காந்திய இயக்கங்களும் கவிதைகளும் - 7: வட்டமேஜை மாநாடும் தனித்தொகுதி ஒழிப்பு உண்ணாவிரதமும், இரண்டாம் உலகப்போரும் வெள்ளையனே வெளியேறு இயக்கமும்
தீண்டாமை உணர்வை அகற்றி இந்திய மக்களை ஒரு முன்னணியில் திரட்டவேண்டும் என்ற உணர்வு தலைவர்களிடையே உருவானது எனவும், அதன் விளைவாக 1919-ஆம் ஆண்டு தீண்டாமை எதிர்ப்பு மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது எனவும், காந்தியடிகளின் தலைமையில் நடந்த வைக்கம் சத்தியாக்கிரகம் தீண்டாமை எதிர்ப்புக்கு வெற்றியைத் தந்தது எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக வட்டமேஜை மாநாடு,தனித்தொகுதி ஒழிப்பு உண்ணாவிரதம் பற்றியும், இரண்டாம் உலகப்போர், வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- காந்தி - இர்வின் ஒப்பந்தம்
- வட்டமேஜை மாநாடும் தனித்தொகுதி ஒழிப்பு உண்ணாவிரதமும்
- இரண்டாம் உலகப்போரும் வெள்ளையனே வெளியேறு இயக்கமும்
- மீள்பார்வை
காந்தி - இர்வின் ஒப்பந்தம் :
சட்டமறுப்பு இயக்கத்தைத் தடை செய்ய ஆங்கிலேயர் செய்த முயற்சி மக்களிடையே தீவிர விடுதலை உணர்வாக மாறியதைக்(1) கண்ட அரசாங்கம், அடக்கு முறையால் இயக்கத்தை ஒடுக்க முடியாது என உணர்ந்தது. காந்தியடிகளிடம் சமரசம் செய்ய முன்வந்தது. அதன்படி 1931-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5-ஆம் நாள் காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது(2). இவ்வொப்பந்தத்தை,
“ஒப்பிடும் காந்தியும் இர்வினும் கூடி
உள்ளத்தில் மாறுதலில்லாமல் நாடி
செப்பிடும் இந்தியர்க்காதாரம் தேடி
செய்தனரென்றும் நிலை பெற நீடி”
என்று நடராஜப் பிள்ளை வரவேற்றுப் பாடியுள்ளதையும் பார்க்கமுடிகிறது. காந்திய இயக்கங்கள் கவிஞர்களின் உள்ளத்தில் கனலாக இருந்ததை அவர்களின் கவிதைகள் வழி தெளிவாக உணரமுடிகிறது.
வட்டமேஜை மாநாடும் தனித்தொகுதி ஒழிப்பு உண்ணாவிரதமும்:
காந்தி - இர்வின் ஒப்பந்தம் தற்காலிகமாகச் சமாதானத்தை ஏற்படுத்தியதால் காந்தியடிகள் இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியைக் குற்றாலம் பிள்ளை,
“தூது கொண்டுமே சென்றாரே காந்தி
இந்தியத் துரைத்தனஞ் செய்யும் நடத்தைகளை
எடுத்துரைக்கவே மன்னனிடம்”
என்ற பாடலில் வெளிப்படுத்தியுள்ளார். இந்தியத் துரைத்தனத்தார் செய்த கொடுமைகளை எடுத்துரைக்கச் சென்ற காந்தியடிகளை துரியோதனன் சபைக்கு கண்ணன் தூது சென்றதைப் போல் இந்தியாவின் விடுதலைக்காகக் காந்தியடிகள் கதரணிந்து ராட்டினமேந்தி கப்பலேறிச் சென்றதாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.
