காந்தியமும் கவிதைகளும் - காந்தியக் கவிஞர்களின் சிறப்புகள் (காந்தியக் கவிஞர்கள், தேசியத் தெய்வம், தமிழ் இலக்கிய முறையில் காந்தியம்)
இளமையிலேயே சத்தியத்தை அரிச்சந்திரன் நாடகத்தின் மூலமும், அகிம்சையை சிரவணன் வாழ்க்கையின் மூலமும் கண்டு தெரிந்து அவற்றைத் தமது வாழ்வில் இரு கண்களாகப் போற்றி வந்தார் காந்தியடிகள் எனவும், காந்தியடிகள் நடத்திய இயக்கங்களின் விளைவே 1947-இல் இந்தியா சுதந்திரமடைவதற்கு அடிப்படையாக அமைந்தது எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக காந்தியக் கவிஞர்களின் சிறப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- காந்தியக் கவிஞர்கள்
- தேசியத் தெய்வம்
- தமிழ் இலக்கிய முறையில் காந்தியம்
காந்தியக் கவிஞர்கள்:
மனித இனம் தோன்றியது முதல் இன்று வரை எல்லா நாடுகளும் பலாத்காரப் போர் முறையிலேயே அடிமை நிலையிலிருந்து விடுபட்டுச் சுதந்திரம் பெற்றிருக்கின்றன என்பதை வரலாறு நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. இன்று மக்களால் தெய்வங்களாகப் போற்றப்படும் இராமன், கிருஷ்ணன் போன்ற புனிதர்களும் பலாத்காரப் போர் முறையால்தான் அடிமை நிலையை அகற்றி நீதியை நிலைநாட்டினர். ஆனால், காந்தியடிகள் அகிம்சைப் போரினால் இந்தியர்களின் அடிமை நிலையை அகற்றி உலகத்திற்கு ஒரு புதிய அறப்போர் முறையை வெளிப்படுத்திக் காட்டினார். இத்தகைய உத்தமர் காந்தியடிகளின் மீதும், அவருடைய கொள்கைகளின் மீதும் பற்றுக்கொண்டவர்கள் எண்ணற்றவர். அவர்களுள் காந்தியடிகளின் கொள்கைகளையும், வாழ்க்கை வரலாற்றையும், ‘கவிதை’ என்ற படைக்கலனால் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த முற்பட்டவர் ஒரு சில கவிஞர்களே என்று கருதமுடிகிறது. அவர்களைக் ‘காந்தியக் கவிஞர்கள்’ என்று அழைப்பது பொருந்தும். அவர்களுடைய காந்திய உணர்வை வெளிப்படுத்திக் காட்டுவதே இனிவரும் வலைப்பதிவுகளின் நோக்கமாகும்.
தமிழகத்தில் ‘காந்தியக் கவிஞர்’ என்று சிறப்பாகப் போற்றப்படுபவர் நாமக்கல் கவிஞராவார்(1). இவர் முதன் முதலில் 1914-இல் காந்தியைக் கந்தனுடன் சிலேடைப் பொருளில் தெய்வமாகக் காட்டிக் கவிதை பாடியுள்ளனர்.
தேசியத் தெய்வம்:
காந்தியடிகள் அறத்தை அன்பினால் வெற்றியடைச் செய்ய தோன்றிய தெய்வமாகக் கவிஞர்கள் பாடல்களை வெளிப்படுத்தியுள்ளனர். காந்தியடிகளே இந்தியாவின் அடிமை நிலையை அகிம்சை முறையால் அகற்ற வந்த கண்கண்ட தெய்வம் என்று நாமக்கல் கவிஞரும்(2), அடிமையை அகற்ற வந்தவரே ‘மகாத்மா’ என்று பாரதியாரும்(3) கூறியுள்ளனர். நாட்டுப்பற்றை வளர்க்க வந்த ‘தேசியத் தெய்வம்’, ‘சுயராஜ்யத் தெய்வம்’ என்று அருணகிரிநாதரும், ‘கருணைக் கண்மணியாம் மகாத்மா’ என்று நடராஜப் பிள்ளையும், பரந்தாமன், தவப்புதல்வர், தனித்தலைவன் என்ற தஞ்சை வில்லோனும்(4), ‘புண்ணிய மூர்த்தி’ என்ற கவிமணியும்(5), ‘மால்மருக முருகனே, மோகன் காந்தியென’ விசுவநாததாசும், காந்தியடிகளின் தலைமையைத் தெய்வமாக எண்ணியதை அவர்களுடைய கவிதைகள் தெளிவாக உணர்த்திக் காட்டுகின்றன.
