நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கவிஞர்கள் கையாண்ட உத்திகள் - நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள்- 2
சொல்லடுக்குகள் உடைய பாடல்கள் விடுதலை உணர்வைத் தூண்டுவதில் முன்னோடியாகச் செயல்பட்டன எனவும், பிறமொழிச் சொற்களைப் பாடல்களில் புகுத்தி விடுதலை உணர்வைக் கவிஞர்கள் வெளிப்படுத்தியிருத்தலை அவர்கள் கவிதைகள் வழி காணமுடிகிறது எனவும், வட்டார வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி எளியமுறையில் பாமர மக்களிடையே நாட்டுப்பற்றை வளர்க்க முயன்றனர் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் ஒலிக்குறிப்புச் சொற்கள் பற்றியும், சொற்களின் பொருள் மாற்றம் பற்றியும், சொல் விளையாட்டு பற்றியும், தொடர் உத்திகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- ஒலிக்குறிப்புச் சொற்கள்
- சொற்களின் பொருள் மாற்றம்
- சொல் விளையாட்டு
- தொடர் உத்திகள்
ஒலிக்குறிப்புச் சொற்கள்:
உலகம் முழுவதும் ஆயுதப்போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் காந்தியடிகள் சத்தியாக்கிரகப் போர் மூலம் இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்று எண்ணிய நிகழ்ச்சியை ‘இடிஇடித்து’, ‘கிடுகிடுத்து’, ‘குடுகுடுத்த கிழவர்’, ‘துடிதுடித்து’(1) ஆகிய ஒலிக்குறிப்புச் சொற்கள் மூலம் காந்தியின் சத்தியப்போரில் மக்களைக் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கிறார் நாமக்கல் கவிஞர்.
தமிழர்களின் அடிமை நிலையை அகற்றி உண்மையைப் பரப்ப வேண்டும் என்று சொல்ல விரும்பிய நாமக்கல் கவிஞர் ‘ஓடிஓடி’, ‘வாடி வாடி’, ‘கூடிகூடி’, ‘பாடிபாடி’(2) என்ற ஒலிக்குறிப்புச் சொற்களைப் பயன்படுத்தி கவிதைக்கு உணர்வு கொடுக்கிறார். இவர் வீரம் என்பதை வெளிப்படுத்த,
“வெட்டி வெட்டிக் கொல்லுவார்
வீரம் என்று சொல்லுவார்
சுட்டுச் சுட்டுத் தள்ளுவார்
சூரம் என்ற துள்ளுவார்”(3)
என்ற பாடலில் ஒலிக்குறிப்புச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளதையும் காணமுடிகிறது.
மகாத்மா காந்தியைப் பிள்ளையாக கற்பனை செய்து, ‘காந்தி பிள்ளைத் தமிழ்’ பாடிய ராய.சொக்கலிங்கம், காந்தியாகிய குழந்தை தவழ்ந்து வரும் நிலையைக் குறிக்க ஒவ்வொரு பாடலின் இறுதித் தொடரிலும் ‘தாலோ தாலேலோ’(4) என்ற ஒலிக்குறிப்புச் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
தீவிரவாதிகளைப் போல் நடித்துக் கொண்டிருக்கும் நடிப்புச் சுதேசிகளின் இயல்பை ஒரு பெண் கிளியிடம் சொல்வதாக, ‘சொல்லில் வீரரடி’, ‘மறப்பாரடீ’(5) போன்ற சொற்களை தொடர் இறுதியில் அமைக்கிறார் பாரதியார். ஒலிக்குறிப்புச் சொற்கள் மூலம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் மரபும் இருந்ததை உணரமுடிகிறது.
