காந்தியின் நிர்மான இயக்கங்கள் - 6: தீண்டாமை எதிர்ப்பு மாநாடு, வைக்கம் சத்தியாக்கிரகம், உப்புச் சத்தியாக்கிரக இயக்கம்
காந்தியினுடைய சொற்படி மதுக்கடை முன் மறியல் செய்ய மக்களைக் கவிதைகள் மூலம் அழைக்கின்றனர் கவிஞர்கள் எனவும், பாரதியார் மத ஒற்றுமையை வளர்க்க முப்பதுகோடி மக்களும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் என்று வெளிப்படுத்தியுள்ளார் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக காந்தியின் நிர்மான இயக்கங்கள் பற்றி சில தகவல்களையும், உப்புச் சத்தியாக்கிரக இயக்கம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- தீண்டாமை எதிர்ப்பு மாநாடு
- வைக்கம் சத்தியாக்கிரகம்
- உப்புச் சத்தியாக்கிரக இயக்கம்
தீண்டாமை எதிர்ப்பு மாநாடு:
பண்டைக்காலம் முதல் மக்களிடையே நிலவிவரும் தீண்டாமை உணர்வு இருபதாம் நூற்றாண்டில் விடுதலை உணர்வு வளர்ச்சியடைய தடையாக அமைந்தது. அந்நிலையில் தீண்டாமை உணர்வை அகற்றி இந்திய மக்களை ஒரு முன்னணியில் திரட்டவேண்டும் என்ற உணர்வு தலைவர்களிடையே உருவானது. அதன் விளைவாக 1919-ஆம் ஆண்டு ‘தீண்டாமை எதிர்ப்பு மாநாடு’ சென்னையில் நடத்தப்பட்டது. 1920-ஆம் ஆண்டு நாகபுரியில் கூடிய காங்கிரஸ் தீண்டாமையை ஒத்துழையாமை இயக்கத்துடன் ஒன்றாகச் செயல்படுத்தத் தீர்மானித்தது. தீண்டாமை உணர்வு மக்கள் மனத்திலிருந்து அகலாவிட்டால் நாம் உண்மையான விடுதலையைப் பெற முடியாது(1) என்று கருதிய காந்தியடிகள் 1924-இல் ‘வைக்கம்’ என்ற இடத்தில் தீண்டாமையை எதிர்த்துச் சத்தியாக்கிரகப் போரை நடத்தினார்.
வங்காளப் பிரிவினையின்போதே தீண்டாமையை அகற்ற வேண்டும் என்ற உணர்வு பாரதியாரின் கவிதைகளில் வெளிப்பட்டிருந்தது(2). அப்போது தீண்டாமை இயக்கம் வளர்ச்சியடையாத நிலையிலேயே இருந்தது. காந்தியடிகளின் தலைமைக்குப் பிறகு தான் தீண்டாமை உணர்வு இந்தியாவிலிருந்து அகற்றப்படவேண்டும் என்பதைக் காந்தியக் கவிஞர்கள் கவிதைகளாகவும் வெளிப்படுத்த முன்வந்தனர்.
தீண்டாமையே இந்தியத்தாயின் அடிமைநிலைக்குக் காரணம் என்று பாடுகின்றார் திரு.வி.க.(3) இத்தகைய தீண்டாமை உணர்வை நாட்டைவிட்டே விரட்டவேண்டும் என வீரமுழக்கம் செய்வதாகக் கந்தசாமியும், அருணகிரி நாதரும், நாமக்கல் கவிஞரும்(4) பாடல்களைப் படைத்துள்ளனர். தீண்டாமை மக்களிடையே சிக்கலை ஏற்படுத்துகிறது என்பதை,
“தீண்டாமையே வேண்டாமையே – மக்கள்
சிக்குற விளைக்கு மிதை விட்டு விட்டிடுங்களினி”
என்ற பாடல் மூலம் வெளிப்படுத்திக்காட்டி அதை விலக்கிவிட வேண்டுகோள் விடுக்கிறார் வீரணதாஸ்.
வைக்கம் சத்தியாக்கிரகம்:
தீண்டாமையை அகற்ற காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்த நிகழ்ச்சியைக் கவிமணியும்(5), ராய.சொக்கலிங்கமும்(6) கவிதைகளால் வெளிப்படுத்திக் காட்டியுள்ளதையும் காணமுடிகிறது.
காந்தியடிகளின் தலைமையில் நடந்த ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’ தீண்டாமை எதிர்ப்புக்கு முழுமையான வெற்றியைத் தந்தது என்பதைக் கொத்தமங்கலம் சுப்புவின்(7) பாடல் உணர்த்துவதையும் பார்க்கமுடிகிறது.
