நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கவிஞர்கள் கையாண்ட உத்திகள் - கவிதைக்கலை, தேசியக் கவிதைகள், கவிஞர்கள் வெளிப்படுத்தும் உத்திகளின் பாகுபாடு
நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றுவதற்கு எந்தெந்த அரசியல் பின்னணிகள் சாதகமாக இருந்தன என்பதை முந்தைய வலைப்பதிவுகளில் தெரிந்து கொண்டோம். அவ்வாறு தோன்றிய பாடல்கள் காந்தியத்தை மக்களிடையே வெளிப்படுத்துவதிலும் பரப்புவதிலும் எத்தகைய தன்மையைப் பெற்றிருந்தன என்பதையும் தெரிந்து கொண்டோம். இனிவரும் வலைப்பதிவுகளில் அப்பாடல்கள் மூலம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவற்கு கவிஞர்கள் உருவம் சார்ந்த உத்திகளையும், உள்ளடக்கம் சார்ந்த உத்திகளையும் எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- கவிதைக்கலை
- தேசியக் கவிதைகள்
- கவிஞர்கள் வெளிப்படுத்தும் உத்திகளின் பாகுபாடு
கவிதைக்கலை:
தான் அனுபவித்த உணர்ச்சியை அப்படியே பிறரும் அனுபவிக்கும்படி செய்யத் தூண்டும் மன வெளிப்பாடே கலை(1). கலைகளில் சிறப்புடையது கவிதைக்கலை என்றும் கருதலாம். இக்கலையின் வெளிப்பாடு பொருள், நோக்கம், வெளிப்படுமுறை ஆகிய மூன்றும் சிற்பம், ஓவியம், இசை, கட்டிடம், நாடகம் போன்ற மற்ற கலைகளிலிருந்து வேறுபடுகின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப கவிஞனிடத்தில் தோன்றும் உணர்வுகள் உண்மையைச் செஞ்சொற்களால் பலரையும் கவரும் வண்ணம் உருவாக்குவதே கவிதைக் கலையின் தனிச்சிறப்பாகும். இத்தகைய கவிதைக் கலைக்கு கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் என்ற நான்கும் இன்றியமையாதவை என்று திறனாய்வாளர் கூறுவர். ஆனால், இந்நான்கும் கவிதையில் ஒருங்கே அமைதல் அரிது.
இந்நான்கைத் தவிர கவிதையைக் கவிதையாக்குவதற்கும், அழகுப்படுத்துவதற்கும் உருவம், உள்ளடக்கம், உணர்த்தும் முறை என்ற மூன்று கவிதைக் கூறுகளும் உதவுகின்றன. உருவம் என்பது கவிஞன் பாட்டை வனையும் முறை, யாப்பு என்பதும், வடிவம் என்பதும் உருவத்தையே குறிக்கும். கவிதை வெளிப்படுத்தும் கருத்தே உள்ளடக்கம் எனப்படும். இதனைப் பானிகம், விஷயம், பொருள், கரு என்ற வேறு சொற்களாலும் அழைக்கலாம். உள்ளத்தில் பொங்கி வழியும் அனுபவத்தை உணர்ந்த அளவில் நினைத்த பொருளில் கவிஞன் வெளிப்படுத்தக் கையாளும் இலாவகமே, பாவமே, உத்தியே உணர்த்தும் முறையாகும்(2).
தேசியக் கவிதைகள்:
உள்ளடக்கம் இல்லாமல் உருவத்தை மட்டும் அமைத்து கவிதை பாடினால் அது வெறும் சொல்லடுக்காகவே அமையும். உருவம் இல்லாமல் உள்ளடக்கத்தைக் கொண்டு கவிதை பாடினால் அது ஓசை நயமற்ற உரைநடையாக அமையும். உள்ளடக்கத்திற்கு ஏற்ப உருவத்தை அமைத்து, அவை இரண்டையும் நுண்மையாக வெளிப்படுத்தும் வண்ணம் உத்திமுறையையும் அமைத்தால் அதுவே சிறந்த கவிதையாகும். எனவே, உருவம், உள்ளடக்கம், உத்திமுறை மூன்றும் உடல், உள்ளம், உயிர் போன்று ஒன்றோடொன்று தொடர்புடையன என்பது தெளிவாகிறது.
உள்ளடக்கமும் உருவமும் காலந்தோறும் மாறுபடும் தன்மையுடையன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டுப்பற்றை உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகள் தமிழில் தோன்றின. விடுதலை உணர்வை மக்களிடையே தூண்ட புதிய உருவத்தை உடைய தேசியக் கவிதைகளையும், பழைய உருவத்தைப் பின்பற்றிய தேசியக் கவிதைகளையும், புதிய பழைய உருவங்களை இணைத்து வேறு புதிய தேசியக் கவிதைகளையும் கவிஞர்கள் படைத்துள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் புதிய மாறுதல் ஏற்பட்டது போல உத்தி முறையிலும் புதிய மாறுதல் ஏற்பட்டது. பைரன், ஷெல்லி, மில்டன் போன்ற மேல்நாட்டுக் கவிஞர்களும், பங்கிம் சந்திர சட்டர்ஜி, இரவீந்திரநாத் தாகூர் போன்ற இந்தியக் கவிஞர்களும் கையாண்டுள்ள உத்தி முறைகளைப் பின்பற்றி சுப்பிரமணிய பாரதியார், நாமக்கல் கவிஞர், பாரதிதாசன், தேசிக விநாயகம் பிள்ளை, சுத்தானந்த பாரதியார் போன்ற தமிழ்க் கவிஞர்களும் புதிய உத்தி முறைகளைத் தேசியக் கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் பழைய உத்தி முறைகளைச் சிறிது மாற்றியும் தேசியக் கவிதைகளைப் படைத்துள்ளதையும் பார்க்கமுடிகிறது.
கவிஞர்கள் வெளிப்படுத்தும் உத்திகளின் பாகுபாடு:
கவிஞர்கள் வெளிப்படுத்தும் உத்திகளை 1.புற அமைப்பு உத்திகள், 2.அக அமைப்பு உத்திகள் என இரண்டாகப் பாகுபாடு செய்யலாம்(3). இவ்வடிப்படையில் இருபதாம் நூற்றாண்டுத் தேசியக் கவிஞர்கள் கையாண்ட உத்திகளை,
1. நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள்
2. நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உள்ளடக்கம் சார்ந்த உத்திகள்
என்ற இரண்டு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
சொல்லமைப்பு, சொல்லாட்சி, தொடரமைப்பு, தொடர் அடுக்கு, யாப்பமைப்பு, விளக்குமுறை போன்ற உருவம் சார்ந்த உத்திகள் மூலமும், பொருளமைப்பைச் சார்ந்த உள்ளடக்க உத்திகள் மூலமும் தேசியக் கவிஞர்கள் விடுதலை உணர்வை வெளிப்படுத்திய பாங்கைத் தெளிவாக இனி தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த வலைப்பதிவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் உருவம் சார்ந்த உத்திகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. க.ப.அறவாணன், கவிதையின் உயிர் உள்ளம் உடல், ப.8.
2. க.ப.அறவாணன், கவிதையின் உயிர் உள்ளம் உடல், ப.24.
3. இரா. தமிழரசி, சங்க இலக்கிய உத்திகள், முகவுரை.
Sponsorship




0 கருத்துகள்