நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கவிஞர்கள் கையாண்ட உத்திகள் - நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள் - 1
நாட்டுப்பற்றை வெளிப்படுத்த விரும்பிய கவிஞர்கள், கவிதைகளுக்குத் தலைப்பு வைக்கும்போதே சில நுணுக்கமான உத்திகளைக் கையாண்டுள்ளனர் எனவும், சொற்கள் வீர உணர்வைத் தூண்டுவதாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளதையும் அவர்களின் கவிதைகள் வழி அறியமுடிகிறது எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் சொல்லடுக்கு பற்றி சில தகவல்களையும், பிறமொழிச் சொற்கள் பற்றியும், வட்டார வழக்குச் சொற்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- சொல்லடுக்கு
- பிறமொழிச் சொற்கள்
- வட்டார வழக்குச் சொற்கள்
சொல்லடுக்கு:
தனித்தொகுதி முறையை அகற்ற உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்க எண்ணிய காந்தியடிகளைக் கடவுள் காக்கவேண்டும் என்ற கருத்தை ‘உயிர் பரப்பாய்’, “ஈசா! ஈசா!’ தனிப்பொருளைக் காப்பாய்! காப்பாய்!’ காந்தி அவன் ஆர் உயிரைக் காவாய்! காவாய்!’(1) போன்ற சொல்லடுக்குகள் மூலம் உணர்த்தியுள்ளார் ராய சொக்கலிங்கம்.
ஆங்கில ஆட்சியின் கொடுமைகளை,
“அநியாயம் அநியாயம் - வெள்ளை
ஆட்சியாளர்கள் செய்யும் அநியாயம்”
என்ற பாடல் மூலம் புலவர் குழந்தை(2) சொல்லடுக்காக வெளிப்படுத்திக் காட்டுகிறார். சுதந்திரம் தேய்ந்ததையும் நாட்டுநிலையையும் வெளிப்படுத்த, ‘நினை, நினை’, ‘துணை துணை’ என்ற சொல்லடுக்குகளை அய்யன் பெருமாளும், சுதந்திரத்தைப் போற்றுவதாக, ‘சுதந்திரமே போற்றி போற்றி’ என்ற சொல்லடுக்கை திரு.வி.கவும்(3) வெளிப்படுத்தியிருத்தலைக் காணமுடிகிறது.
உலகமும், இந்திய தேசமும் வாழவேண்டும் என்பதை ‘வாழ்க வாழ்க’ என்ற சொல்லடுக்கு மூலம் நாமக்கல் கவிஞரும்(4), ஆங்கிலேயர் கொண்டுவரும் சட்டங்களைக் காந்தியடிகளைத் தவிர யாராலும் பிளக்கமுடியாது என்பதை உணர்த்த ‘அரிது அரிது’ என்ற சொல்லடுக்கை ராய.சொக்கலிங்கமும்(5) தொடரின் ஆரம்பத்தில் அமைத்துத் தொடருக்கு வலிமை கொடுத்துள்ளனர்.
பாரதம் வெற்றியடைய வேண்டும் என்பதை வெளிப்படுத்த ‘ஜய ஜய’(6) என்ற சொல்லடுக்கையும், பாரத மக்களைத் தட்டியெழுப்ப ‘எழுவாய் எழுவாய் பாரதமே’ என்ற சொல்லடுக்கையும், பாரதியாரின் கவிதைகள் மக்களிடையே ஏற்படுத்திய எழுச்சியை, ‘அஞ்சி அஞ்சி உடல் வளர்க்கும்’, ‘கெஞ்சி கெஞ்சி உரிமை கேட்கும்’(7) போன்ற சொல்லடுக்குகள் மூலமும் கவிஞர்கள் விடுதலை உணர்வுக்கு ஊக்கம் தந்துள்ளதைத் தெளிவாக அறியமுடிகிறது.
சொல்லடுக்குகள் உடைய பாடல்கள் விடுதலை உணர்வைத் தூண்டுவதில் முன்னோடியாகச் செயல்பட்டன என்றும் கருதமுடியும்.
பிறமொழிச் சொற்கள்:
பிறமொழிச் சொற்களைப் பாடல்களில் புகுத்தி விடுதலை உணர்வைக் கவிஞர்கள் வெளிப்படுத்தியிருத்தலை அவர்கள் கவிதைகள் வழி காணமுடிகிறது. அவர்கள் பிற மொழியில் பெற்றிருந்த பயிற்சியும், பிறமொழி மக்களையும் விடுதலை உணர்வுகொள்ளச் செய்யவேண்டும் என்ற நோக்கமும் இந்நிலைக்கு காரணம் என்றும் கூறலாம்.
வங்காள மொழியில் அமைந்த ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லை தமது பாடல்களில் பல இடங்களில் அமைத்து விடுதலை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார் பாரதியார்8). பாரதநாட்டை சிறப்பிக்கும் முறையில் அமைந்த ‘ஸ்வதேச கீதங்கள்’, ‘ஜன்மபூமி’ போன்ற நூலின் பெயர்களும் பிறமொழிச் சொற்களாக அமைந்துள்ளன. பாரதியார் வெளியிட்ட ‘பாரதமாதா’, ‘பாரதமாதா நவரத்தினமாலை’, ‘மாதாவின் துவஜம்’, ‘சுதந்திர தேவியின் துதி’, ‘பூபேந்திர விஜயம்’, ‘வாழ்க திலகன் நாமம்’, ‘லஜபதிராய் பிரலாபம், ‘மாஜினியின் பிரதிக்னை’(9) போன்ற பாடல் தலைப்புகளும் பிறமொழிச் சொற்களால் அமைந்துள்ளன.
