொல் வழக்கு காந்தியக் கவிஞர்களின் கவிதைகளிலும் வெளிப்பட்டிருத்தலை அறிய முடிகிறது. இக்கொள்கைகளின் சிறப்பை திரு.வி.க.(2) 'காந்தியம் அல்லது இன்பப்பேறு’ என்ற பாடலாக வெளிப்படுத்தியுள்ளார். காந்தியம் நம் நாட்டின் உடமை என்பதனை,
“காந்தியம் நம் உடமை – அதனைக்
காப்பது நம் கடமை
காந்தியம் வாழ்ந்தொளிர – தெய்வக்
கருணையைச் சூழ்ந்திடுவோம்”
என்ற பாடல் மூலம் வெளிப்படுத்திக் காட்டிய நாமக்கல் கவிஞர், காந்தியம் வளர்ச்சியடைய தெய்வத்தை வழிபட வேண்டுகிறார். காந்தியத்தின் சிறப்பினை மைக்கேல் என்பவர் ‘காந்தி தோத்திரமும் கதர்ப்பாடல்களும்’ என்ற நூலாகவும், கிருஷ்ணசாமி பாகவதர் ‘சோபனக்கும்மி’ என்ற நூலாகவும் வெளிப்படுத்தியிருத்தலையும் காணமுடிகிறது.
காந்தியக் கொள்கைகள் பாகுபாடு:
காந்தியடிகள் மேற்கொண்டிருந்த கொள்கைகளின் மொத்த வடிவமே காந்தியமாக உருப்பெற்றது எனத் தெளிவாக உணரமுடிகிறது. இக்கொள்கைகளைச் சத்தியம், அஹிம்சை, சனநாயகம் என மூன்றாகப் பிரிக்கிறார் கிரி(3). சத்தியம், அஹிம்சை, சத்தியாக்கிரகம், சர்வோதயம் என நான்காகப் பாகுபடுத்துகிறார் திவாக்கர். சத்தியம், அஹிம்சை சத்தியாக்கிரகம் என மூன்றாகச் சந்தானமும் பாகுபாடு செய்துள்ளார். சமுதாய மறுமலர்ச்சிக்குக் காந்தியடிகள் மேற்கொண்ட கதர் உற்பத்தி, மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, ஹரிசன சேவை, இந்து-முஸ்லீம் ஒற்றுமை போன்ற நிர்மானத் திட்டங்களையும் காந்தியக் கொள்கைகளாகப் பாகுபடுத்தலாம்.
அடுத்த வலைப்பதிவில் காந்தியின் கொள்கைகளின் வகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. சபா. அருணாசலம், தமிழ் நாவல்களில் காந்தியத் தாக்கம், ப.74.
2. திரு.வி. கல்யாணசுந்தரம், உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல், ப.38.
3. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.36.
Sponsorship



0 கருத்துகள்