நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கவிஞர்கள் கையாண்ட உத்திகள் - நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள்
தான் அனுபவித்த உணர்ச்சியை அப்படியே பிறரும் அனுபவிக்கும்படி செய்யத்தூண்டும் மனவெளிப்பாடே கலை எனவும், கலைகளில் சிறப்புடையது கவிதைக்கலை எனவும், தமிழ்க் கவிஞர்களும் புதிய உத்திமுறைகளைத் தேசியக் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளனர் எனவும், சிலர் பழைய உத்திமுறைகளைச் சிறிது மாற்றியும் தேசியக் கவிதைகளைப் படைத்துள்ளதையும் பார்க்கமுடிகிறது எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- தலைப்பு உத்திகள்
- சொல் உத்திகள்
- சொல்லடுக்கு
தலைப்பு உத்திகள்:
நாட்டுப்பற்றை வெளிப்படுத்த விரும்பிய கவிஞர்கள், கவிதைகளுக்குத் தலைப்பு வைக்கும்போதே சில நுணுக்கமான உத்திகளைக் கையாண்டுள்ளனர். பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி, தேசிய பஞ்சரத்தினமாலை, காந்தி பிள்ளைத்தமிழ், மகாத்மா காந்தி அம்மானை, காந்தி சதிகம், காந்தி அந்தாதி, பாரத மாதா நவரத்தினமாலை, பாரத தேவியின் திருத்தசாங்கம் போன்ற பாடல் தலைப்புகள் சிறு பிரபந்த இலக்கியங்களின் தாக்கத்தில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியுள்ளன.
காங்கிரஸ் கப்பல், சுதந்திரதேனி, சுதந்திரச் சூரியன், சுதந்திரப் பயிர், சுதந்திரத் திலகம் போன்ற தலைப்புகளில் உருவகத்தின் மூலம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.
சாந்தி தரும் கொடி, சத்தியச் சங்கு, மாதா பெற்ற மணிகள், ஆனந்தக் கதர்ப்பாட்டு போன்ற தலைப்புகள் பண்புகள் மூலம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.
நாட்டுக்கும்மி, சிங்காரத் தெம்மாங்கு, மகாத்மா காந்தி கும்மியும் தெம்மாங்கும், தாலாட்டுக் கும்மியும் ஆகிய தலைப்புகள் நாட்டுப்புறப் பாடல் மெட்டில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துகின்றன.
காந்தி சரித்திர நொண்டிச் சிந்து, கதரணியும் கீர்த்தனம், கதர் ஆனந்தக் களிப்பு போன்ற தலைப்புகள் பழைய இசை மரபு மூலம் நாட்டுப்பற்றை வெளிக்காட்டுகின்றன.
சொல்லாட்சி, பழைய செய்யுள் மரபு, உரிமை உணர்வு, வாழ்த்துதல், சபதம் செய்தல், தெய்வபக்தி, வீர உணர்வு ஆகியவற்றின் மூலமும் பாடல் தலைப்புகளில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.
சொல் உத்திகள்:
கவிஞர்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த சொற்களை அமைப்பதிலும் சில உத்திகளைக் கையாண்டுள்ளனர். சொற்கள் வீர உணர்வைத் தூண்டுவதாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளதையும் அவர்களின் கவிதைகள் வழி அறியமுடிகிறது. சொற்களை அடுக்கிக் கூறும் முறையிலும், பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தும் முறையிலும், வட்டார வழக்குச் சொற்களை வெளிப்படுத்தும் முறையிலும், ஒலிக்குறிப்புச் சொற்களை உணர்த்தும் முறையிலும், சொற்களின் பொருள் மாற்றம், சொல் விளையாட்டு ஆகிய முறைகளிலும் கவிஞர்கள் சொல் உத்திகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
சொல்லடுக்கு:
இந்திய மக்கள் கதர் அணியவேண்டும் என்பதை உணர்த்த விரும்பிய நடராஜப்பிள்ளை,
“கட்டுங்கள் கட்டுங்கள் கட்டுங்களே – கதர்
கட்டுங்கள் கட்டுங்கள் கட்டுங்களே”
என்ற இரண்டு தொடர்களிலும் ‘கட்டுங்கள்’ என்ற சொல்லை அடுக்காக அமைத்துள்ளார். காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை வெளிப்படுத்த ‘ஒப்பந்தம்’ ‘ஒப்பந்தம்’ என்ற சொல்லையும் அடுக்காக அமைக்கிறார். ‘ஆதாரம்’ என்ற சொல்லடுக்கை வீரணக் கோனாரும், ‘அச்சமில்லை’ என்ற சொல்லடுக்கை பாரதியாரும்(1) தொடரில் அமைத்துத் தொடர் இறுதிச்சொல்லில் ஏகார ஓசையை அமைத்துக் கருத்துக்கு வலிமை கொடுத்து விடுதலை உணர்வைத் தூண்டியுள்ளனர்.
வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்பதை,
“வெளியேறுங்கோ வெளியேறுங்கோ வெளியேறுங்கோ - இந்த
வெட்கங்கெட்ட ஆட்சியிலே – வீண் விபரீதமேங்கோ”
என்ற பாடலில் “வெளியேறுங்கோ” என்ற சொல்லடுக்கை எஸ்.ஜி. ராமசாமி பயன்படுத்தியுள்ளார். சுதந்திரம் பெற்றதன் பெருமையை இயற்கைப் பொருள்களாகிய புவி, ஒளி, கடல், மறை போன்றவைகளைச் சொல்ல வைக்க தொடரில் ‘சொல், சொல், சொல்’ என்ற சொல்லடுக்குகளை ஜே.தங்கவேலுவும் பயன்படுத்தியுள்ளனர்.
தீண்டாமையை அகற்ற ‘தூ! தூ! தூ!’ என்ற சொல்லடுக்கை தொடர் இறுதியில் அமைக்கிறார் ந.கந்தசாமி. மது அருந்தச் செல்லும் தன் கணவனைத் தடுத்துக் கூறுவதாக அமைந்துள்ள,
“போகாதே! போகாதே! என் கணவா!
……………………………………
பொல்லாத கள்ளுக்கடைக்கு நீயும்”
என்ற பாடலில் சொல்லடுக்கை அமைத்து கருத்துக்கு வலிமை கொடுக்கிறார் ந.பழனிவேல்.
பாரதியார்(2) புதிய பாரதத்தை வரவேற்க ‘வா! வா! வா!’ என்ற சொல்லடுக்கையும், போகின்ற பாரதத்தை வழியனுப்ப ‘போ! போ! போ!’ என்ற சொல்லடுக்கையும் தொடரின் இறுதியில் அமைத்துப் பாடியுள்ளதையும் காணமுடிகிறது.
தமிழ்நாட்டின் பெருமையை வெளிப்படுத்த ‘நாடு’, ‘பீடு’, ‘கோடு’ என்ற சொல்லடுக்குகளை வீரணக்கோனாரும், கதரின் சிறப்பை வெளிப்படுத்த ‘சுற்றும்’, ‘கொட்டும்’, ‘வெல்லும்’, ‘நன்றே’ போன்ற சொல்லடுக்குகளைப் பாரதிதாசனும்(3) அமைத்துள்ளனர்.
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகளில் சொல்லடுக்கு பற்றி மேலும் சில தகவல்களையும், பிறமொழிச் சொற்கள் பற்றியும், வட்டார வழக்குச் சொற்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி!
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
2. பாரதியார் கவிதைகள், பக்.158-159.
3. பாரதிதாசன் கவிதைகள், தொகுதி-4, பக்.208-210.
Sponsorship




0 கருத்துகள்