நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - வங்காளப் பிரிவினையும் தேசியப் பாடல்களின் தோற்றமும் - 2
அடிமையை அகற்றி அறத்தை நிலை நிறுத்தத் தோன்றியவர் தாதாபாய் நௌரோஜி. அவர் ஆற்றிய பணி பற்றியும், பங்கிம் சந்திரர் எழுதிய ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் வங்கப் பிரிவினையைக் கண்டிக்கும் வகையில் எழுதப்பட்டது என்பது பற்றியும், பதவி ஆசைக்கு அடிமையாகும் தேசபக்தர்களைப் பழித்துக் காட்டும் நிலை அந்நாளில் இருந்தது என்பது பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக வங்காளப் பிரிவினையும் தேசியப் பாடல்களின் தோற்றமும் பற்றிய சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- வந்தே மாதரம்
- பாரத தேவியின் அடிமை
- வந்தே மாதர இயக்கம்
வந்தே மாதரம்:
பாரதநாடு முற்காலத்தில் இருந்த நிலையையும் தற்காலத்தில் அடிமையால் அது இருக்கும் நிலையையும் கண்டு மனம் பொறாத பாரதியார் பாரததேசத்தின் முற்கால நிலையையும் தற்காலநிலையையும் ஒப்பிட்டுக்காட்டி இனியாவது இந்தியா முன்னுக்கு வர முயலவேண்டும் என இந்தியர்களுக்கு அழைப்பு விடுகிறார். இக்கருத்தைத் ‘தாய்நாட்டின் முன்னாட் பெருமையும், இந்நாட் சிறுமையும்’ என்ற பாடல் மூலம் வெளிப்படுத்திக்காட்டுகிறார் பாரதியார். இத்தலைப்பில் பாரதியார் தொடர்ச்சியாகப் பல பாடல்களை வெளியிட்டார் எனவும் தெரியவருகிறது.
1906-இல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸில், ‘சுயராஜ்ஜியமே நமது லட்சியம்’ என்று தாதாபாய் நௌரோஜியும் ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்’ என்று திலகரும் கூறியதைக் கேட்ட ஆங்கிலேயர்களும், மிதவாதிகளும் தொண்டு செய்து அடிமையாக வாழவேண்டிய இந்தியர்களுக்குச் சுதந்திரம் வேண்டுமா? எனப் பழித்துப் பேசினர். இந்நிகழ்ச்சியைத் ‘தொண்டு செய்யும் அடிமை’(1) என்ற பாடலாக வெளிப்படுத்திக்காட்டி, இந்நிலை மாற வேண்டுமானால் இந்தியர்களிடையேயுள்ள சாதி, சமய வேறுபாடு, அடிமையுணர்வு, அச்ச உணர்வு, சோம்பல் உணர்வு போன்றவைகளை அகற்ற வேண்டும் என்று பாரதியார் பழித்துக் கூறுவதன் மூலம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துகிறார்.
பாரத தேவியின் அடிமை:
இந்தியாவையும், இந்திய மக்களையும் இழிவாகப் பேசிய ஆங்கிலேயர்களுக்குப் பாரதநாட்டின் பெருமையை எடுத்துக்காட்டி இனி எத்தகைய துன்பம் வந்தாலும் அடிமைத் தொழில் செய்யமாட்டோம் என்பதனை ‘எங்கள் நாடு’(6) என்ற பாடல் மூலம் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.
தேச பக்தர்கள் சிலர் புதுவருசம் பிறந்தபோது நாம் இனிமேல் சுயராஜ்யம் கிடைக்க இடைவிடாது முயற்சி செய்யவேண்டும் என்ற சபதம் செய்து கொண்டார்கள். இந்தச் சூழ்நிலையில் பாரதியார் ‘புதுவருசம்’ என்ற பாடலைப் பாடி மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்க முயல்கிறார் என்று கருதமுடிகிறது.
வந்தே மாதர இயக்கம்:
வந்தே மாதர இயக்கம் வளர்ச்சியடையத் தொடங்கிய நிலையில் வந்தே மாதர இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட வக்கீல் அப்புசாமி ஐயர் இந்து தேசத்தின் சிறப்பு, இந்து மாதாவின் மகிமை, சுதேச புகழ் வந்தனம், சுதேச நிலைபாடு, இந்து மாதாவின் சோகமுறையீடு, அடியார் புலம்பல், எட்வர்டு அரசனுக்கு எளிய இந்தியர் முறையீடு, சுதேசிய மக்கள் போன்ற தலைப்புகளில் ‘வந்தே மாதரக் கீர்த்தனைகள்’ என்ற நூலை 1907-இல் வெளியிட்டார். இந்நூல் அவருடைய சுதேசிய உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது.
வந்தேமாதர இயக்கத்தின்போது ஆட்சியை எதிர்த்துச் செயல்படும் பத்திரிக்கைகளையும், பத்திரிக்கையாசிரியர்களையும் தண்டிக்கும் நிலை நிலவி வந்தது. ‘யுகாந்திரம்’ என்ற பத்திரிக்கையை நடத்தி வந்த பூபேந்திர நாததத்தர் பத்திரிக்கை மூலம் மக்களைத் தூண்டியதால் சிறைப்படுத்தப்பட்டவர். அந்நிலையில் அவருடைய புகழை வெளிப்படுத்துவதாக ‘பூபேந்திர விஜயம்’(8) என்ற பாடலைப் பாரதியார் வெளிப்படுத்தினார். தேசபக்தர்கள் துன்ப நிலையை அடையும்போது அவர்களுடைய தியாக உணர்வை மக்களுக்கு வெளிப்படுத்திக்காட்டும்நிலை பாரதியாரிடம் இருந்ததை அறியமுடிகிறது.
லாலா லஜபதிராய் சிறையில் படும் துன்பநிலையை மக்களுக்கு வெளிப்படுத்திக்காட்டும் உளவியல் பாங்கையும் பாரதியார் ‘லாலா லஜபதிராய் பிரலாபம்’(10) என்ற பாடலில் வெளிப்படுத்தியுள்ளார் என அறியமுடிகிறது.
அடுத்த வலைப்பதிவில் வங்காளப் பிரிவினையும் தேசியப் பாடல்களின் தோற்றமும் பற்றி மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. பாரதியார் கவிதைகள், பக்.188-189.
2. பாரதியார் கவிதைகள், பக்.133.
3. சி.சுப்பிரமணிய பாரதி, பாரதி நூல்கள், நான்காம் தொகுதி, ப.36.
5. பாரதியார் கவிதைகள், பக்.192-193.
6. பாரதியார் கவிதைகள்,பக்.139-140.
8. பாரதியார் கவிதைகள், பக்.208-209.
10. பாரதியார் கவிதைகள், பக்.212-213.
Sponsorship
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication




0 கருத்துகள்