சொற்களின் பொருள் மாற்றம்:
சொற்களின் முதற்சீர் வேறாகவும், இறுதிச்சீர் ஒரே மாதிரியாகவும் அமைத்து சொற்களுக்குப் பொருள் மாற்றம் செய்வதன் மூலம் வீர உணர்வையும் விடுதலை உணர்வையும் தூண்ட விரும்பியவர் பாரதியார். வ.உ.சிக்கும் கலெக்டர் வினிச் துரைக்கும் நடந்த உரையாடலை ‘ஏற்குமோ?’, ‘பார்க்குமோ?’, ‘ஈனமோ -அவமானமோ?’, ‘நாட்டினாய் - கனல் - மூட்டினாய்’, ‘மாட்டுவேன் - வலி -காட்டுவேன்’, ‘கோஷித்தாய் - எமை - துஷித்தாய்’, ‘பேசினாய் - வீரம் - பேசினாய்’, ‘தள்ளுவேன் - பழி - கொள்ளுவேன்’(6) போன்ற சொற்கள் மூலம் பொருள் மாற்றம் செய்துள்ளதைப் பார்க்கமுடிகிறது.
சொல் விளையாட்டு:
ஒலிநயம் காரணமாகவும், சொல் இனிமை காரணமாகவும் ஒரு சொல்லைப் புதிய சொல்லாக மாற்றி சொல் விளையாட்டு விளையாடுவது தேசியக் கவிஞர்களின் தனித்திறனாக இருந்தது. பாரதியார் தமிழ்நாட்டின் சிறப்பை,
“செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே”(7)
என்ற பாடலின் இறுதியில் வாயில் பருகவேண்டிய தேன் காதில் பாய்வதாக சொல் விளையாட்டைப் புகுத்துகிறார். இப்பாடலைப் பின்பற்றி நட்டார் என்பவர் பாரதியாரின் சுதந்திர உணர்வை,
“பாரதியார் என்னும் போதினிலே வந்து
பாயும் சுதந்திரம் காதினிலே”
என்ற பாடலில் காதில் சுதந்திரம் பாய்வதாகப் பாடியுள்ளதையும் காணமுடிகிறது.
‘சுதந்திர தாகம்’, ‘சுதந்திரப் பயிர்’ போன்ற சொற்களைப் பாரதியாரும், ‘சுதந்திர நாதம்’ என்ற சொல்லை மணியும், ‘சுதந்திரத் திலகம்’ என்ற சொல்லை வேல்சாமியும், ‘ஒத்துழையாமை மருந்து’ என்ற சொல்லை கண்ணமுருகனும் சொல் விளையாட்டாகப் பயன்படுத்தியுள்ளனர்.
தொடர் உத்திகள்:
நாட்டுப்பற்றை வெளிப்படுத்தவும், அதை மக்களிடையே வளர்க்கவும் கவிதைகளை எழுத முற்பட்ட கவிஞர்கள், பாடல் தொடர்களை அமைக்கும் போதும் சில உத்திகளைக் கையாண்டுள்ளனர். பாடல் கருத்தை உணர்வுடையதாக்கவும், கருத்தைத் தெளிவுப்படுத்தவும், கருத்தை வேறுபடுத்திக் காட்டவும், தொடரை ஓசை நயமுடையதாக்கவும், தொடர்களை ஒன்றோடொன்று இயைபுபடுத்தவும் இவ்வுத்திகளைப் பயன்படுத்தியுள்ளனர். இத்தொடர் உத்திகளால் தேசியக் கவிதைகள் அழகும் உணர்வும் ஓசை நயமும் பெறுவதுடன் எளிதில் மக்களால் கவரும் தன்மையுடையதாகவும் மாற்றம் பெறுகின்றன.
அடுத்த வலைப்பதிவில் தொடர் அடுக்கி வருதல் பற்றியும், தொடர் இடைமடக்கு பற்றியும், வினா விடைத்தொடர் பற்றியும், எதிர்பதத் தொடர் பற்றியும், உம்மைத்தொடர் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.112-113.
2. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.26.
3. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.417.
4. ராய. சொக்கலிங்கம், காந்திக்கவிதை, பக்.15-19.
5. பாரதியார் கவிதைகள், பக்.196-197.
6. பாரதியார் கவிதைகள், பக்.193-195.
Sponsorship




0 கருத்துகள்