காந்தியின் நிர்மான இயக்கங்கள் - 5: மதுக்கடை மறியல், மத ஒற்றுமை, கிலாபத் இயக்கம், சிங்காரத் தங்கப்பாட்டு
நாட்டுத் துரோகி என்று கெட்டபெயர் வாங்கிடாமல் சுயராஜ்யம் பெற நல்ல கதரை அணிய வேண்டும் எனவும், அறியாமையில் இருக்கும் இந்தியர்களுக்கு மயக்க உணர்வை உண்டாக்கி விடுதலை உணர்வைத் தடை செய்யும் நிலை உருவாகியது எனவும், மதுவினால் வரும் கேடுகளில் பெண்களுக்கு அவலநிலை ஏற்பட்டது எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக காந்தியின் நிர்மான இயக்கங்கள் பற்றி சில தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- மதுக்கடை மறியல்
- மத ஒற்றுமை
- கிலாபத் இயக்கம்
- சிங்காரத் தங்கப்பாட்டு
மதுக்கடை மறியல்:
மதுவினால் வரும் கேடுகளை வெளிப்படுத்தி மதுவினைக் கைவிடவேண்டும் என்று மக்களுக்குக் கவிதைகளால் அறிவுரை கூறிய கவிஞர்கள், மது உற்பத்திக்கும் விற்பனைக்கும் காரணமாக இருக்கும் தென்னை, பனை மரங்களையும், மதுக் கடைகளையும் தடுத்து நிறுத்தவேண்டும் என்ற உணர்வையும் கவிதைகளால் வெளிப்படுத்தியுள்ளதையும் காணமுடிகிறது. தென்னை, பனை மரங்கள் வைத்திருப்பவர்களைப் பார்த்து,
“கள்ளுக்கு மரத்தை விடாதீர்
வம்பாய் கர்மத்தை நீங்களும் தேடிக் கொள்ளாதீர்
உள்ள பலனை போக்காதீர்
காந்தி உரைக்கும் நல்வாக்குதனை மறவாதீர்”
எனக் காந்திய வழியில் அறிவுரை கூறுவதாகப் பாடுகிறார் காமாட்சி பிள்ளை. காந்தியினுடைய சொற்படி மதுக்கடை முன் மறியல் செய்ய மக்களை அழைக்கின்றனர் நாமக்கல் கவிஞரும்(1), வேல்சாமியும்(2), மதுக்கடை முன் மறியல் செய்ய ராஜாஜி, பெரியார் ஆகியோர்களைக் கைது செய்து காவலில் வைத்ததைப் பழித்துக் காட்டுகிறார் அருணகிரி நாடார். மதுக்கடை மறியலில் பங்கு கொண்ட ராஜாஜி 1937-ஆம் ஆண்டில் சென்னை மாகாண கவர்னராக வந்தபோது மது விலக்குச் சட்டத்தைத் தமிழ் நாட்டில் கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியை, இந்திய தேசமதில் இணையில்லாமல் இருந்த கள்ளரக்கன் எட்டு ஜில்லாக்களில் இன்று குப்புற வீழ்ந்ததடி என எஸ்.ஜி.ராமசாமியும், கவிமணியும்(3) மகிழ்ச்சியுடன் கவிதைகளால் வெளிப்படுத்தியுள்ளதையும் பார்க்கமுடிகிறது. இத்தினம் முதல் கள் பேயும், கள் சனியனும் நம்மைவிட்டு அகன்றன. இத்தினத்தைத் தீபாவளியாகக் கொண்டாடுவோம் என ராஜாஜி மது விலக்குச் சட்டம் கொண்டு வந்ததை வரவேற்றுப் பாடுகிறார் நாமக்கல் கவிஞர்(4).
மத ஒற்றுமை:
மதுவினை அகற்றவேண்டும் என்ற உணர்வு பெரும்பாலான கவிஞர்களின் உள்ளங்களில் பதிந்திருந்ததை அவர்களின் கவிதைகள் வெளிப்படுத்திக் காட்டியுள்ளன. இதற்குக் காந்திய உணர்வே தூண்டுதலாக இருந்தது என ஊகிக்கலாம்.
12-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவிற்கு வந்த முஸ்லிம்கள் 19-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை வேறுபாடு இல்லாமல் அனைவரும் இந்தியர் என்றே கருதி வாழ்ந்தனர். இருபதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் பிளவு சக்தியால் இந்து–முஸ்லிம் என்ற வேறுபாடு உருவானது. வங்காளப் பிரிவினை இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிக்க ஏற்பட்ட சூழ்ச்சியாயினும் ஆரம்பத்தில் அவர்களிடையே ஒற்றுமை உணர்வையே உண்டாக்கியது(5). ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சி ‘முஸ்லிம் லீக்’ என்ற தனிக்கட்சியை உருவாக்கியது. இக்கட்சியின் தோற்றம் இந்து – முஸ்லிம் ஒற்றுமையை வலுவிலக்கச் செய்த முதல் காரணியாகும். 1909-இல் கொண்டுவரப்பட்ட மிண்டோ – மார்லிச் சீர்திருத்தம் இந்து – முஸ்லிம் வேற்றுமைக்கு வலுவூட்டியது. இந்நிலையில் பாரதியார்(6) மத ஒற்றுமையை வளர்க்க முப்பதுகோடி மக்களும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் என்று வெளிப்படுத்தியுள்ளார்.
