உலகப் பொதுமறை பகுதி 8: அறத்துப்பால் காட்டும் இல்லறநெறி - அன்பின் வாழ்க்கை, விருந்தினரை உபசரித்தல் மற்றும் இனியவை பேசுதல்

 

அறத்துப்பால் காட்டும் இல்லறநெறி - அன்பின் வாழ்க்கை, விருந்தினரை உபசரித்தல் மற்றும் இனியவை பேசுதல்

முறையான இல்லற ஒழுக்கம் சிறந்த துறவறத்தைப் போன்றதாகும் என்கிறது நான்மணிக்கடிகை. மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செயல்களை உடையனாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கை உடையாள் சிறந்த வாழ்க்கைத் துணை. செல்வங்கள் பல பெற்று இருந்தாலும், குழந்தைச் செல்வமே சிறப்புடையது என்பன பற்றி முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம்.அதன் தொடர்ச்சியாக அன்பின் வாழ்க்கை பற்றியும், விருந்தினரை உபசரித்தல் பற்றியும், இனியவை பேசுதல் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பொருளடக்கம் 

  • அன்பின் வாழ்க்கை 
  • விருந்தினரை உபசரித்தல் 
  • இனியவை பேசுதல்

அன்பின் வாழ்க்கை: 

மனித வாழ்க்கைக்கு சிறப்புடைய அன்பு தேவை. அன்பில்லா வாழ்க்கை பயனில்லா வாழ்க்கை ஆகிவிடும். அன்புடையார் பண்புடையவர்களாக இருப்பர். பண்புடையவர் உலக வாழ்க்கையை செவ்வனே செய்வர். தொடர்புடையார் துன்பம் கான, உள்ளத்தன்பை அவர் சிந்தும் கண்ணீரே புலப்படுத்தும் என்பதால் அன்புக்கும் அடைதாழ் உளதோ.அன்பென்னும் பண்பு, விருப்பம் என்னும் தகுதியை உண்டாக்கும். அந்த தகுதியை அளப்பருஞ் சிறப்புடைய நட்பை உண்டாக்கும். நன்மை செய்வதற்கு மட்டுமே அறம் துணை செய்யும் என்பவர் அறியாதவர் ஆவார். தீமையை ஒழிப்பதற்கும் அந்த அறம் துணை செய்யும். உடலில் எலும்பு இல்லாத புழுவினை வெயில் வருத்துவதுபோல, உள்ளத்தில் அன்பு இல்லாத மனித உயிரை அறம் வருத்தும். அன்பாகிய பண்பு உள்ளத்தில் இல்லாத மனித வாழ்க்கை, கொடிய பாலை நிலத்தில் பட்டுப்போன மரம் தளிர்த்ததைப் போன்றது. 

உயிர் வாழ்க்கை அன்பின் வழியில் இயங்குவது. அந்த அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்திய உடம்பு என்பதை, 

"அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க் 

  கென்புதோல் போர்த்த உடம்பு." 

என்ற குறளால் அறியலாம். 

உடம்பின் உள் உறுப்பு ஆகிய அன்பு இல்லாதவர்க்கு, உடம்பின் வெளி உறுப்புகளால் என்ன பயன்தான் விளைய இயலும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். தொடர்ந்து வந்து பல பிறவிகளிலும் எல்லா உயிர்களிடத்தும் அன்பு பூண்டு தம் உடல், பொருள், ஆவி அனைத்தும் வழங்கினார் கருணை வள்ளல் கவுதம புத்தர். 

அன்புக்கு மேல் தெய்வம் இல்லை. எங்குமாய் என்றுமாய் எல்லாமாய்ப் பரவியுள்ள இறைவேறு, அன்பு வேறு என்று சொல்ல முடியாது. உண்மையில், இருப்பதெல்லாம் அன்பு எனும் சக்தி ஒன்றேயாதலால் அன்புடன் ஒன்றென உணர்வதுதான் முத்தியும் விடுதலையும் என்று கூறியவர் இராமதீர்தர். 

