உலகப் பொதுமறை பகுதி 10: அறத்துப்பால் காட்டும் இல்லறநெறி கூறும் கருத்தில் ஒழுக்கம், பிறர் மனைவியை விரும்பாமை மற்றும் பொறுமை

அறத்துப்பால் காட்டும் இல்லறநெறி - ஒழுக்கம், பிறர் மனைவியை விரும்பாமை மற்றும் பொறுமை

தனக்கு பிறர் செய்த நன்மையை மறவாமையே நன்றி மறவாமை பற்றியும் ,நடுவுநிலைமை என்பது நடுவாக நிற்றல் எனப் பொருள்படும் என்பது பற்றியும், தான் அடங்கி ஒழுகுதலும், தன்னை அடக்கி ஒழுகுதலுமாம். தன்னை அடக்குதல் என்பது தன் பொறிகள் முதலியவற்றை அடக்குதல் ஆகும் என்பது பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். அதன் தொடர்ச்சியாக அறத்துப்பால் காட்டும் இல்லறநெறியில் ஒழுக்கம் பற்றியும், பிறர் மனைவியை விரும்பாமை பற்றியும், பொறுமை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம் 

  • ஒழுக்கம் 
  • பிறர் மனைவியை விரும்பாமை
  • பொறுமை

ஒழுக்கம்: 

ஒழுக்கமுடைமை பற்றி நான்மணிக்கடிகை என்ற நூல் பின்வருமாறு கூறுகிறது. தீது இல்லாத நல்லொழுக்கம் செல்வத்தைப் போன்றது ஆகும் என்பதை 

"தீது ஒக்கும் தீதுஇல் ஒழுக்கம்."

என்ற அடிகளால் அறியலாம். மேலும், நல்லொழுக்கம் கைவிட்டால் குலமே கெட்டுப் போகும் என்பதை

".................................. குலம் தீது

கொள்கை அறிந்த கடை."

என்ற நான்மணிக்கடிகையால் அறியலாம். 

ஒழுக்கமுடைமை பற்றி பழமொழி பின்வருமாறு கூறுகிறது. தொடரும் மரபினராகவும், புகழோடு விளங்குபவராகவும், பழைய குடியில் பிறந்தவராகவும் உள்ள ஒருவர், தங்கள் குலத்திற்குரிய ஒழுக்கத்திற்கு உரியவராகவும் வாழ்வது......

பசுவின் மணக்கும் நெய்யில், பசுவின் தூய பாலைக் கலந்தமை போன்று இன்பம் தருவதாகும் என்பதை

"விழுத் தொடையர் ஆகி விளங்கித், தொல்வந்தார்

ஒழுங்கு உடையர் ஆகி ஒழுகல் - பழத்தெங்கு 

செய்த்தலை வீழும் புனல் ஊர - அஃதன்றோ 

நெய்த்தலைப்பால் உக்குவிடல்."

என்ற செய்யுளால் அறியலாம். ஒழுக்கம் எல்லோருக்கும் சிறப்பினைத் தருதலான் அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும்.

இருக்கின்ற அறங்கள் எல்லாவற்றிலும் சிறந்த அறமாகக் கருதப்படுவது ஒழுக்கமே என்பதால் அதனை எப்படி வருந்தியும் காக்க வேண்டும். தான் கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணங் கெடாமல் மீண்டும் கற்றுக் கொள்ளலாம். ஒழுக்கத்தினின்று தவறினால் பிறப்பின் சிறப்புக் கெடும். அழுக்காறு உடையான் மாட்டு ஆக்கம் இல்லாதாற் போல ஒழுக்கம் இல்லாதவன் மாட்டு உயர்ச்சி இல்லை. ஒருவனுக்கு நல்லொழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும். தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும் என்பதை 

"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் 

என்றும் இடும்பைத் தரும்."

என்ற குறளால் அறியலாம்.

பிறர் மனைவியை விரும்பாமை: 

பிறனது மனைவியை விரும்பாமையே பிறர் மனைவியை நாடாமை எனப்படும். இல்லத்தில் இருந்து கொண்டு தீங்கினைச் செய்கின்றவள் கணவனுக்கு எமனாவாள். கொண்ட கணவரோடு ஒன்றுபட்டு வாழ்தலே பெண்களுக்கு நல்ல செயலாகும். நற்பண்புடைய பெண், காவல் இல்லாவிடினும் கற்பொழுக்கத்தினின்று சிறிதும் தவறமாட்டாள். நற்பண்பில்லாத பெண் எவ்வளவு காவல் இருந்தாலும் தான் விரும்பியவாறே கற்பிழந்து நடப்பாள் என்பதை 

"பட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள்; காப்பினும் 

பெட்டாங் கொழுகும் பிணையிலி;" 

என்ற அடிகளால் அறியலாம்.

