நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - கவிதை பற்றிய கருத்துக்கள்
தமிழகத்தில் மேடைப் பேச்சுக்கள், நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள், பத்திரிகைகள் ஆகியவற்றால் நாட்டுப்பற்று வளர்ச்சியடைந்த முறையை அறிந்தோம். அவைகள் வளர்ச்சியடைவதற்கு தலைவர்களும், நாடக ஆசிரியர்களும், நடிகர்களும், நடிகைகளும், கவிஞர்களும் எவ்வாறு தூண்டுதலாக இருந்தனர் என்பதையும், அவர்களால் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் எவ்வாறு தமிழக மக்களிடையே பரவின என்பதனையும் முந்தைய வலைப்பதிவுகளில் அறிந்தோம். இனிவரும் வலைப்பதிவுகளில் எந்தெந்த அரசியல் பின்னணியில் அப்பாடல்கள் மக்களிடையே எத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தின என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- கவிதை பற்றிய கருத்துக்கள்
- உண்மைக் கவிஞன்
- கவிதை தோன்றுவதற்கான சூழல்
கவிதை பற்றிய கருத்துக்கள்:
கவிதை என்பது காலம், இடம், சூழல் போன்ற இயற்கை சக்திகளுக்கு ஏற்ப கவிஞனிடத்தில் தோன்றுவதாகும். அதனை எழுதுவது என்பது உரைநடை எழுதுவது போல் எளிதன்று(1). நினைத்தவுடன் அனைவரும் பாடக்கூடிய ஒன்றன்று, அதற்குக் கவிஞனிடத்தில் உணர்ச்சி ஏற்படவேண்டும். அவ்வுணர்வே கவிதையாக வெளிப்படும். தேசபக்தியில் ஈடுபட்ட கவிஞன் உள்ளத்திலிருந்து தேசபக்திக் கவிதைளும், சமுதாயச் சீர்திருத்தம் பெரிதெனக் கருதும் கவிஞன் உள்ளத்திலிருந்து சமுதாயச் சீர்திருத்தக் கவிதைகளும், கடவுள் பக்தியில் ஈடுபாடு கொண்ட கவிஞன் உள்ளத்திலிருந்து பக்திக் கவிதைகளும் மலர்ச்சியடைகின்றன. இவ்வாறு உள்ளத்தில் உள்ள உணர்வுகளே கவிதையாக உருப்பெறுகின்றன(2).
உண்மைக் கவிஞன்:
தூய, உண்மையான, தன்னலமற்ற தேசபக்தி கொண்ட உள்ளத்திலிருந்து தேசபக்திக் கவிதைகள் தோன்றுகின்றன. தன்புகழ் இவ்வுலகில் நிலைபெற வேண்டும் என்பதற்காகவும், தன் புலமை வெளிப்படவேண்டும் என்பதற்காகவும், உண்மைக் கவிஞன் கவிதைகளை எழுதமாட்டான். உண்மைக் கவிஞன் தன் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்த துடித்துக்கொண்டிருப்பான். தான் பெற்ற இவ்வுணர்வுகளை அனைத்து மக்களும் பெறவேண்டும் என்று கருதுவான்.
“நம் முன்னே தூங்கிக் கொண்டிருக்கும் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும் சாமர்த்தியம் எவனிடம் இருக்கிறதோ அவன் தான் கவி. எல்லாக் கவிகளுடைய ஆதிக்கமும் எல்லோர் மீதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஏனென்றால் எல்லோரிடத்திலும் எல்லா நல்லுணர்ச்சிகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை” என்கிறார் காந்தியடிகள்(3).
கவிதை தோன்றுவதற்கான சூழல்:
கவிஞனும் சூழ்நிலையும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத தன்மையன. சூழ்நிலை மாறினால் கவிஞனின் மன உணர்வுகளும் அதற்கேற்ப மாறுபடும். அம்மாற்றம் கவிதையின் உருவம், உள்ளடக்கம், உத்தி போன்ற கவிதைக் கூறுகளையும் மாற்றும். எனவே சூழ்நிலை கவிதை தோன்றுவதற்கு அடிப்படைக் காரணியாக அமைகிறது.
“கவிஞன் எந்தப்பொருள் பற்றிக் கவிதை எழுதுகிறானோ அந்தப் பொருள் பற்றி முழு அறிவைப் பெற்று அதனோடு தானும் ஒன்றியிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், எந்தவித அனுபவ உணர்வும் இன்றிச் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எழுதும் பாட்டு சுவைக்குதவாது. வீரம்மிக்க ஒரு போர் வீரனைப் பற்றி பாடவேண்டுமானால் பாடும் புலவன் வீரனாக இருந்தாலன்றி பாடமுடியாது”(5) என்று கூறப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் தேசபக்தியில் ஈடுபட்ட பங்கிம் சந்திரர், தாகூர், சுப்பிரமணிய பாரதி போன்றோர்களின் உணர்வுகள் தேசபக்திக் கவிதைகளை உருவாக்கின.
அடுத்த வலைப்பதிவில் கவிதையின் உள்ளடக்கம் உருவான நிலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. ந. பிச்சமுத்து, படைப்பிலக்கியம், ப.72.
2. தேசிக விநாயகம்பிள்ளை, மலரும் மாலையும், பக்.17-18.
3. மகாத்மாகாந்தி, என் சரிதம், ப.80.
4. சாமிநாதசர்மா, நான் கண்ட நால்வர், ப.231.
5. ந. சஞ்சீவி, சிலப்பதிகார விருந்து, ப.139.
6. மு.சண்முகம்பிள்ளை. கவிமணி கவிதை, பக்.23-24.
Sponsorship
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication



0 கருத்துகள்