பாரதியாரைத் தொடர்ந்து வந்த நாமக்கல் கவிஞர் ‘சுதந்திர சபதம்’, ‘தேசிய வாரம்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘காந்தி அஞ்சலி’, ‘தூய்மை ஜோதி’(10) போன்ற சொற்களைப் பயன்படுத்தி உள்ளார். பாஸ்கரதாஸ் என்பவர் காந்தியின் சிறப்புகளை அறிமுகப்படுத்த ‘காந்தி மஹான்’, ‘சாத்மீகச் சாந்தி மஹான்’ என்ற சொற்களையும், திரு.வி.கவின் பெருமையை வெளிப்படுத்த ‘சுந்தரன்’, ‘யந்தரன்’, ‘பக்தன்’, ‘ப்ரசித்தன்’, ‘சமர்த்தன்’, ‘வாசத்தன்’(11) போன்ற பிறமொழிச் சொற்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார். சத்தியாக்கிரகத்தின் பெருமைகளை வெளிப்படுத்த ‘சத்தியாக்கிரக அனுக்ரஹம்’, ‘நிக்ரஹம்’ போன்ற சொற்களை புகுத்தியுள்ளார் வீரணக்கோனார். கதரின் சிறப்புக்களை வெளிப்படுத்த விரும்பிய அருணகிரிநாதர் ‘யோக்கியம்’, ‘பாக்கியம்’, ‘அயோக்கியம்’, ‘சிலாக்கியம்’ போன்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். சதாசிவதாஸ் ‘திலகரத்னாகரம்’ என்ற சொல்லையும், சபாபதிதாஸ் ‘உஜித்ந்னமணிக்கீதம்’ என்ற சொல்லையும், மாணிக்க நாயக்கர் ‘மகாத்மா காந்தி அரஸ்ட் சிந்து’ என்ற சொல்லையும், இலட்சுமணதாஸ் ‘பக்தாமிர்த கீதமஞ்சரி’ என்ற சொல்லையும், ராஜாராம் பாகவதர் ‘தேசிய காணமாலா’ என்ற சொல்லையும் தமது நூலின் பெயர்களாக அமைத்து விடுதலை உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் சுப்பிரமணிய பாரதியார் விடுதலை உணர்வை வெளிப்படுத்த பிறமொழிச் சொற்களைப் புகுத்தியுள்ளார். அவரைத் தொடர்ந்து வந்த நாமக்கல் கவிஞர் பிறமொழிச் சொற்களைப் பாடல்களில் புகுத்துவதைக் குறைத்து தூய தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். காந்திய காலத்தில் நாடகத்துறை மூலம் நாட்டுப்பற்றை உணர்த்த எண்ணிய பாஸ்கரதாஸ், சதாசிவதாஸ், இலட்சுமணதாஸ், பீர்முகமது சாகிப் போன்றவர்கள் தமது பாடல்களில் அதிகமாகப் பிறமொழிச் சொற்களைக் கையாண்டுள்ளனர். 1930-ஆம் ஆண்டிற்கு பிறகு தேசியக்கவிதைகளைப் பாட முற்பட்ட பெரும்பாலானக் கவிஞர்கள் தேசபக்தியிலும், தனித்தமிழ் வளரவேண்டும் என்று விரும்பினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் திரு.விகல்யாணசுந்தரம், பாரதிதாசன், கவிமணி, ஜீவானந்தம், ராய.சொக்கலிங்கம் போன்றோர் என்றும் கூறலாம்.
வட்டார வழக்குச் சொற்கள்:
வட்டார வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி எளிய முறையில் பாமர மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க முயன்றவர் கொத்தமங்கலம் சுப்பு ஆவார். இவர் எழுதிய ‘காந்தி மகான் கதை’ என்ற நூல் முழுவதும் வட்டார வழக்குச் சொற்களே அதிகமாக இடம்பெற்றுள்ளன.
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் ஒலிக்குறிப்புச் சொற்கள் பற்றியும், சொற்களின் பொருள் மாற்றம் பற்றியும், சொல் விளையாட்டு பற்றியும், தொடர் உத்திகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. ராய. சொக்கலிங்கம், காந்திக்கவிதை, ப.213.
2. புலவர் குழந்தை, புலவர் குழந்தைப் பாடல்கள், ப.231.
3. திரு.வி.கல்யாணசுந்தரம், உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல், ப.7.
4. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.475.
5. ராய. சொக்கலிங்கம், காந்திக்கவிதை ப.214.
7. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.233.
8. பாரதியார் கவிதைகள், பக்.133-136, 161-176.
9.பாரதியார் கவிதைகள், பக்.142, 147, 154, 178, 208, 214.
10. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.53-56, 119, 140, 160.
11. பாஸ்கரதாஸ், இந்து தேசாபிமானிகள் செந்தமிழ்த் திலகம், முதல் பாகம், ப.9.
Sponsorship




0 கருத்துகள்