சாதி வேறுபாடு, தீண்டாமை, பெண்ணடிமை போன்றன காந்தியின் நிர்மாணத் திட்டங்களில் சேர்க்கப்பட்ட போதிலும் மது விலக்கு, கதர் உற்பத்தி ஆகியவற்றை கவிதைகளால் வெளிப்படுத்திய அளவு இவை கவிதைகளில் இடம்பெறவில்லை என தெரிகிறது. விடுதலை உணர்வைக் கவிதைகளால் வெளிப்படுத்த முன்வந்த கவிஞர்கள், பெரியாரின் சமுதாயச் சீர்திருத்த உணர்வை வெளிப்படுத்தும் கவிதைகளை அதிகமாகப் பாட முன்வரவில்லை என்பது நன்கு புலனாகிறது.
உப்புச் சத்தியாக்கிரக இயக்கம்:
சி.ஆர். தாஸின் மறைவு, சுயராஜ்யக் கட்சியை வலுவிழக்கச் செய்தது. சைமன் கமிசனின் வருகையால் ஏற்பட்ட தீவிர எழுச்சி மீண்டும் காந்தியடிகளை விடுதலைப் போரில் ஈடுபடச் செய்தது. மீண்டும் காந்தியடிகளின் செல்வாக்கு வலுவடைந்த நிலையில் 1929-இல் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் கூடிய காங்கிரஸ் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்க தீர்மானித்தது(8). சட்ட மறுப்பு இயக்கத்தின் நோக்கத்தைக் காந்தியடிகள் 02.03.1930-இல் கடிதம் மூலம் வைசிராயிக்குத் தெரிவித்தார். இக்கடிதத்தில் குறிப்பிட்ட 11 தீர்மானங்களையும் நிறைவேற்றினால் சட்டமறுப்பை நிறுத்தி விடுவதாக எழுதியிருந்தார். அடித்தட்டு மக்களின் அடி வயிற்றைத் தொட்ட உப்பு வரி எதிர்ப்பை ஆயுதமாகக் கொண்டு ஆங்கிலேய அரசுடன் மோதத் துணிந்த காந்தியை அப்போது பலரும் எள்ளி நகையாடினர். கோலியாத்தை எதிர்க்க வந்த டேவிட் போல காட்சியளித்தார் காந்தி. அதிகார வர்க்கம் அதை கிண்டர் கார்டன் கிளர்ச்சியாக கருதி வைசிராய் இக்கடிதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதனால் காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார். இந்நிலையில் காந்தியக் கவிஞர்கள் மக்களை உப்புச் சத்தியாக்கிரகத்தில் சேரும்படி கவிதைகளால் தூண்ட முயன்றனர். காந்தியடிகள் உப்பு வரியை நீக்க புறப்பட்ட நிலையை,
“முப்பதாம் ஆண்டினிலே – மார்ச்
முந்நான்கு தேதிகளில்
உப்பு வரி நீக்க – மகாத்மா
ஊக்கமுடன் எழுந்தார்”
என்ற பாடலாக வெளிப்படுத்திக் காட்டுகிறார் சின்னசாமிப் பிள்ளை அவர் தண்டியை நோக்கிப் புறப்பட்டபோது வழி நெடுகிலும் விடுதலை உணர்வையும், ஆன்மீக உணர்வையும், அகிம்சை உணர்வையும், தூண்டும் உரைகளை ஆற்றிச் சென்றார். இந்நிலையை,
“தீரர் ஞான காந்தி சங்கம்
திசை முழங்கக் கேட்குது
சேரவாரும் மனித - வாழ்வை
சீர்திருத்த வேண்டுவோர்”(9)
என்றும்,
“கத்தியின்றி ரத்தமின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர்”
என்றும் காந்தியடிகளின் அழிவில்லாத அறப்போரை கவிதைகளால் வெளிப்படுத்திக் காட்டி மக்களை அதில் சேரும்படி அழைக்கிறார் நாமக்கல் கவிஞர்(10). இப்பாடல்கள் ராஜாஜி தமிழ்நாட்டில் மேற்கொண்ட வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரக இயக்கத்திற்கு மக்களைத் திரட்ட பெரிதும் பயன்பட்டன. வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிரகம் காந்தியவழியில் நாடு விடுதலை அடையவேண்டும் என்பதை ஆதரிக்கவே உருவாகியது என்கிறார் நடராஜப்பிள்ளை.
அடுத்த வலைப்பதிவில் வட்டமேஜை மாநாடு,தனித்தொகுதி ஒழிப்பு உண்ணாவிரதம் பற்றியும், இரண்டாம் உலகப்போர், வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. D.G. Tendulkar, Mahatma, Vol.IV, p.248.
3. திரு.வி.க., தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு, ப.17.
4. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.167-170.
5. தேசிய விநாயகம் பிள்ளை, மலரும் மாலையும், பக்.166-168.
6. ராய. சொக்கலிங்கம், காந்தி கவிதைகள், பக்.228-230.
7. கொத்தமங்கலம் சுப்பு, காந்தி மகான் கதை, ப.63.
8. Mahajan, The Nationalist Movement in India, p.282.
9. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.114.
10. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.115.
Sponsorship




0 கருத்துகள்