காந்தியடிகளைக் கவிஞர்கள் தெய்வமாகப் பாடுவதற்கு அவர் தென்னாப்பிரிக்காவில் செய்த தொண்டுகளும், இந்தியாவில் அவர் மேற்கொண்ட சத்தியாக்கிரக இயக்கங்களும் காரணங்களாக அமைந்தன. காந்தியடிகளின் மீது பற்று கொண்ட கவிஞர்கள் அவருடைய வாழ்க்கையையும், விடுதலைப் போராட்ட இயக்கங்களையும் கவிதைகளால் வெளிப்படுத்திக்காட்டி மக்களிடையே பரப்ப முயன்றனர்.
தமிழ் இலக்கிய முறையில் காந்தியம்:
காந்திய பக்தியில் ஈடுபட்ட கவிஞர்களில் சிலர் 1869 முதல் 1920 வரை நிகழ்ந்த காந்தியின் வரலாற்றைக் கவிதையாக்கிக் காட்டியுள்ளனர். சிலர் 1920 முதல் 1948 வரை அவ்வப்போது காந்தியடிகளால் நடத்தப்பட்ட விடுதலைப் போராட்ட இயக்கங்களைத் தனித்தனியாகவும், சிலர் அந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்துக் கவிதைகளாக்கி உள்ளனர். சிலர் காந்தியினுடைய கொள்கைகளான சத்தியம், அகிம்சை, சத்தியாக்கிரகம், கதர் உற்பத்தி, மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, இந்து-முஸ்லீம் ஒற்றுமை போன்றவற்றை மட்டும் அவ்வப்போது கவிதைகளால் வெளிப்படுத்தியுள்ளனர். 1920 முதல் 1935 வரை கவிதைகளைப் பாடிய பெரும்பாலான கவிஞர்கள் காந்தியக் கொள்கைகளை வெளிப்படுத்தும் காந்தியக் கவிஞர்களாகவே திகழ்ந்தனர். காந்தியமே இந்தியாவின் விடுதலைக்கு அடிப்படை என்ற அவர்கள் கருதி இருந்ததை அவர்களின் கவிதைகள் வழி அறியலாம்.
காந்தியத்தை வெளிப்படுத்திக் காட்டுவதில் கவிஞர்கள் தமிழ் இலக்கிய முறைகளைப் பின்பற்றி உள்ளனர். சில கவிஞர்கள் பழைய இலக்கிய வடிவத்தையும், சிலர் நாட்டுப்புறப்பாடல் வடிவத்தையும் பின்பற்றி உள்ளனர். சிலர் கடின இலக்கிய நடையிலும், சிலர் எளிய இலக்கிய நடையிலும், சிலர் வட்டார இலக்கிய நடையிலும், சிலர் பேச்சு வழக்கு நடையிலும் காந்தியத்தைக் கவிதைகளாக்கியுள்ளனர். கதிர்வேல் பிள்ளை, சுப்பிரமணிய ஐயர், பொன்னுசாமிப்பிள்ளை, நாமக்கல் கவிஞர், வேலாயுதம் செட்டி, மாணிக்கம் நாயக்கர் போன்றோர் சிந்து வடிவில் கவிதைகளைப் படைத்துள்ளனர். மைக்கேல், முத்துசாமிப்பிள்ளை, ஆவுடையப்பன் போன்றோர் தோத்திரப் பாடல் வடிவில் காந்தியத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பொன்னுசாமிப்பிள்ளை, சிதம்பரம்பிள்ளை, ரங்கம்மாள் போன்றோர் கும்மிப்பாடல் வடிவிலும், சுந்தர முதலி சதகப் பாடல் வடிவிலும், அசலாம்பிகை அம்மையார் புராண வடிவிலும் கவிதைகளைப் படைத்துள்ளனர். இராய. சொக்கலிங்கம் பொன்னூசல், பல்லாண்டு, அந்தாதி, நான்மணிமாலை, பிள்ளைத்தமிழ், பள்ளியெழுச்சி, தசாங்கம், திருப்புகழ் போன்ற இலக்கிய வடிவங்களில் காந்தியத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறார்.
அடுத்த வலைப்பதிவில் காந்தியக் கவிஞர்களின் சிறப்புகள் பற்றி மேலும் சில தகவல்களையும், காந்தியக் கொள்கைகளும் கவிதைகளும் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. நாமக்கல் கவிஞர், என் கதை, பக்.282-283.
2. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.53-55.
3. பாரதியார் கவிதைகள், பக்.199-200.
4. தஞ்சை வில்லோன், “காந்தி புகழ்”
“இந்தியத் தாயின் தவப்புதல்வன்
இந்நிலம் போற்றும் தனித்தலைவன்
இந்திய நாட்டின் விடுதலைக்கே
இன்றெழுந்தான் எம் காந்தியண்ணல்”
5. தேசிக விநாயகம்பிள்ளை, தே.வி.யின் கீர்த்தனங்கள், ப.81.
Sponsorship



0 கருத்துகள்