காந்தியமும் கவிதைகளும் - காந்தியின் சிறப்புகள் (அரிச்சந்திரன் நாடகம், இந்தியர்களின் உரிமைகள், காந்தியடிகளின் சத்தியாகிரகப் போர், சத்தியாக்கிரக ஆசிரமம்)
காலச் சூழ்நிலைக்கேற்ப நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் கவிதைகள் எவ்வாறு கவிஞர்களின் உள்ளங்களிலிருந்து வெளிப்பட்டன என்பதை முந்தைய வலைப்பதிவுகளில் அறிந்தோம். இனிவரும் வலைப்பதிவுகளில் அவ்வாறு வெளிப்பட்ட கவிதைகள் காந்தியக் கொள்கைகளுக்கு எவ்வாறு ஆதரவாக அமைந்தன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். காந்தியின் சிறப்புகள், காந்தியக் கவிஞர்களின் சிறப்புகள், காந்தியக் கொள்கைகளும் கவிதைகளும், காந்திய இயக்கங்களும் கவிதைகளும் ஆகியவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- அரிச்சந்திரன் நாடகம்
- இந்தியர்களின் உரிமைகள்
- காந்தியடிகளின் சத்தியாகிரகப் போர்
- சத்தியாக்கிரக ஆசிரமம்
அரிச்சந்திரன் நாடகம்:
அடிமைப்பட்ட இந்தியர்களின் துயரை அகற்ற 1869-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் கபாகாந்திக்கும், புத்திலிபாய்க்கும் அற விளக்காகத் தோன்றியவரே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாவார். இவர் இளமையிலேயே சத்தியத்தை அரிச்சந்திரன் நாடகத்தின் மூலமும், அகிம்சையை சிரவணன் வாழ்க்கையின் மூலமும் கண்டு தெரிந்து அவற்றைத் தமது வாழ்வில் இரு கண்களாகப் போற்றி வந்தார்(1). காந்தியடிகள் இவர்களுடைய வாழ்க்கையில் கண்ட அனுபவத்தால் ஒரு புதிய அன்பு நெறியை உலகிற்கு வெளிப்படுத்திக் காட்டவே வந்தார் என அறிய முடிகிறது.
இந்தியர்களின் உரிமைகள்:
காந்தியடிகள் இளமை முதல் பாரிஸ்டர் பட்டம் பெற்று பம்பாயில் வக்கீலாக அமர்ந்தது வரை தேச பக்தியில் ஈடுபாடு இல்லாதவராய் பொருள்தேடும் ஆசையிலேயே இருந்தார்(2). 1893-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்துல்லா சேட் என்ற முகமதியரின் வழக்குத் தொடர்பாகத் தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றார். அங்கே இருந்த சூழ்நிலைகள் இவரைத் தேசபக்தனாக மாற்றியது என்றும் கூறமுடியும். அங்குள்ள இந்தியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்ட காந்தியடிகள், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், இழந்த உரிமைகளை மீட்கவும் தமது படைக்கலன்களாகிய அன்பையும், சத்தியத்தையும் பயன்படுத்த முற்பட்டார். அதற்காக அங்குள்ள இந்தியர்களை ஒன்றுதிரட்டி ‘நேட்டால் இந்தியர் காங்கிரஸ்’ என்ற அமைப்பை 1894-இல் உருவாக்கினார்(3). இந்தியாவில் ஆங்கிலேயரின் அடிமை வாழ்வை அகற்ற இந்தியர்களிடையே நாட்டுப்பற்று வளர்ச்சியடையத் தொடங்கிய நிலையில், காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் அடிமை நிலையைப் போக்க முயன்றார்.
காந்தியடிகளின் சத்தியாகிரகப் போர்:
1905-ஆம் ஆண்டு முதல் நாட்டுப்பற்று தீவிரமாக இந்தியாவில் வளரத் தொடங்கிய நிலையில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் உரிமைகளுக்காகச் சத்தியாகிரகப் போர் நடத்தினார். அக்கால கட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் நடந்த கிளர்ச்சிகள் இந்தியர்களின் அடிமை நிலையை அகற்றவே தோன்றின. காந்தியடிகளின் சத்தியாகிரகப் போர், முதலில் 1914- இல் வெற்றி பெற்றது. அன்பினால் இந்தியர்களை ஒன்றுப்படுத்தும் ஆற்றல் இந்தியாவில் இல்லாததால் வங்கப்பிரிவினை தீவிரவாதச் செயல்களையே ஏற்படுத்தியது. வங்கப் பிரிவினையின் போதே காந்தியடிகள் இந்திய விடுதலைப் போரின் தலைமையை ஏற்றிருந்தால் தீவிரவாதம் வளர்வது தடுக்கப்பட்டுச் சத்திய நெறியில் சுதந்திரம் பெறும் நிலை உருவாகி இருக்கும் என்றும் கருதலாம்.
சத்தியாக்கிரக ஆசிரமம்:
தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் அடிமை நிலையை அறப்போரினால் வெற்றிப்பெற செய்த காந்தியடிகள் 1914-இல் இந்தியாவிற்குத் திரும்பினார். இந்தியாவில் சத்திய கொள்கைகளைப் பரப்பி மக்களை இந்திய விடுதலைக்குப் பக்குவப்படுத்த விரும்பிய நிலையில் 1915-இல் அகமதாபாத்தில் ‘சத்தியாக்கிரக ஆசிரமம்’ ஒன்றை ஆரம்பித்தார். அடிமையால் அவதிப்பட்ட சம்பரண், கேடா போன்ற ஜில்லா மக்களின் துன்ப நிலையைச் சத்தியாக்கிரகத்தால் அகற்றினார். 1919-ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்ட ‘ரௌலட் சட்டங்கள்’ காந்தியடிகளை இந்திய விடுதலைப் போரில் ஈடுபடச் செய்தன.
அகிம்சை முறையிலேயே இந்தியா விடுதலை அடைய வேண்டுமென்று விரும்பிய காந்தியடிகள் இச்சட்டத்தை எதிர்த்துச் சத்தியாக்கிரகப் போரைத் தொடங்கினார். சத்தியாகிரப் போரின் விளைவு, பஞ்சாப் படுகொலையை ஏற்படுத்தியதால் இவர் இந்திய விடுதலைப் போரின் தலைமையை ஏற்று ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தும் நிலை ஏற்பட்டது. 1920-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் தீவிரவாதம், மிதவாதம், வகுப்புவாதம், பயங்கரவாதம் போன்ற போர் முறைகள் தோன்றின. அச்சூழ்நிலையில் காந்தியடிகள் சத்தியாக்கிரக முறையில் மேற்கொண்ட ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், நிர்மானத் திட்டங்கள், உப்புச் சத்தியாக்கிரகம், தனிநபர் சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்றவைகள் மக்களின் பேராதரவைப் பெற்றன. காந்தியடிகள் நடத்திய இவ்வியக்கங்களின் விளைவே 1947-இல் இந்தியா சுதந்திரமடைவதற்கு அடிப்படையாக அமைந்தது என்றும் கூறலாம்.
அடுத்த வலைப்பதிவில் காந்தியின் சிறப்புகள் பற்றி மேலும் சில தகவல்களையும், காந்தியக் கவிஞர்களின் சிறப்புகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. மகாத்மாகாந்தி, என் சரிதம் (மொ.பொ.நூ.), பக்.5-6.
2. மகாத்மாகாந்தி, என் சரிதம் (மொ.பொ.நூ.), ப.42.
3. மகாத்மாகாந்தி, என் சரிதம் (மொ.பொ.நூ.), பக்.49-50.
Sponsorship






0 கருத்துகள்