காந்தியடிகளுடன் வட்டமேஜை மாநாட்டிற்குச் சென்ற ஜின்னா, ஆகாகான், அம்பேத்கார் போன்ற தலைவர்கள் காந்தியடிகளின் முழுநிறை விடுதலைக் கோரிக்கையை எதிர்த்தனர்(3). பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் இந்தியர்களிடையே பிளவை உண்டாக்கவும், முழுநிறை விடுதலைக் கோரிக்கையை அகற்றவும் மேற்கொண்டுள்ள முயற்சி வட்டமேஜை மாநாட்டில் வெற்றியை ஏற்படுத்துமா? தோல்வியை உண்டாக்குமா? என்ற நிலையை இந்தியர்களிடையே உருவாக்கியது. இக்கருத்தை வெளிப்படுத்துவதாக கவிமணி(4) ‘வட்டமேஜை மாநாடு’ என்ற பாடலில் ஒரு குறத்தியிடம் வட்டமேஜை மாநாடு மங்களமாக முடிந்திடுமோ? சுதந்திரத் தீர்மானம் பழுத்திடுமோ? கப்பலேறிச் சென்ற இந்து – முஸ்லீம் தலைவர்களிடையே ஒற்றுமை உண்டாகுமோ? அல்லது வேற்றுமையுடன் எதிர்த்து நிற்பாரோ? என்று குறி கேட்பதாக வெளிப்படுத்தியுள்ளார். வட்டமேஜை மாநாடுகள் இன வேறுபாடுகள் தோன்றக் காரணமாக இருந்தன என்பது கவிமணியின் பாடலால் தெளிவாகிறது.
இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் தோல்வி கண்ட காந்தியடிகள் இந்தியா திரும்பினார்(5). 1932-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வில்லிங்டன் பிரபுவால் கொண்டு வரப்பட்ட நான்கு தடைச்சட்டங்கள்(6) காந்தியடிகளை மீண்டும் சட்ட மறுப்புப் போரில் ஈடுபடுத்தியது(7). இச்சட்ட மறுப்புப்போர் தீவிரமாகச் செயல்பட்ட நிலையில் மீண்டும் இந்தியர்களிடையே பிளவை உண்டாக்கி விடுதலை உணர்வை தடை செய்ய 1932-ஆம் ஆண்டு வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தை பிரிட்டிஷ் பிரதம மந்திரி ராம்சே மாக்டொனால்டு அறிவித்தார். அதன்படி இந்தியாவிலுள்ள அனைத்து இனங்களுக்கும் தனித்தனி பிரதிநிதித்துவம் அளிக்க முன்வந்ததை(8) கண்டிக்கக் காந்தியடிகள் ஏர்வாடாச் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இந்நிலையில் சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டு வேலூர்ச் சிறையில் இருந்த ராய.சொக்கலிங்கம்(9) “ஏர்வாடாக் கோயில்” என்ற பாடல் மூலம் சிறையில் இருக்கும் காந்தியடிகளின் அவலநிலையை வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்.
உண்ணாவிரதம் இருக்கும் காந்தியடிகளைக் காக்க வேண்டுமானால் நாட்டில் நிலவி வரும் சாதி, சமய, இன வேறுபாடுகளை அகற்றவேண்டும். காந்தியினுடைய உயிர் நிலைக்கவேண்டும் என கடவுளிடம் வரம் வேண்டுகிறார் ராய.சொக்கலிங்கம்(10).
காந்தியடிகள் மேற்கொண்ட உண்ணாவிரதம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அகற்றியதையும் கவிதைகளால் வெளிப்படுத்திக் காட்டியுள்ளனர். தீண்டாதார்களின் உரிமைகளைக் காக்கவும், அரசாங்கம் மேற்கொண்ட திட்டத்தை அகற்றவும் தோன்றியவரே காந்தியடிகள்(11) என்று கவிதைகளால் வெளிப்படுத்திக் காட்டுகிறார் ராய. சொக்கலிங்கம்.
