நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - சுதந்திரமும் தேசியப் பாடல்களும் பகுதி - 2
அடிமையில் வாழ்ந்த மக்களுக்கு தான், சுதந்திரத்தின் அருமை தெரியும் எனவும், பல கவிஞர்கள் சுதந்திர உணர்வைக் கவிதைகளாக்கி சுதந்திரம் காணத் துடித்தார்கள் எனவும், சுதந்திர நாளில் பாரதத் தாய்க்கு வாழ்த்துக் கூறி வெற்றி கொண்டாட வாரீர் என விசுவநாத சாஸ்திரி கவிதை மூலம் அழைக்கிறார் எனவும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக சுதந்திரமும் தேசியப் பாடல்களும் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- சுதந்திர வீரர்களின் தியாகம்
- தேசியத் தலைவர்களின் கொள்கைகள்
- மந்திரவாள்
- முருகக் கடவுள்
சுதந்திர வீரர்களின் தியாகம்:
எந்த ஒரு செயலும் வெற்றி பெற்ற பிறகு அவ்வெற்றியைப் பாராட்டி விழா கொண்டாடுவது உலக இயல்பு. அவ்விழாவின்போது வெற்றிக்குக் காரணமான தேசபக்தர்களுக்கு வாழ்த்து கூறுதலும் பரிசளித்தலும் இயல்பான நிகழ்ச்சிகளாகும். இம்மரபையொட்டி இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக 1757 முதல் 1947 வரை போராடிய சுதந்திர வீரர்களின் தியாகச் செயல்களைப் பாராட்டி சுதந்திரத் திருநாளில் அவர்களுக்கு வாழ்த்துப்பாடும் நிலையும் தேசியக்கவிஞர்களிடம் இருந்ததை அறிய முடிகிறது. 1857-ஆம் ஆண்டில் வேகமுடன் வெள்ளையரை எதிர்த்து விடுதலைக்கு விதைவிதைத்த பகதூர்ஷா, ஜான்ஸிராணி, தாந்தியாதோபே, நானாசாகிப், அலிமுல்லாகான் போன்ற தளபதிகளுக்கும், அவர்கள் தலைமையில் இயங்கிய சிப்பாய்களுக்கும், 1802-இல் வேலூரில் கலகம் செய்து இறந்த சிப்பாய்களுக்கும், அதற்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து உயிர்துறந்த வீரபாண்டிய கட்டபொம்மன், மருதிருவர், ஊமைதுரை, போன்றவர்களுக்கும், பாரத அன்னையின் அடிமையை நீக்க ஆண்மையுடன் தியாகம் செய்த அனைவருக்கும் சுதந்திரம் பெற்ற இந்நாளில் வாழ்த்துக் கூறுவோம் எனப் பாடியுள்ளார் நாமக்கல் கவிஞர்(1).
வாளொன்று கரங்கொடுத்த மகாராஷ்டிரா திலகத்தையும், ஹோம்ரூல் கிளர்ச்சி மூலம் விடுதலைக்கு வித்திட்ட ஐரிஷ் வீராங்கனையாம் அன்னிபெசண்டையும், பஞ்சாப் படுகொலைக்கு பரிகாரம் தேட ‘சர்’ பட்டத்தைத் துறந்த தாகூரையும், சைமன் கமிசனை எதிர்த்து வீரமரணம் அடைந்த லாலா லஜபதிராயையும், தாயின் வெற்றிக்காக தமது உயிரைப் பலி கொடுத்த பகவத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களையும் சிறையில் தொழுநோய் பெற்ற சிவாவையும், சிறையில் செக்கிழுத்த சிதம்பரத்தையும், பாட்டினால் மக்களைத் தூண்டிய பாரதியையும், சித்திரஞ்சன்தாஸ், சீனிவாச ஐயங்கார், மோதிலால் நேரு போன்றவர்களையும் இச்சுதந்திர நாளில் மறக்காமல் போற்றுவோம் என்கிறார் குமாரசிவம்.
தேசியத் தலைவர்களின் கொள்கைகள்:
சுதந்திரத்திற்காக தியாகம் செய்த சுப்பிரமணிய சிவா, சுப்பிரமணிய பாரதியார், வ.வெ.சு.ஐயர், வ.உ.சிதம்பரனார், குமரன் வாஞ்சிநாதன், சத்தியமூர்த்தி போன்றவர்களின் தியாகச் செயல்களே இந்நாளில் நாம் அடைந்திருக்கும் விடுதலைக்கு காரணம் என்றும், அவர்களை மனமாற கும்பிட்டு நினைவு கூறவேண்டும் என்றும் பாடலின் மூலம் வேண்டுகோள் விடுக்கிறார் சுருளியாண்டிப் பாவலர்.
