நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் பாடல்கள் தோன்றிய அரசியல் பின்னணி - சட்டமறுப்பு இயக்கமும் தேசியப் பாடல்களின் தோற்றமும், வட்டமேஜை மாநாடுகளும் தேசியப் பாடல்களின் தோற்றமும்
காந்தியடிகள் சமுதாயச் சீர்கேடுகள் விடுதலைக்குத் தடையாக இருப்பதை உணர்ந்து நிர்மானத் திட்டங்களை மக்களிடையே புகுத்தி மக்களை விழிப்படைச் செய்ய முயன்றார் என்பது பற்றியும், காந்தியினுடைய செல்வாக்கு மீண்டும் உச்சநிலையை அடைய சைமன் கமிசன் தூண்டுதலாக அமைந்தது என்பது பற்றியும் முந்தைய வலைப்பதிவில் தெரிந்து கொண்டோம். மேலும் அதன் தொடர்ச்சியாக சட்டமறுப்பு இயக்கம் பற்றியும், இரண்டாம் வட்டமேஜை மாநாடு பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
பொருளடக்கம்
- பூரணச் சுதந்திரம்
- தேசிய வாரம்
- சமரச முயற்சி
- இரண்டாம் வட்டமேஜை மாநாடு
பூரணச் சுதந்திரம் :
1929-இல் ஜவஹர்லால் நேருவின் தலைமையில் லாகூரில் கூடிய காங்கிரஸ் பூரணச் சுதந்திர கோரிக்கை தீர்மானத்தை நிறைவேற்றிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பூரணச் சுதந்திர தினம் கொணடாடப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் வந்தவர்களையும் போனவர்களையும் நம்பி இனிமேல் ஏமாறாமல் ‘இத்தினம் முதல், இந்திய நாடு நமது என்று கருதுவோம்’ என்ற பூரணச் சுதந்திர நாளை வெளிப்படுத்துவதாக ‘என்னுடைய நாடு’(1) என்ற பாடலை நாமக்கல் கவிஞர் பாடியுள்ளார்.
1930-இல் நடந்த சட்டமறுப்புப் போரை சத்தியப் போராகவே நடத்தவேண்டும் என்பது காந்தியடிகளின் எண்ணம். வன்முறைப் போர் அழிவைத் தரவல்லது என்பதை உணர்ந்த காந்தியக் கவிஞர்கள், சட்டமறுப்புப் போரை காந்தியடிகள் சத்தியப் போராகவே நடத்துகிறார். அதில் அனைவரும் வந்து சேருங்கள் என்பதை கவிதைகளினால் வெளிப்படுத்தியுள்ளனர். உப்புச் சட்டத்தை மறுக்கக் காந்தியடிகள் தண்டி நோக்கிக் கால்நடையாகப் பயணம் செய்தபோது வழிநெடுகிலும் பல வீர உரைகளை ஆற்றிச் சென்றார். அவ்வீர உரைகள், ‘சங்கநாதம் கேட்குது’ என்ற பாடலாக நாமக்கல் கவிஞர் பாடியுள்ளார். அப்பாடல் காந்தியின் சங்கநாதம் வழிநெடுகிலும் கேட்கிறது. அதிலிருக்கும் நன்மையை ஆராயாமல் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்க என அழைப்பு விடுப்பதாக அமைந்துள்ளது(2). காந்தியடிகளின் உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கும்போது ‘;சத்தியப் போர்’ என்ற தலைப்புடைய ‘கத்தியின்றி ரத்தமின்றி’ எனத் தொடங்கும் பாடலையும் பாடியுள்ளார். இப்பாடல் ராஜகோபாலாச்சாரியார் தலைமையில் வேதாரண்யத்திற்குப் புறப்பட்ட சத்தியாக்கிரக சேனைக்கு வழிநடைப் பாட்டாகவும் அமைந்தது(3).
தேசிய வாரம்:
காந்தியடிகள் மேற்கொண்ட உப்பச் சத்தியாக்கிரகத்தின் பிரதிபலிப்பு தமிழ்நாட்டில் சென்னை, வேதாரண்யம் போன்ற இடங்களில் நடைபெற்றது. 1930-இல் இராஜாஜியின் தலைமையில் திருச்சியிலிருந்து புறப்பட்ட வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிரகத்தின் செயல்களை உப்புச் சத்தியாக்கிரக உரிமை கீதம், தொண்டர்கள், ஸ்ரீமான் ராஜகோபலாச்சாரியார், தேசத்தொண்டு, தொண்டர்கள் பெருமை, உப்புப் போராட்டத்தில் தடியடித் தாண்டவம் போன்ற பாடல்களில் ‘வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிரகமெனும் காங்கிரஸ் பாட்டு’ என்ற நூலை நடராஜப் பிள்ளை வெளிப்படுத்தியுள்ளார்.