இரண்டாம் உலகப்போரும் வெள்ளையனே வெளியேறு இயக்கமும்:
இரண்டாம் உலகப்போரில் இந்தியாவை ஈடுபடுத்தியதைக் கண்டிக்கக் காந்தியடிகள் தனிநபர் சத்தியாக்கிரக இயக்கத்தை மேற்கொண்டார். இந்நிலையில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட கிரிப்ஸ் திட்டம், போருக்குப் பின் இந்தியாவில் பிளவை உண்டாக்குவதாக இருந்ததால் ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்ற உணர்வு தலைவர்களிடம் உருவானது. அதன் விளைவாகத் தோன்றிய ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ வெள்ளையனை இந்தியாவைவிட்டு வெளியேற்றுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பாக மாறியது. இப்போராட்டம் கவிஞர்களின் உள்ளங்களில் கவிதைக்கனலை ஏற்படுத்தியது. வெட்கங்கெட்ட வெள்ளையர்களே, வெளியேறுங்கள் என்று ராமசாமியும், நாட்டைவிட்டு ஓடடா என கந்தசாமியும், அன்னியர் ஆதிக்கம் முற்றிலும் அகல வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி(12), திருமூர்த்தி ஆகியோரும் கவிதைகளைப் புலப்படுத்தியுள்ளதையும் பார்க்கமுடிகிறது.
காந்தியடிகளின் இயக்கங்கள் மக்கள் இயக்கமாக மாறிய போதெல்லாம் காந்தியக் கவிஞர்கள் அவருடைய கொள்கைகளை வெளிப்படுத்தும் உணர்வை கவிதைகளால் வெளிப்படுத்தி மக்களை அவ்வியக்கங்களில் ஈடுபாடு கொள்ளுமாறு செய்தனர். அதனால் தமிழக மக்களிடையே காந்திய உணர்வு மேலோங்கி வளரத் தொடங்கியது என்றும் கூறமுடியும்.
மீள்பார்வை:
காந்தியடிகளின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட கவிஞர்கள் அவரைத் தெய்வமாகவே கவிதைகளில் வெளிப்படுத்திக் காட்டி உள்ளனர். அவருடைய அகிம்சைப் போர்முறையே சிறந்தது என்பதை நன்குணர்ந்து, அதனைக் கவிதைகளில் வெளிப்படுத்திக் காட்டி மக்களைத் தூண்டவும் முயன்றனர்.
காந்தியக் காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான கவிஞர்கள் பழைய இலக்கிய வடிவங்களில் அவருடைய வாழ்க்கை வரலாற்றையும், கொள்கைகளையும், அவர் மேற்கொண்ட இயக்கங்களையும் பாடல்களில் வெளிப்படுத்திக்காட்டி மக்களிடையே காந்திய உணர்வை வளர்க்க முயன்றுள்ளனர்.
இந்தியா விடுதலை அடைவதற்குக் காந்தியடிகளின் சத்தியாகிரகப் போரே சிறந்தவழி என்பதை நன்குணர்ந்த கவிஞர்கள் அவருடைய சத்தியப்போரில் சேரும்படி மக்களைத் தூண்டவும் கவிதைகளைப் பாடியுள்ளனர்.
காந்தியடிகளின் அகிம்சைப் போர் வெற்றியைத் தரவல்லது; அழிவில்லாதது; உலகிற்கு புதுமையானது; உலக மக்களுக்கு அன்பு வழியை அறிவுறுத்தவல்லது என்பதை கவிதைகளால் வெளிப்படுத்திக்காட்டி மக்களைத் தூண்ட முயன்றுள்ளனர்.
இனிவரும் வலைப்பதிவுகளில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த கவிஞர்கள் கையாண்ட உத்திகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. Mahajan, The Nationalist Movement in India, pp.286-287.
2. R.C. Majumdar, History of Freedom Movement, Vol.III, p.308.
3. Mahajan, The Nationalist Movement in India, p.294.
4. தேசிய விநாயகம்பிள்ளை, மலரும் மாலையும், ப.187.
5. Pattabhi Sitaramayya, History of India National Congress, Vol.I, P.505.
6 Mahajan, The Nationalist Movement in India, p.296.
7. R.C. Majumdar, History of Freedom Movement, Vol.III, pp.254, 328.
8. Mahajan, The Nationalist Movement in India, p.298.
9. ராய. சொக்கலிங்கம், காந்தி கவிதைகள், பக்.205-207.
10. ராய. சொக்கலிங்கம், காந்தி கவிதைகள், ப.211.
11. ராய. சொக்கலிங்கம், காந்தி கவிதைகள், பக்.214-215.
12. கு.சா. கிருஷ்ணமூர்த்தி, இசை இன்பம், ப.17.
Sponsorship




0 கருத்துகள்