விருந்தினரை உபசரித்தல்: 

விருந்தோம்பல் பற்றி பழமொழி நானூறு கூறுவதாவது, தம்மைப் பாதுகாப்பதாக எண்ணித் தம்மிடம் வந்து சேர்ந்தவரைத் தமக்குத் தொடர்பு இல்லாதவர் என நன்கு அறிந்திருந்தாலும் வந்து சேர்ந்தவர்தம் வறுமையைப் போக்க வேண்டும். உணவு கொடுக்கும் அறமே உண்மையானது. மற்றது பொய்யானது. அதுபோல தம்மை நம்பி வந்தவரைக் காப்பதே உண்மையான அறம். இதனை 

"சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்து ஒழுக்கப்பட்டவர் 

  தீர்ந்தாராக் கொண்டு தெளியினும் தேர்ந்தவர்க்குச் 

 செல்லாமை காணாக்கால் செல்லும்வாய் என உண்டாம் 

  எல்லாம் பொய் அட்டுஉளனே வாய்." 

என்ற பழமொழி செய்யுளால் அறியலாம். இதையே நான்மணிக்கடிகை கூறும்போது வறியவர்களுக்கு உணவு அளிப்பதனால் ஒருவனது குடும்பம் பெருமை அடையும் என்று கூறுகிறது. 

விருந்தினர் வீட்டின் புறத்திருக்க தான் மட்டும் தனித்துண்ணல், சாவாத மருந்தாகிய அமிழ்தமாயினும் விரும்பத்தகாத ஒன்று. முகம் இனிதாய் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கன் உளமகிழ்ச்சியுடன் திருமகள் வாழ்வாள். நாள்தோறும் வருகின்ற விருந்தினரை வரவேற்றுப் போற்றுபவனுடைய வாழ்க்கை, எந்நாளும் வறுமை வயப்பட்டுக் கெடுவதில்லை. 

விருந்தோம்பல் எனும் வேள்விப்பயனை அடையாதவர் பொருளை மிக விரும்பிப் பாதுகாத்துப் பயனடையாமல் போனோமே என வருந்தவர். செல்வச் செழிப்புள்ள நிலையில் வறுமை என்பது, விருந்தோம்பல் செய்யாத அறியாமையே, அவ்வறியாமை அறிவிலாரிடம் உளது. விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்னவளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று, அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு. வந்து செல்லும் விருந்தினரைப் போற்றி வரும் விருந்தினரைப் போற்றக் காத்திருப்பவன் விண்ணவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான். 

இனியவை பேசுதல்:

மனத்தின்கண் உவகையை வெளிப்படுத்த இனிய சொற்களைச் சொல்லுதல். இது விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதது. இனிமை அன்பு கலந்ததாய், வஞ்சனை அற்றதாய் விளங்கும். மெய்ப்பொருள் கண்டாரின் வாய்ச்சொல்லே இன்சொல் எனப்படும். எவரிடத்திலும் இன்பம் பயக்குமாறு இன்சொல் பேசுகின்றவர்க்குத் துன்பம் பயக்கும் வறுமையானது இல்லாமல் போய்விடும் என்பதை 

"துன்புறூஉம் தூவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் 

  இன்புறூஉம் இன்சொ லவர்க்கு." 

என்ற குறளால் புலப்படுகிறது. 

நன்மையானவற்றை ஆராய்ந்து, இனிய சொற்களைக் கூறினால், தீமையானவை சிறுகச் சிறுகக் குறைந்து, அறமானது பெருகி நிறையும். அடக்கம் உடையவனாகவும், இன்சொல் பேசுபவனாகவும் ஆதலே ஒருவனுக்கு அழகு தரும் அணியாகும். பிறயாவும் அணிகள் அல்ல. பிறர் கூறும் இன்சொல் தனக்கின்பம் பயத்தலை அனுபவித்தறிகின்றவன், எதற்காகத் துன்பம் தரும் வலியசொல்லை வழங்குதல் வேண்டும். 

அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக் குளவாயிருக்க அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல், இனிய கனியிருக்க அவற்றை நுகராது இன்னாத காய்களை தின்பதற்கு ஒப்பாகும். துன்பம் தரக்கூடிய தன்மையினின்றும் நீங்கிய இனிய சொல்லானது, மண்ணுலக வாழ்விலும், விண்ணுலக வாழ்விலும் இன்பம் தரும். பிறர்க்கு நற்பயனைத் தந்து, பண்பிலிருந்து ஒரு சிறிதும் நீங்காத சொல்லானது, உடையவனுக்கு இன்பமுடன் நன்மையையும் பயக்கும்.

அடுத்த வலைப்பதிவில் நன்றி மறவாமை பற்றியும், நடுவுநிலைக் கொள்கை பற்றியும், அடக்கப் பண்பு பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி !

நேசமுடன்,

அன்பழகி பச்சியப்பன்


Sponsorship

This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication

கருத்துரையிடுக

0 கருத்துகள்