கிலாபத் இயக்கம்:
1906 முதல் 1916 வரை நிலவி வந்த இந்து – முஸ்லிம் வேற்றுமை முதல் உலகப் போரின்போது துருக்கிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளால் மீண்டும் ஒற்றுமையுணர்வை உண்டாக்கியது. இந்நிலையில் முஸ்லிம்களால் ஏற்படுத்தப்பட்ட ‘கிலாபத்’ இயக்கத்திற்குக் காந்தியடிகள் ஆதரவு தந்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் ஏற்பட்ட வன்முறை, சுயராஜ்யக் கட்சியின் தோற்றம் ஆகிய செயல்கள் மீண்டும் இந்து–முஸ்லிம் வேறுபாட்டை உண்டாக்கியது(7). சிறையிலிருந்து வெளிவந்த காந்தியடிகள் இந்து–முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார்(8). நிர்மானத் திட்டங்களில் ஒன்றாக இதைச் செயல்படுத்தி வந்தார். இந்நிலையில் காந்தியடிகளிடம் பற்று கொண்டிருந்த முஸ்லிம் கவிஞர்களும், இந்து கவிஞர்களும் இந்து–முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திப் பாடியுள்ளதையும் பார்க்க முடிகிறது. மத வேறுபாடு இல்லாமல் இந்தியர் அனைவரும் சகோதரராய் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதைச் சிறுவனுக்கு உணர்த்துவதாக வீரணதாஸ் பாடியுள்ளார். இக்கருத்தையே,
“இந்து முஸ்லிமான்கள் ஒன்று
இசைவோம் இன்று நன்று”
என வேண்டுகோள் விடுக்கிறார் வீரணக் கோனார். இந்து – முஸ்லிம் ஒற்றுமையை வலுப்படுத்த ‘வந்தே மாதரம்’ என்ற தொடருடன் ‘அல்லாகு அக்பர்’ என்ற தொடரையும் இணைத்துப் பாடியுள்ளார் வீரணக் கோணார்.
சிங்காரத் தங்கப்பாட்டு:
தியாகராசச் செட்டியார், இந்து – முஸ்லிம் உறவை வலுப்படுத்த முஸ்லிம் தேச பக்தர்களான யாகூப் உசேன், ஹக்கிம் அஜ்மல்கான் போன்றவர்களின் தொண்டுகளைப் பாடல்களால் வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்.
இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் ஆங்கிலேயரை எதிர்த்து நின்றால்தான் நாடு விடுதலை அடையமுடியும் என்ற உணர்வை பாஸ்கர தாசும்(9), கவிமணியும்(10) வெளிப்படுத்தியுள்ளனர்.
முஸ்லிம் கவிஞர்களான முகைதீன் அப்துல் காதர் ராவுத்தர், முகமது ரசூல் ஆகியோர் ‘இந்து – முஸ்லிம் ஒற்றுமைச் சிங்காரத் தங்கப்பாட்டு’, ‘இந்து – முஸ்லிம் ஒற்றுமை சுதந்திர மஞ்சரி’ என்ற பாடல்களாக வெளிப்படுத்தியுள்ளதை நோக்கும்போது முஸ்லிம் கவிஞர்களின் தேசபக்தி பாராட்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
அடுத்த வலைப்பதிவில் காந்தியின் நிர்மான இயக்கங்கள் பற்றி மேலும் சில தகவல்களையும், உப்புச் சத்தியாக்கிரக இயக்கம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.176.
2. என்.கே.வேல்சாமி, மகாத்மாகாந்தி இந்தியாப் பிரயான சுதந்திரத் திலகம், ப.11.
“மறியலென்றும் போர் புரிவோம் - மகான்
காந்தி சொல்லை நாமறிவோம் தொழுவோம்”
3. தேசிய விநாயகம்பிள்ளை, மலரும் மாலையும், ப.169.
4. நாமக்கல் கவிஞர் பாடல்கள், ப.170
5. Mahajan, The Nationalist Movement in India, P.151.
6. பாரதியார் கவிதைகள், பக்.133-134.
7. Nirmal Kumar Bose, Studies in Gandhism, pp.148-149.
8. கொத்தமங்கலம் சுப்பு, காந்தி மகான் கதை, பக்.60-61.
9. பாஸ்கரதாஸ், இந்து தேசாபிமானிகள் செந்தமிழ்த் திலகம், முதல் பாகம், ப.11.
10. தேசிய விநாயகம்பிள்ளை, மலரும் மாலையும், ப.187.
Sponsorship




0 கருத்துகள்