பண்டிட் ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், ராஜாஜி போன்றோர்களின் தொண்டுகளையும், தியாகச் செயல்களையும் பல மெட்டுக்களில் தேசியகீதமாக வெளிப்படுத்தி வாழ்த்து பாடுகிறார் நடராஜக் கவிராயர்.
தாதாபாய் நௌரோஜி, காந்தியடிகள் போன்ற தேசத்தலைவர்களின் தொண்டுகளே நாம் இன்று அடைந்திருக்கும் சுதந்திரத் திருநாள் என்ற ராய.சொக்கலிங்கம், என்.ஜி.ராமசாமி, பி.ஆர்.விசுவநாத சாஸ்திரி, நாமக்கல் கவிஞர்(2), கவிமணி போன்ற கவிஞர்களின் கவிதைகள் வெளிப்படுத்தியிருத்தலை நோக்கும்போது அவர்கள் தேசியத் தலைவர்களின் கொள்கைகளைப் பின்பற்றிச் செயல்பட்ட பாங்கு தெளிவாகிறது.
மந்திரவாள்:
சுதந்திரம் பெற்றும் பயன் இல்லை என்று கூறுபவர்களுக்கு கடின உழைப்பே சுதந்திரத்தின் முழுப்பயனையும் பெற வழியாகும். பூரண சுதந்திரம் கடவுள் ஒருவருக்குத்தான் உண்டு. மற்றவர்கள் எல்லாம் ஏதோ ஒரு நியதிக்குக் கட்டுப்பட்டே நடக்கவேண்டும்(3). பலகாலம் தவம்செய்து பெற்ற மந்திரவாளால் தன் உடலையே வெட்டிக்கொள்ளும் இயல்புடையவர்களே பெற்ற சுதந்திரத்தால் பயன் இல்லை என்பவர்கள் என்று உவமை மூலம் தெளிவுப்படுத்துகிறார் கவிமணி(4).
சுதந்திரத்தின் முழுப்பயனைப் பெறவேண்டுமானால் நெற்றியில் தினமும் வியர்வை விழ உழைக்கவேண்டும்(5). பாலைவனங்கள் சோலை வனங்களாகவும், தொழில் பெருகவும், தமிழ் வளர்ச்சி பெறவும், கதராடை உடுத்தவும், தேசபக்தி வளரவும், வேலையில்லாத் திண்டாட்டம் நீங்கவும், அஞ்சாத வீர உணர்வும், அகிம்சை தர்மமும் வளரவும், சாதி வேறுபாடு ஒழியவும்(6), பாரதநாடு பாரில் உயர்ந்திடவும் நாம் துறவிகளாய் உழைக்கவேண்டும். சுதந்திரத்தால் பயன் இல்லை என்று சோம்பேறிகளாய் கூவித் திரியும் மக்களுக்குச் சுதந்திரத்தின் பயனை பெற உழைக்கவேண்டும் என்பதை கவிதைகளால் வெளிப்படுத்தி அவர்களை இடித்துக் காட்டும் நிலையும் கவிஞர்களிடம் இருந்ததைக் காணமுடிகிறது.
முருகக் கடவுள்:
பெற்ற சுதந்திரம் பாதுகாக்கப்பட மக்களுக்கு அறிவுரை கூறும் நிலையும், கடவுளை வழிபடும் நிலையும் தேசியக் கவிஞர்களிடம் இருந்ததை அவர்களுடைய கவிதைகள் காட்டுகின்றன. சுதந்திரம் பெற்றுவிட்டோம் இனிமேல் அடிமை வாழ்வு இல்லை என்று அலட்சியமாக எண்ணக்கூடாது. சுதந்திரம் மீண்டும் பறி போகாமல் பாதுகாக்கப்படவேண்டும். வீரம் தழைத்து வெற்றி கிடைப்பதற்கும் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்கும், உலக நாயகியையும்(7), முருகனையும்(8) வேண்டுகிறார் கவிமணி.
அடுத்த வலைப்பதிவில் சுதந்திரமும் தேசியப் பாடல்களும் பற்றி மேலும் சில தகவல்களையும், இந்தியக் குடியரசும் தேசியப் பாடல்களும் பற்றியத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.321-322.
2. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.233-374.
3. தேசிய விநாயகம்பிள்ளை, கவிமணி உரைமணிகள், ப.92.
4. தேசிய விநாயகம்பிள்ளை, மலரும் மாலையும், ப.189.
5. தேசிய விநாயகம்பிள்ளை, மலரும் மாலையும், ப.190.
6. தேசிக விநாயகம்பிள்ளை, தே.வி.யின் கீர்த்தனங்கள், ப.90.
7. தேசிக விநாயகம்பிள்ளை, தே.வி.யின் கீர்த்தனங்கள், பக்.88-89.
8. தேசிக விநாயகம்பிள்ளை, மலரும் மாலையும், ப.8.
Sponsorship





0 கருத்துகள்