1930-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் நாள் காந்தியடிகள் உப்புச் சட்டத்தை மீறி கடற்கரையில் உப்பு எடுத்தார். ஏப்ரல் 6 முதல் 13 வரையுள்ள ஒருவார காலத்தை மக்கள் தேசிய வாரமாகக் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியை நாமக்கல் கவிஞர் ‘தேசிய வாரம்’(4) என்ற பாடலாக வெளிப்படுத்தி மக்களைச் சிந்திக்க வைக்கிறார்.
சமரச முயற்சி:
உப்புச் சட்டத்தை மீறிய காந்தியடிகளை கைதுசெய்யப்பட்ட நிலையை ‘காந்திஜி தண்டி யாத்திரை’ என்ற பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார் சின்னசாமிப் பிள்ளை. உப்புச் சத்தியாக்கிரகத்தை மக்களிடையே பரப்பவேண்டும் என்ற உணர்வு கவிஞர்களிடத்தில் மேலோங்கி கவிதைகளாக மலர்ந்ததை தெளிவாகப் பார்க்கமுடிகிறது.
உப்புச் சத்தியாக்கிரக இயக்கம் வலுவடைந்த நிலையில் மக்களிடையே ஏற்பட்ட தீவிர உணர்ச்சி ஆங்கிலேயரால் கட்டுப்படுத்தாத நிலையை உருவாக்கியது. இந்நிலையில் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டும், மக்களிடையே ஏற்பட்ட உணர்வு அடக்கமுடியாத நிலையை அடைந்தது. இந்நிலையில சாப்புரு, ஜெயக்கர் போன்றோரின் முயற்சியால் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவசரச் சட்டங்களும், உப்புச்சட்டமும் ரத்து செய்யப்பட்டன. காந்தியும் இர்வினும் ஒன்றுகூடி காந்தி-இர்வின் ஒப்பந்தம் என்ற சமரச முயற்சியை மேற்கொண்டனர்(5). இந்நிகழ்ச்சியை ‘சமரச முயற்சி’ என்ற பாடலாக முகமது ரசூலும், ‘ஒப்பந்தம் ஒப்பந்தம் ஒப்பந்தமே’ என்ற நடராஜப்பிள்ளையும் புலப்படுத்தியுள்ளனர். காந்தியடிகளின் சமரச முயற்சி முஸ்லீம்களின் உள்ளங்களிலும் ஆறுதலை உண்டாக்கியதை உணரமுடிகிறது.
இரண்டாம் வட்டமேஜை மாநாடு:
காந்தி-இர்வின் ஒப்பந்தம் காந்தியடிகள் இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்ள தூண்டுதலாக அமைந்தது(6). அவர் வட்டமேஜை மாநாட்டிற்குச் சென்ற நிகழ்ச்சி கவிஞர்களின் உள்ளங்களில் வெளிப்பட்டிருக்கிறது. பாரதப் போருக்கு கண்ணன் தூது சென்றதைப் போல காந்தியடிகள் தூது சென்றுள்ளார் என்பதைப் பல மெட்டுகளுடன், ராக, தாள பல்லவியுடன் ‘மகாத்மா காந்தி லண்டன் தூது’ என்ற பாடலாக குற்றாலம்பிள்ளை வெளிப்படுத்திக்காட்டுகிறார். அவ்வாறு வட்டமேஜை மாநாட்டிற்கு சென்றவர்களின் நிலையை குறத்தியிடம் குறி கேட்பதாக ‘வட்டமேஜை மாநாடு’ என்ற பாடலாக தேசிக விநாயகம் பிள்ளையும் வெளிப்படுத்தியுள்ளார். காந்தியடிகள் மேற்கொண்ட விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகளை அவ்வப்போது கவிதைகளால் மக்களுக்கு அறிவிக்கும் நிலை அக்காலக் கவிஞர்களிடம் நிலவியதை உணரமுடிகிறது.
அடுத்த வலைப்பதிவில் வட்டமேஜை மாநாடுகளும் தேசியப் பாடல்களின் தோற்றமும் பற்றி மேலும் சில தகவல்களையும், மாநில சுயாட்சியும் தேசியப் பாடல்களும் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி !
நேசமுடன்,
அன்பழகி பச்சியப்பன்
அடிக்குறிப்புகள்
1. இராமலிங்கப்பிள்ளை. தேசியப் பாட்டுக்கள், ப.100.
2. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.112-114.
3. நாமக்கல் கவிஞர், என் கதை, பக்.287-288.
4. நாமக்கல் கவிஞர் பாடல்கள், பக்.140-141.
5. கா.அப்பாதுரை, இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு, ப.288.
6. Mahajan, Leaders of the Nationalist Movement, p.212.
Sponsorship




0 கருத்துகள்