பண்புடைய மனைவி இல்லாத வீடுபாழ் மனையாகிவிடும் என்கிறது நான்மணிக்கடிகை. உலகத்தில் அறமும் பொருளுமாகிய இரண்டையும் ஆய்ந்து அறிந்தவரிடம், பிறன் பொருளாகிய மனைவியை விரும்பும் அறியாமை இல்லை. தன்மீது ஐயப்படாத ஒருவனுடைய மனைவியை விரும்பி வாழ முயல்பவர் இவ்வுலகில் உயிர்நீங்கிய உடம்பினரே ஆவர். காமம் காரணமாகப் பாவத்தின் கண் நின்ற எல்லாருள்ளும் பிறன் இல்லாளைக் காதலித்து அவன் வாயிற்கட் சென்று நின்றார் போலப் பேதையாரில்லை. எளிதாக அடையாளம் என எண்ணிப் பிறன்மனை புகுபவன், எப்போதும் நீங்காது நிலைத்து நிற்கும் அவலத்தை அடைவான். இதனை,

"எளிதென இல்இறப்பான் எய்துமெஞ் ஞான்றும் 

விளியாது நிற்கும் பழி."

என்ற குறளால் அறியலாம்.

அறனாகிய இயல்போடு கூடி இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான் பிறனுக்குரிமை பூண்டு அவனுடைய இயல்பின் கண்ணே நிற்பாளது பெண் தன்மையை விரும்பாதவன். கடல் சூழ்ந்த உலகின்கண் பிறன்மனைவியின் தோளினைச் சேராதவரே எல்லா நலங்களுக்கும் உரியவர் எனப்படுவார். பிறன் மனைவியை விரும்புபவரிடம் அறம், புகழ், நட்பு, பெருமை என்ற இந்நான்கும் சேரமாட்டா. மற்றவர் பகை, பழி, பாவம், அச்சம் என்று சொல்லப்பட்ட நான்கும் பிறன் மனைவியை விரும்புபவரிடத்து சேரும் என்பதை

"அறம்புகழ் கேண்மை பெருமை இந் நான்கும் 

பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா - பிறன் தாரம்

நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம் என்று 

அச்சத்தோடு இந்நாற் பொருள்."

என்ற நாலடியார் செய்யுளால் அறியலாம்.

பொறுமை:

பொறுமை என்பது மனித இனத்திற்கே சிறந்த ஒழுக்கமாகும். மனிதன் பொறுமையாக செயல்பட்டான் என்றால் அவன் விண்ணையும் அடைவான். தன்னை தோண்டுகின்றவரையும் தாங்கிக் கொள்ளும் நிலத்தைப்போலத் தன்னை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம் எனப்படும். பிறர் செய்த தீமையை எப்பொழுதும் பொறுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப் பொறுத்துக் கொள்வதை விட அதனை மறந்துவிடல் மிகநன்று. பிறன் தமக்கு தீங்கு செய்ததை பொறுக்காமல் தண்டித்தவரைச் சான்றோர் பொருட்டாக மதியார். அதனைப் பொறுத்தாரைப் பொன்போற் பொதித்து கொள்வர் என்பதை 

"ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் 

பொறுத்தாரைப் பொன்போற் பொதித்து."

என்ற குறளால் அறியலாம். 

மறுமையுள் வறுமையாவது, விருந்தினரைப் பேணாமல் விடுதலே, வலிமையுள் வலிமையாவது, அறிவிலார் செய்யுந் தீமையைப் பொறுத்தல் என்கிறார் வள்ளுவர். தமக்கு தீங்கு செய்தவனை தண்டித்தவர்க்கு, அவ்வொருநாளே இன்பம் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாகும். தீயோர் கூறுகின்ற துன்பந்தரும் சொற்களைப் பொறுத்துக் கொண்டோர், பற்றினைத் துறந்த தீயோரை விடவும் மிகவும் மேலானவர் . தமக்கு நிகர் இல்லாதவர் கீழான நல்ல தன்மையற்ற சொற்களச் சொன்னால், பெரியோர் அதனைப் பொறுத்துக் கொள்ளுதல் தக்கதாகும். அவ்வாறு பொறுத்துக் கொள்ளாமையை, கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தில் உள்ளவர் புகழுக்கு காரணமாக என்னமாட்டார். பழிக்குரியதாக என்னுவர் என்பதை 

"நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது 

தாரித் திருத்தல் தகுமிதற் - றோரும்

புகழ்மையாக கொள்ளாது பொங்குநீர் ஞாலம் 

சமழ்மையாக் கொண்டு விடும்."

என்ற பாடலால் அறியலாம். 

அடுத்த வலைப்பதிவில் அறத்துப்பால் காட்டும் இல்லறநெறியில் பொறாமை இல்லாமை பற்றியும், பிறர் பொருள் கவராமை பற்றியும், புறம் கூறாமை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்



Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication

கருத்துரையிடுக

0 கருத்துகள்